புதன், 11 ஜூன், 2014


நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் தெய்வத்தின் துணையோடு நடைபெறுவதை அன்பர்கள் பலர் தமது அனுபவத்தால் அறிவார்கள். எனவேதான் துன்பங்களிருந்தும் அகால மரணங்களிளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இறைவனை நாம் வேண்டுகிறோம். பொழுது புலர்ந்ததும் நமக்கு இன்னொரு வாழ்நாள் தந்த ஈசனை வாழ்த்தி வணங்க வேண்டும். விடியலில் நீராடி, வெண்ணீற்றை மெய்யில் பூசி, திருக்கோயிலை அடைந்து, அலகிட்டு,மெழுக்கும் இட்டுப்,பூமாலைகள் மற்றும் இண்டை கட்டி அடியிணைக்குச் சார்த்தி, "சங்கரா , நீலகண்டா, சம்புவே, சந்திரசேகரா, கங்காதரா" .... எனப்பல நாமாக்களால் பரவிக் கைகள் தலை மீதுற, கண்களில் நீர்மல்க வழிபடும் அடியார் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வான் பரமேச்வரன். விடியற்காலத்தில் பொய்கையை அடைந்து, அதில் மூழ்கி நீராடுகையில் உன் கழலையே பாடுகின்றோம். நாங்கள் உனக்கு வழிவழியாக அடிமைசெய்யும் குடியில் பிறந்தவர்கள். உன் அருளால் மட்டுமே வாழ்பவர்கள். ஐயனே, தீயினைப் போன்று ஒளிரும் சிவந்த நிறம் கொண்டவனே, சிற்றிடையையும், அழகிய மைதீட்டிய கண்களையும் உடைய பெருமாட்டியின் மணவாளனே. எம்மை ஆட்கொண்டு அருளுவதும் உனக்கு ஒரு விளையாட்டே அன்றோ! நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா? எனவே எம்மை வருத்தாமலும் தண்டிக்காமலும் எம் பிழைக்கே இரங்கி அப்பிழைகளைப் பொறுத்துக் காப்பாற்றுவாயாக. இவ்வாறு இறைவனிடம் இத் திருவெம்பாவைப் பாடல் நமக்காகப் பரிந்து உரைப்பதுபோலத் தோன்றுகிறது. "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல் செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடம்கண் மடந்தை மணவாளா ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்." பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிற்றில் பருவத்தில் , மணலால் வீடு (சிற்றில்) கட்டும் சிறார்கள் எவ்வாறு வேண்டுவார்கள் தெரியுமா? " நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா? உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே? "சிற்றில் சிதையலே" என்று வேண்டுவதாகப் பாடல் அமைந்திருக்கும். இறைவனை நினையாமல் பொழுது போக்கி அவனைப் புறக்கணிப்பார்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவதானால் எத்தனை பேர் எஞ்சுவரோ தெரியாது. மழை அவன் தருவது. உணவும் அவன் தந்தது. செல்வமும் அவன் தந்தது. இப்படி எல்லாமே அவன் அருளால் மட்டுமே கிடைத்திருந்தும் நன்றி மறந்தவர்களாய் இருக்கிறோம். ஈச்வரனின் கோபத்திற்குப் பாத்திரர்கள் ஆகிறோம். அவன் கோபப்பட்டாலோ உலகம் தாங்காது. ஆகவே அவனைக் கோபிக்க வேண்டாம் என்று நமஸ்கரித்து வேண்டுகிறது ஸ்ரீ ருத்ரம். அதையே மாணிக்கவாசகரின் திருவாசகமும் " எய்யாமல் காப்பாய்" என்று பிரார்த்திக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக