செவ்வாய், 24 ஜூன், 2014


அகப்பேய்ச் சித்தர் பாடல் மனமாகிய பேயை வென்ற சித்தர் ஆதலின் இவர் அகப்பேய் சித்தர் என்றழைக்கப்படுகின்றார். அகம் + பேய் + சித்தர். இந்த அகப்பேய் சித்தர் பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு. நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து வாழ்க்கை நடத்தினார். வணிகத்தின் பொருட்டுத் தாம் செல்லுமிடங்களிலெல்லாம் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கின்றார். மேலுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாகச் சொல்லிக்கொள்ளும் அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது. ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் இன்பமயமான நித்திய வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். மனமாகிய அகப்பேயை அடக்கி வெற்றி கண்டார்க்கு சிவமாகிய இறைவன் காட்சி தருவார். துன்பமில்லா இன்பநிலையை அடையலாம் என்ற உண்மையைத் தம் பாடல்களில் பாடி வைத்தார். இவர் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள். பாடல்களையெல்லாம் படிக்குந்தோறும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனது அடக்கம் காணுகிறது. ஆசைக்கு இல்லை, இல்லை ஆசையை அடக்குவதற்கு ஒரிரண்டு பாடல்களை இங்கு ஆய்வு செய்தோமானால் அவர் இறைவனைக் காணுவதற்குச் சொன்ன தத்துவங்களை முழுவதுமாக உணர்ந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா? இறைவனின் தாளை அடைவதற்கு அவர் கூறும் வழியைக் கேளுங்கள். “நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய் நாயகன் தாள் பெறவே நெஞ்சு மலையாதே - அகப்பேய் நீயொன்றுஞ் சொல்லாதே” அவனுக்கு இறைவனின் தாளை அடைய வேண்டும் என்பது ஆசை. அதற்காக என்ன செய்ய வேண்டும்? திருக்குறளைப் படித்துப் பார் என்கின்றனர் அறிஞர்கள். நான் கேட்டது இறைவனை அடைய வழி. நீங்கள் சொல்வதோ இவ்வுலக வாழ்க்கை வாழ்வதற்கான நெறி. வாழ்பவருக்குச் சொல்லவேண்டிய வழியை வாழ்ந்து முடித்து விட்டவனிடம் சொல்கிறீரே. ஐயப்பாடு நியாயம்தான். நீர் வாழ்ந்து முடித்து விட்டீரா? சரி அப்படியே இருக்கட்டும். நீர் வாழ்ந்து முடித்தவரென்றால் குறளின் நெறிகளிலேயே நீர் தேடிய வினாவுக்கு விடை கிடைத்திருக்குமே. புரியவில்லை,,,,,, இறைவனின் தாளை அடையும் மார்க்கங்களை வள்ளுவரே கடவுள் வாழ்த்தில் தெரிவித்திருக்கின்றாரே. கடவுள் வாழ்த்தில் இறைவனை அடையும் மார்க்கமா? திருக்குறள் அடிகளை அசை போட்டுப் பார்க்கின்றான். “கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்” தூய அறிவு வடிவான கடவுளின் திருவடிகளைத் தொழாதவன் கற்ற கல்வியினால் ஏதும் பயனில்லை என்கிறார். இறைவனின் திருவடிகளைத் தானே தொழச் சொல்கிறது. அதனை அடையும் மார்க்கம் எதனையும் கூறவில்லையே. அடுத்த குறளுக்குச் செல்கின்றான். “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” சரி, ஏற்றுக்கொள்வோம். அந்த மாணடி சேர வழி என்ன? விருப்பும் வெறுப்பும் இல்லாத ஆண்டவன் திருவடிகளைச் சேர்ந்தவர்க்குத் துன்பம் என்பது இல்லை. சரி, தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றியவர் தவிர மற்றையோரால் பாவக் கடலைக்கடக்க இயலாது. சரி, எண்குணத்தானின் திருவடிகளை வணங்காதவர்களின் தலை செயலிழந்த ஐம்பொறிகளைப் போலப் பயனற்றதாகும். சரி, இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர்களால் பிறவிக்கடலைக் கடக்க முடியாது. எல்லாக் கருத்துக்களும் சரி. அந்த இறைவனின் திருவடியை அடையும் மார்க்கம்தான் என்ன? இறைவனின் திருவடிகளின் பெருமைகளை இவ்வளவு நுண்மையாக உணர்த்திய திருவள்ளுவர் அத்திருவடிகளை அடையும் மார்க்கத்தைச் சொல்லாமலா இருந்திருப்பார். “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” ஐம்பொறிகளால் விளையும் ஆசைகளை ஒழித்துக் கடவுளின் உண்மை நெறியில் நின்றவர் நிலையான பெருவாழ்வு வாழ்வார்கள். அதாவது நித்தியமான பெருவாழ்வாகிய இறைவனின் தாளை அடைவார்கள். திருக்குறளின் கடவுள் வாழ்த்து ஒட்டுமொத்த அதிகார கருத்துக்களையும் இரண்டே வரிகளில் அடக்கிவிடுகின்றார் நாயனார். அதாவது அகப்பேய் சித்தர் நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய் நாயகன்றாள் பெறவே நெஞ்சு மலையாதே - அகப்பேய் நீயொன்றும் சொல்லாதே” இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தைக் கேட்ட அந்த இளைஞனுக்கு மனம் தன் மனம் போனபடியெல்லாம் யோசனை கூறுகின்றது. “வானுலக வாழ்க்கையினை நாடி இன்ப வாழ்க்கையை பெண்கள் இன்பவாழ்க்கையை இழந்தவர்கள் கோடி” என்று மனம் பெண்ணாசையைத் தூண்டுகிறது. பெண்ணாசையால் முக்தியை அடைய முடியுமோ? இல்லை என்று மறுக்கிறது இன்னொரு மனம். மதுவை மாந்திக் களிப்பதால் இறைவனின் திருவடிகள் காட்சி தருமோ? அந்த காட்சிதான் இறைமையோ? வெளி மனத்தின் விளைவுக்கு உன் மனம் இல்லை என்ற பதிலைத் தருகிறது. மது, மாது, சூது இவைகள் இறைவனின் தாளை உணர்த்தாவிடில் வேறு எதுதான் இறைவனின் தாளை அடையும் மார்க்கம். சிந்தித்த உள் மனத்தை வெளி மனம் அடக்குகிறது. மனமே, நான் சொல்வதைக் கேள். மதுவும், மாதுவும், சூதுவும்தான் இறைவனை அடையும் மார்க்கங்கள். மனமே (வெளி மனமே) நீ அலையாதே. இவையெல்லாம் நீ அனுபவிக்கத் துடிக்கும் ஆசைகள். இந்த ஆசைகளெல்லாம் உண்மையான இன்பத்தை; இறைமையை உனக்கு உணர்த்த மாட்டா. ஆகவே என்னைக் குழப்பாமல் உண்மையாகவே இறைவனின் தாளைஅடையும் மார்க்கத்தைச் சொல் என்று மற்றுமொரு வழியை கேட்க, அப்படியானால் நஞ்சுண்டு இறந்து விடு, நீ நேரே இறைவனைக் காணலாம். என்ன உளறுகிறாய்? இறைவன் அன்பு வடிவானவர். உயிரைப் பலி கொடுத்துதான் அவரை அடைய முடியுமென்பது வீண் பிதற்றல். மரணம் என்பது இறைவன் வகுத்தது. அது தானாகத்தான் வரவேண்டுமே ஒழிய நாமாகத் தேடிச் செல்லக்கூடாது. “சரி வேண்டாம்; இப்படி செய்யலாமா? என்று இன்னுமொரு மார்க்கத்தை உபதேசிக்க வருகிறது வெளிமனம். என்னவென்று கேட்டு உபயோகமற்ற வெளிமனதின் ஆலோசனைகளைக் கேட்க உள்மனம் தயாராக இல்லை. “அகப்பேயே, இனி நீயொன்றும் சொல்லாதே. உண்மை ஞானமார்க்கத்தை நானே உணர்ந்து கொள்கிறேன்” என்று மனப்போராட்டத்திற்கு முடிவு கட்டுகிறான் அதே இளைஞன். இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தை அவனுக்கு உள் மனம் உணர்த்தியதா? “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன்அடி சேரா தார்” இக்குறளுக்கு விளக்கமாக 56வது கண்ணியில், “பிறவிதீர வென்றால் - அகப்பேய் பேதகம் பண்ணாதே துறவியானவர்கள் - அகப்பேய் சும்மாவிருப்பார்கள்” என்று பிறவி தீரும் மார்க்கத்தை உபதேசிக்கிறார் அகப்பேய் சித்தர். இறைவனை அடையச் சும்மா இருந்துவிட்டால் போதுமா? வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்ற உள்மனக் கேள்விக்கு அகப்பேயே, “தன்னை யறிய வேணும் சாராமற் சாரவேணும் என்று விடையளிக்கிறார். தன்னையறிவதென்றால் என்ன? நான் என்ற அகந்தையை நீக்க வேண்டும். நான் என்பது உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை நீக்க வேண்டும். உயிர் என்றால் அவ்வுடலின் அநித்திய தன்மையை உணர்ந்து அடங்க வேண்டும். பஞ்சபூதக் கூறுகளை இந்த உடல் ஒவ்வொன்றுமே அழியக்கூடியது என்று உணர வேண்டும். அழியக்கூடிய இந்த உடம்பின் சுகத்திற்காக இன்னொரு உயிரை / உடம்பை வருத்த வேண்டுமா? அப்படி அந்த உயிர் படும் அவஸ்தைகள் நிரந்தரமல்லவே. அதனால் பாவம், பழிகள் நிரந்தரமாக அல்லவா நம்மை வந்தடையும். ஆகையால் உன்னை நீ அறிந்து கொள் என்கிறார் அகப்பேய். சரி என்னை நான் உணர்ந்துகொண்டால் மட்டும் பழி பாவங்கள் செய்யாமலிருந்திடுவேனோ என்று அசட்டுத்தனமாக கேட்கும் மனத்திடம் அகப்பேயே, “உன்னை அறிந்தக்கால் ஒன்றையும் சேராயே” என்று விடையளித்துத் தன்னையறியும் மார்க்கத்தையும் அகப்பேய் அறிவிக்கின்றார். “உன்னை அறியும் வகைஉள்ளது சொல்வேனே” என்று கூறி, சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று யோக மார்க்கங்களை அறிவிக்கின்றார். சரியை என்பது கடவுளைக் கோவிலில் வைத்து வழிபடுதலான நெறி. கிரியை என்பது கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதலான நெறி. யோகம் என்பது சித்தர் வழிபாட்டு நெறி. இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் தன்னையறிந்து இறைவனை அறிந்து கொள்ள முடியுமோ என்ற வினாவுக்குச் சிரிப்பை விடையாகத் தருகின்றார் இந்த ஞானசித்தர். “சரியை ஆகாதே அகப்பேய் சா லோகங் கண்டாயே கிரியை செய்தாலும் அகப்பேய் கிட்டுவது ஒன்றுமில்லை யோகம் ஆகாதே அகப்பேய் உள்ளது கண்டக்கால் தேக ஞானமடி அகப்பேய் தேடாது சொன்னேனே” சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான உடற்பயிற்சி வழிபாட்டினாலும் போகமாகிய தியான மன வழிபாட்டினாலும் கூட இறையை இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக் காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண முடியும் போலும். நமக்குப் பிறவி என்பது இறைவன் அளித்தது. புள்ளாய், பூண்டாய், புழுவாய், விலங்காய் என்று பிறந்து மாண்டு, பிறந்து மாண்டு பிறவி என்பதே ஒரு தொடர்கதையாய் இருக்கும் நிலையில் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து வாழ்வதால் பிறவி எடுப்பது நின்று விடாது. இச்சையற்றவனிடம் இறை தரிசனம் காணலாம். அந்த இறை தரிசனமே பிறவிப்பிணியை ஒழிக்க வல்லது என்று பிறவியை நீக்கும் வழியையும் இறை தரிசன வழியையும் கூறுகின்றார் அகப்பேய். இங்கு இன்னுமொரு வினா எழுகின்றது. பெரிய யோகிமான்களெல்லாம் ‘வாசியோகம்’ பற்றி பிரமாதமாக சொல்கிறார்களே, அப்படி வாசியோகம் செய்பவர்க்கு இறைவன் எளிதில் புலப்பட்டு விடுவானோ? என்ற நம் கேள்விக்கு, “வாசியிலேறிய படி வான் பொருள் தேடாயோ? அகப்பேய் வாசியி லேறினாலும் வாராது சொன்னேனே” என்று சரியாக விடையளிக்கின்றார். அதுமட்டுமல்ல, அறிவு வடிவான கடவுளைக் கண்டவர்கள் மோட்சமும் வேண்டார்கள். முக்தியும் வேண்டார்கள். தீட்சையும் வேண்டார்கள் என சிவமே சின்மயமானவர்கள் என்று சிவயோக நிலை குறித்தும் பாடுகின்றார். மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மய மானவர்கள் பிறவித் துன்பம் தீருவதற்கு வழி தீமைகள் செய்யாமை, செருக்கின்மை இப்படி உண்மையான அன்பு நெறியே சைவம். அந்த உண்மை சிவத்தை சாத்திரங்களின் மூலம் காண முடியாது. நமக்குள்ளே கலந்திருக்கும் அந்தச் சிவத்தை அன்பு நெறியினால் மட்டுமே காண முடியும். இதை நான் சும்மா ஒப்புக்காகச் சொல்லவில்லை. உன்மேல் ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறேன். நீருடன் உப்பு கலந்திருப்பது போல உன்னுடனேயே இறைவனாகிய சிவபெருமான் இருக்கின்றார். இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாக வாழ்வாயாக என்று அகப்பேய் சித்தர் தம் பாடலில் ஆனந்த வாழ்வதனை உணர்த்துகின்றார். ஒப்பனை அல்லவடி - அகப்பேய் உன் ஆணை சொன்னேனே அப்புடனுப் பெனவே - அகப்பேய் ஆராய்ந் திருப்பாயே மனப்பேயை அடக்கி வென்ற அகப்பேய் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார். நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய் நாயகன் தாள்பெறவே நெஞ்சு மலையாதே அகப்பேய் நீயொன்றும் சொல்லாதே. 1 பராபர மானதடி அகப்பேய் பரவையாய் வந்ததடி தராதல மேழ்புவியும் அகப்பேய் தானே படைத்ததடி. 2 நாத வேதமடி அகப்பேய் நன்னடங் கண்டாயோ பாதஞ் சத்தியடி அகப்பேய் பரவிந்து நாதமடி 3 விந்து நாதமடி அகப்பேய் மெய்யாக வந்ததடி ஐந்து பெரும்பூதம் அகப்பேய் அதனிட மானதடி 4 நாலு பாதமடி அகப்பேய் நன்னெறி கண்டாயே மூல மானதல்லால் அகப்பேய் முத்தி யல்லவடி. 5 வாக்காதி யைந்தடியோ அகப்பேய் வந்த வகைகேளாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக