செவ்வாய், 8 ஜூலை, 2014

கடுவெளிச் சித்தர்


கடுவெளிச் சித்தர் பாடல் கடுவெளி என்பது ‘வெட்டவெளி’ அதாவது பிரமம். இந்தச் சித்தர் பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும் அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச் சித்தர் பாடல்களாக நமக்கு அறிமுகமாகின்றன. இவரது இயற்பெயரோ வரலாறோ தெரியாத நிலையில் இவரது ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்ற செய்தியை மட்டும் போகர் தெரிவிக்கின்றார். வானென்ற கடுவெளிச் சித்தர்தானும் வளமான திருக்காஞ்சிப் பதியிலாச்சு இந்த ‘திருக்காஞ்சிப்பதி’ என்ற ஊரைப் புதுச்சேரிக் கருகிலுள்ள ‘திருக்காஞ்சி’ என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம் தான் அவர் ஜீவசமாதி கொண்ட தலம் என்று சுட்டுவாருளர். இது ஆய்வுக்குரியது. இந்த சித்தரைப் பற்றி அறியாத நிலையில் இவர் பாடிய ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் தமிழகமெங்கும் வெகுபிரசித்தம். “நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி” என்ன அருமையான சொல்லாட்சி. இலக்கணம் பிறழாமல் அதே சமயம் எளிமை கூட்டி பாடலின் வரிகளைக் கொண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையேற்று உண்பவன். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றைக் காண்கிறான். என்ன வித விதமான வண்ண மலர்கள். வாசம் மிகுந்த மலர்கள் தனிமையில் இங்கு அமர்ந்து இயற்கையை ரசிப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது. அருகில் ஒரு சேய்குளம். நிறைந்துதான் இருக்கிறது ஆனாலும் என்ன பயன்? செடி கொடிகளுக்குத் தேவையான நீர் வானம் மழைப் பொழியும் போது மட்டுந்தானே கிடைக்கிறது. குளம் நிறைய தண்ணீர் இருந்தாலும் வான் மழையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நந்தவனத்திற்கு குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும்? ஆண்டியின் கற்பனை அளவுக்கு அதிகமானதுதான். அதனைச் செயலாக்கிப் பார்த்தால்தான் என்ன? பக்கத்து ஊரில் உள்ள குயவன் ஒருவனைப் பார்க்கிறான். தனக்குக் குடம் ஒன்று வனைந்து கொடுக்குமாறு கேட்கிறான். குயவன் ஆண்டியை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். அவனுக்குச் சிரிப்புதான் வருகிறது. “ஏன் சிரிக்கிறீர்?” “நீயோ ஆண்டி, உனக்கெதற்கய்யா தோண்டி?” குயவன் குசும்பாகக் கேட்டான். “உனக்கெதற்கு அந்தக் கதையெல்லாம். தோண்டி கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே? எதற்கு தேவையற்ற கேள்வி?” “சரி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தோண்டி எட்டணா.” “என்ன தோண்டிக்கு விலையா?” “ம்,,, பின்னே என்ன இனாமாகவா தருவார்கள். உன்னைப் பார்த்தாலே வாங்குகிற மூஞ்சில்லை என்றுதான் உனக்கு எதற்கு தோண்டி என்றேன்.” ஆண்டியின் சுருதி இறங்கி விட்டது. “ஐயா நானோ ஆண்டி, எம்மிடம் நீர் விலை சொல்வது நியாயமா? ஏதாவது தர்மம் செய்வதாக நினைத்துக் கொண்டு இந்தத் தோண்டியைத் தரக்கூடாதா?” ஆண்டியின் பேச்சு குயவன் மனதை இளக்கவில்லை. “போ, போ, காலையில் வந்து வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு,,,,,,” குயவன் வேறு வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான். ஆனால் ஆண்டி போகவில்லை. அவன் பார்வையில் படும் இடமாகப் பார்த்து தூரத்தே அமர்ந்து கொண்டான். தினசரி பிச்சை எடுத்த நேரம் போக மீதி நேரத்தை அந்த மரத்தடியில் அமர்ந்து குயவன் வியாபாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாளில்லை ஒருநாள் மனமிறங்கித் தோண்டி தர மாட்டானா என்ன? இப்படியே ஒரு நாளல்ல, ஒருமாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஆண்டியின் பொறுமை குயவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. குயவனும் போனால் போகிறது என்று நன்கு வனைந்த குடமொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான். ஆண்டியின் சந்தோஷத்திற்கு அளவேது. ஆகா, இனி என்னைவிட பணக்காரன் உலகில் யாருமில்லை. இந்த குடத்தைக் கொண்டு குளத்து நீரைச் செடிகளுக்குப்பாய்ச்சுவேன். செடிகளெல்லாம் நிறைய பூக்களைப் பூக்கும். பூக்களையெல்லாம் பறித்துக்கொண்டு போய் நல்ல விலைக்கு விற்பேன். எனக்குப் பெரும் பொருள் சேரும். அந்தப் பொருளைக் கொண்டு பெரிய மடம் ஒன்றைக் கட்டுவேன். அந்த மடத்தில் நிறைய ஆண்டிகள் தங்குவார்கள். ஆண்டி மடம் கட்டினான் கற்பனையில். சரி, கற்பனைக்கு யார் தடை விதிக்கப் போகிறார்கள்? அரும்பாடுபட்டு வாங்கி வந்த தோண்டியை அருமையாகப் பாதுகாக்க வேண்டு மல்லவா? தனக்குத் தோண்டி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தலையில் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பார்த்தான். சந்தோஷத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்தத் தோண்டியைப் பொத்தென்று கீழே போட்டு உடைத்து விட்டான். பத்து மாதங்கள் குயவனிடம் கெஞ்சி வாங்கி வந்த குடம் பத்தே விநாடிகளில் ‘படார்’. இனியென்ன செய்வது? குயவன் மறுபடியும் ஒரு தோண்டி தருவானா? கேள்விக்குறியுடன் பரிதாபமாகக் குயவனைப் பார்க்கிறான் ஆண்டி. இது சாதாரண ஆண்டி, குயவன், தோண்டி கதையல்ல. மனிதனின் ஜீவரகசியம். பத்து மாதம் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை அவன் போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து வருகிறானே என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது. பத்து மாதங்களாகத் தவம் செய்து பெற்றது மனிதா நீ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத்தானோ? அடப்பாவீ, எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறாய். இந்த உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளிச் சித்தர். தோண்டியை உடைத்த ஆண்டியைப் போல மேற் கொண்டு என்ன செய்வது என்று நாம் திகைத்திருக்கும் போது தமது அனுபவ உபதேசங்களை அள்ளி விடுகின்றார் சித்தர். “தூடணமாகச் சொல்லாதே” “ஏடணை மூன்றும் பொல்லாதே” “நல்லவர் தம்மைத் தள்ளாதே” “பொல்லாங்குச் சொல்லாதே” “பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே” “பெண்ணாசைக் கொண்டு அலையாதே” “மனம் போன போக்கு போகாதே” “மைவிழியாரைச் சாராதே” “மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே” “வைதோரைக் கூட வையாதே - இந்த வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே” “வைய வினைகள் செய்யாதே” “பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன் பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே” “கஞ்சா புகையாதே” “வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே” “மூடனுக்கு அறிவுரைப் புகலாதே” “கள்ள வேடம் புனையாதே” “கொள்ளைக் கொள்ள நினையாதே” என்று செய்யக்கூடாதவற்றையெல்லாம் பட்டியலிடுகின்றார். அப்படி இவையெல்லாம் செய்யக்கூடாதது என்றால் செய்யக்கூடியதுதான் என்ன என்று கேட்பவருக்கு மீண்டும் ஒரு பட்டியலை நீட்டுகின்றார்.“நல்ல வழிதனை நாடு” “எந்த நாளும் பரமனை நத்தி தேடு” “வல்லவர் கூட்டத்திற்கூடு” “வேத விதிப்படி நில்லு” “நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு” “சாதக நிலைமையையே சொல்லு” “பொல்லாத சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு” “மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த வேதாந்த வெட்டவெளிதனை தேடு” மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் மூலம் குறிப்பாகச் சொன்ன கடுவெளிச் சித்தர் அந்தக் குறிப்பைப் புரிந்துகொள்ளாத பக்குவமில்லாத பாமரர்களுக்குப் புரியும்வண்ணம் அதே கருத்தமைந்த மற்றொரு பாடலையும் பாடுகின்றார். “நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்” அழகான வர்ணஜாலங்களுடன் மிதந்து வரும் நீர்க்குமிழியானது காற்று வேகமாக அடித்தாலோ அல்லது எதன் மீதாவது மோதினாலோ பட்டென்று உடைந்து தெரிந்து விடும். மனித வாழ்வும் இப்படித்தான் மாட மாளிகை, ஆள், அம்பு சேனைகளுடன் பெரும் சிறப்புடன் வாழ்ந்தாலும் திடீரென்று அழிவுற்றுக் காணாமல் போய்விடும். இந்த மாய வித்தையின் இரகசியத்தை மனிதா நீ அறிந்து அழியும் உலகப் பொருள்களின் மேல் பற்று வைக்காமல் இருப்பாயாக என்கிறார். மேலும் இந்த உலக வாழ்க்கை மட்டுமல்ல, நீகூட நிலையில்லாத ஒரு பொருள்தான். இந்த உலகம் உனக்குத்தான் சொந்தம் என்று உலகிலுள்ள பொருட்களைச் சொந்தம் கொண்டாடி சேர்த்து வைக்காதே. இன்று உனக்குச் சொந்தமான அந்தப் பொருட்களெல்லாம் நாளை வேறொருவருக்குச் சொந்தமாகும். நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். ஆகையால் பாபஞ் செய்யாதிருப்பாயாக என்று உபதேசமும் செய்கிறார். பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக் கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான் பாபஞ் செய்யாதிரு மனமே முடிந்த வரை உன் வாழ்க்கையில் யாருக்கும் வயிறெரிந்து சாபமிடாதே. ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும். ஆகையால் உன் வயிற்றெரிச்சல் அந்த மனிதனைத் துன்பத்திற்காட்படுத்தும் என்பதையும் அறிந்து கோபத்தைக் கட்டுப்படுத்து என்றும் அறிவுரை கூறுகின்றார். “சாபங் கொடுத்திடலாமோ - விதி தன்னை நம்மாலே தடுத்திட லாமோ கோபங் தொடுத்திட லாமோ - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ” கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தது. மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால் இவைகளை ஆனந்தக் களிப்பில் பாடினாற் போலும். “மெய்ஞானப் பாதையிலேறு - சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு” என்று நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகத் தம் பாடலில் எளிய வார்த்தைகளால் கூறியுள்ளார் கடுவெளிச் சித்தர். ஆனந்தக்களிப்பு பாடல்கள் பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே இச்சைய துன்னை யாளாதே - சிவன் இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு - அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. அன்பெனும் நன்மலர் தூவிப் - பர மானந்தத் தேவின் அடியினை மேவி இன்பொடும் உன்னுட லாவி - நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே. எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன் துங்க அடியவர் தாசன் - தன்னைத் துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக