வெள்ளி, 25 ஜூலை, 2014

தமிழ் வேதங்களில் வாழ்வியல்- முதற் பணி ( காலைக்கடன்)


தமிழ் வேதங்களில் வாழ்வியல்- முதற் பணி ( காலைக்கடன்) உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிக்ள உள்ளன என்கிறார்கள், அவற்றுள் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளவன் மனிதன். இறைவர் நமக்கு இந்த அருமையான உடல், நல்ல மனம், புத்தி, முதலிய கரணங்களை அளித்துள்ளார், அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, என அவ்வையார் அன்றே பாடியுள்ளார், எனவே பிறத்ததற்கரிய பிறப்பு மானிட பிறப்பு. பார்ப்பதற்குக் கண்களையும், கேட்பதற்கு செவிகளையும், உழைப்பதற்கு கை,கால் உடம்பையும், பேசுவதற்கு வாய், நல்ல அறிவு ஆகியவற்றை அளித்துள்ளார், இத்துடன் அமையாது, குடிப்பதற்கு தண்ணீர், சுவாசிக்க காற்று, உண்பதற்கு கனிகள், காய்கள், ஒளிக்கு சூரியன், சந்திரன், ஆகியவற்றையும் நமக்காக படைத்துள்ளார், ஒரு பொருளைப் பார்க்கும் போது அப்பொருளை செய்தவர் ஒருவர் இருக்க வேண்டும், இதைப்போல இந்த உலகைப் பார்க்கும் போது அந்த உலகம் நியதியாக இயங்குவதை காணும் பொழுதும் இதற்கு மூலகாரணமாக ஒருவர் இருக்க வேண்டும், என்ற நினைக்க வேண்டும். சூரியன் காலை 6 மணிக்கு உதிக்கிறான், மாலை 6 மணிக்கு மறைகிறான்,தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, மனிதனுக்காக உணவைத்தருகின்றன, நாம் விடும் அசுத்தக்காற்றை அது சுவாசித்து நமக்கு வேண்டிய பிராண காற்றை அவை வெளியிடுகின்றன, குறிப்பிட்ட காலங்களில் காய்கனிகள் உண்டாகின்றன, இந்த நிகழ்வுகளை எந்த அரசாங்கமோ எந்த வரன்முறையே பின்பற்றப்படுவதில்லை, உலகம் ஒரு நியதியில் இயங்குவதிலிருந்தே ஒரு மாபெரும் சக்தி உள்ளது என்பதை அறிவுடையர் உணர்வர். அந்த பேராற்றல் உடையவரைத்தான் கடவுள் என்கிறோம், இவ்வளவு நலன்கள் நமக்கு அளித்துள்ள இறைவன் வணங்கவேண்டிய கடன் - கடமை - நமக்குள்ளது, இதைத்தான் காலைக்கடன் - முதற்கடமை என்கிறார்கள் சான்றோர், வடமொழியில் சந்தியா வந்தனம் என்றார்கள். காலையில் எழும் பொழுதே மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபாடு செய்வது தான் நம் கடனை தீர்க்கும் வழியாகும், தற்காலத்தில் காலக்கடன் என்பதற்கு பொருள் தவறாக கொண்டுள்ளார்கள். மேலை விதியே விளையின் பயனே விரவார் பரமூன்று எரிசெய்தாய் காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த ஆலைக்கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. தமிழ் வேதம் -7 காலையில் ஒவ்வொருவரும் நாளும் தவறாது செய்ய வேண்டியது சிவவழிபாடு ஆகும், இந்த காலைக்கடனை நம் முன்னோர்கள் தவறாது செய்து வந்துள்ளார்கள். வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்தவா வினையேன் நெடங்காலமே. - நாவுக்கரசர் முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் அந்தி வாயொளி யான்தன் அண்ணாமலை சிந்தியா எழுவார் வினை தீர்ந்திடும் கந்த மாமலர் சூடும் கருத்தனே. திருநாவுக்கரசர் தமிழ் வேதம் 5 காலையில் எழும் பொழுதே கடவுளை வணங்குவது தான் நம்முடைய கடனைத் தீர்க்கும் வழியாகும்,இந்தக் கடனை தீர்ப்பவர்க்கு வினைகள் யாவும் தீர்ந்து ஒழியும் என்கிறார் கடவுளைக்கண்ட நாவுக்கரசர் உலகியல் வாழ்விற்கு தெய்வ வழிபாடு வேண்டாம் என்பது, முள் நிறைந்த காட்டிலே நடந்து போகும் ஒருவன் சூரியனின் வெளிச்சம் வேண்டாம் என்பது போலாகும், தண்ணீர் படகை செலுத்துபவனுக்கு துடுப்பு அவசியமாகும், துடுப்பு இல்லாமல் படகை ஓட்ட முடியாது, துடுப்பு இல்லாமல் படகில் பயணம் செய்வது என்பது அறியாமையே ஆகும், இதைப்போல இறைவன் வழிபாடு இல்லாதவன் வாழ்க்கைத் துடுப்பு இல்லாத படகிற்கு ஒப்பாகும், நன்று நாள்தொறும் நம்வினை போயறும் என்றம் இன்பம் தழைக்க இருக்கலாம் சென்றுநீர் திருவேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே. அப்பர் நாள்தோறும் இறைவரை வழிபட்டால் வாழ்வில் இன்பம் தழைக்க இனிதே வாழலாம், என்பது அப்பர்பெருமான் அனுபவ அறிவுரையாகும், எனவே காலையில் எழுந்தவுடன் சிவனை வழிபட்டு சிவானந்தம் பெறுவோம், திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் நன்றி தமிழ் வேதம் மேலும் ஆன்மீக தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக