திருப்புகழ் தோன்றிய வரலாறு
அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து
குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன்.
நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார்.சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ்.
கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது.சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்”
பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே.ஆறுபடைவீடுகள் கதிர்காமம் மற்றும் அநேக தலங்களிற் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைப் பாடியுள்ளார். உலகமெலாம் உய்வுபெறும் பொருட்டு ஞானப்பெருவெளியில் அருவரதம் தாண்டவஞ்செய்யும் நடனசபாபதிகளிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். தண்டையும் அழகிய வெண்டையும், கிண்கிணியும், சதங்கையும் இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்கச் சிவபிரானது திருமுன் அன்பான இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து நின்ற அன்புபோல, அடியேனும் அத்திரு நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடையுமாறு கடப்பமலர்மாலையும் அழகிய மணிமகுடங்களும் தாமரைமலர் போன்ற சிவந்த திருக்கரங்களும் ஒளிவீசும் வேலாயுதமும், கருணைபுரிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திரகிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனது கண்கள் குளிரத்தோன்றி அருள்புரியாயோ என அருணகிரியார் வேண்ட அவருக்குக் கந்தவேளின் திரு நடன தரினம் கிடைத்தது.
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!
பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.
திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.
திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
கடம்ப மலர் மாலையையும்,
கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
பன்னிரண்டு தோள்களையும்,
இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!
ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.
திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.
திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.
அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
அடியவர்களுக்கு அருளும் இறைவனே
ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
திருப்புகழை கொஞ்சமாவது நானும்
சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!
இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.
சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?
”முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.
திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.
இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.
திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.
1. முத்தைத் தரு பத்தித் திருநகை
2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்
அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.
நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக