வெள்ளி, 11 ஜூலை, 2014

குதம்பைச்சித்தர் பாடல்


குதம்பைச்சித்தர் பாடல் அழுகணி சித்தரின் என் கண்ணம்மா, அகப்பேய் சித்தரின் அகப்பேயைப் போன்று குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற வார்த்தை ஜாலம் வருகின்றது. இவர் ‘குதம்பை’ என்ற காதணியணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற பெயர் பெற்றார் என்பர். பெண் குழந்தை இல்லாத குறைக்கு ஆணாய்ப் பிறந்த இவரைப் பெண் குழந்தை போல அலங்காரம் செய்து மகிழ்வார்களாம். அப்படி அணிகலன்கள் அணியும் நிலையில் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந் திருக்கையில் அவ்வளவு அழகாகக் காட்சி தருமாம் அந்தக் குழந்தை. அதனால் அதனை ‘குதம்பை’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கத் தொடங்கினார்களாம். இந்தக் கதை இப்படியிருக்க, இவர் இடையர் குலத்தைச் சேர்ந்த கோபாலர் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்து சித்தர் ஒருவரிடம் ஞானோ பதேசம் பெற்று மயிலாடுதுறையில் சித்தியடைந்தார் என்ற வரலாறும் கூறப்படுவதுண்டு. ஏனைய சித்தர்களைப் போல இவரும் தமது பாடலில் “தன்னையறிய வேணும் சாராமல் சாரவேணும்” என்ற தத்துவக் கொள்கையைப் பின்பற்றுகிறார். இராமலிங்க சுவாமிகள்கூட ‘தன்னையறிந்து இன்புறவே’ என்று வெண்ணிலவை நோக்கிப் பாடியதை நோக்க எல்லா ஞானிகளும் தன்னையறிதலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் என்பது புலப்படும். “தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு பின்னாசை யேதுக்கடி - குதம்பாய் பின்னாசை யேதுக்கடி” இவர் தம் பாடலில் யோக சித்திகளைப் பற்றிப் பலப்படக் கூறினாலும் இறைவனையடையும் பக்குவம் பெற்றோர்க்கு இதெல்லாம் தேவையற்ற வழிமுறைகள் என்றும் காட்டமாகக் கூறுகிறார். “ஆதாரமான வடிமுடிகண்டோர்க்கு வாதாட்ட மேதுக்கடி - குதம்பாய் வாதாட்ட மேதுக்கடி” “நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்க ளேதுக்கடி - குதம்பாய் வாட்டங்க ளேதுக்கடி”. “முக்கோணந் தன்னில் முளைத்த மெய்ஞ் ஞானிக்கு சட் கோண மேதுக்கடி” “சித்திரக் கூடத்தைத் தினந்தினந் காண்போர்க்கு பத்திர மேதுக்கடி” என்ற பாடல் வரிகள் குண்டலினி தவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுவனவாகும். முதற்பாடல் மூலாதார யோகத்தையும், இரண்டாம் பாடல் சுழுமுனை வழியையும், மூன்றாம் பாடல் அநாகத சக்கரத்தையும் நான்காம் பாடல் சகஸ்ராரம் பெருவெளியையும் குறிப்பால் உணர்த்துவன. இறைவனாகிய உண்மைப் பொருளைக் கண்டு தெளிந்த மெய்ஞானிகள் மெய்யாகிய உடலை நீடித்துவாழவைக்கும் காயகற்ப முறைகளை நாடி வீண் பொழுது கழிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். யோக சக்தி படைத்தவர்கள் காலனை வென்றவர்களாவார்கள். அவர்களைக் காலன் நெருங்க மாட்டான். நீண்ட நாள் உயிர் வாழும் தன்மையை அவர்கள் இயல்பாகவே பெற்றிருப்பதால் மரணம் என்பது அவர்களாகவே நிர்ணயித்துக் கொள்வது. இந்த நிலையில் அட்டாங்க யோகத்தில் ஒன்றான வேண்டிய வடிவமெடுக்கும் ஈசத்துவம் தேவையில்லை என்பது குதம்பைச் சித்தரின் கருத்து. இதனை, “காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி” என்கிறார். காயகற்ப சாதனைகளைச் செய்யாத சித்தர்களே இல்லை என்று கூறுமளவு பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் காயகற்பப் பயிற்சியை மேற்கொண்ட நிலையில் உண்மை ஞானிகள் காயகற்பந் தேட மாட்டார்கள் என்று வித்தியாசமாகத் தெரிவிக்கின்றார். “மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்” கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார். “வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு யோகந் தானேதுக் கடி” என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது. உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும் இலகும் கடவுளை ஏத்தி - நலமார் குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு நிதம்பார்த்து நெஞ்சில் நினை. எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி. 8 அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. 9 ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச் சேவித்துக் கொள்வாயடி குதம்பாய் சேவித்துக் கொள்வாயடி. 10 தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய் மாண்டாலும் போற்றிடுவாய். இவ்வாறு இறைவனை ஜோதிவடிவாய் காண்பதை மேற்கண்ட பாடல் வரிகளின் மூலம் காணலாம் உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித் திருவாகி நின்றது காண் குதம்பாய் திருவாகி நின்றது காண். 23 நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும் பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய் பாருமாய் நின்றதைக் காண். 24 புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச் சிவனாலே ஆகுமடி குதம்பாய் சிவனாலே ஆகுமடி. 25 அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல் புவனத்தில் உண்மையடி குதம்பாய் புவனத்தில் உண்மையடி. ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே சோதியாய் நின்றானடி குதம்பாய் சோதியாய் நின்றானடி. முத்திநிலை பெறும் வழி பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக் கற்றார்க்கு முத்தியடி குதம்பாய் கற்றார்க்கு முத்தியடி. 52 பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால் சந்தத முத்தியடி குதம்பாய் சந்தத முத்தியடி. 53 ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய் ஊமைக்கு முத்தியடி. தேகத்தைப் பழித்தல் பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு வாசனை ஏதுக்கடி குதம்பாய் வாசனை ஏதுக்கடி. காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு வாகனம் ஏதுக்கடி குதம்பாய் வாகனம் ஏதுக்கடி. பரத்தயரைப் பழித்தல் வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய் தளர்ந்து விழுந்திடுமே. மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும் பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய் பஞ்சுபோல் ஆகிடுமே. நலம் நிலைமை கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய் பாபத்துக்கு ஏதுவடி. 83 கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள் பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய் பள்ளத்திற் தள்ளுமடி. 84 பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு இருளாம் நரகமடி குதம்பாய் இருளாம் நரகமடி. பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல் செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு எங்காகும் நல்வழியே குதம்பாய் எங்காகும் நல்வழியே. வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப் பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் பெண்ணாசை ஏதுக்கடி? நிலையாப்பொருள் தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு நாடி வருவதுண்டோ? குதம்பாய் நாடி வருவதுண்டோ? 102 போம்போது தேடும் பொருளில் அணுவேனும் சாம்போது தான்வருமோ? குதம்பாய் சாம்போது தான்வருமோ? செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் தங்காது அழியுமடி! குதம்பாய் தங்காது அழியுமடி! தன்னோடு செல்பவை நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால் செல்வன் நிச்சயமே குதம்பாய் செல்வன நிச்சயமே. 111 செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும் எய்த வருவனவே குதம்பாய் எய்த வருவனவே. 112 முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய பத்தியும் பின்வருமே குதம்பாய் பத்தியும் பின்வருமே. 113 ஆசையை ஒழித்தல் இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது நிச்சய மாகுமடி குதம்பாய் நிச்சய மாகுமடி. 114 வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால் நல்ல துறவாமடி குதம்பாய் நல்ல துறவாமடி. 115 ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய் ஓசையைக் கேட்டிலையோ? தவநிலை கூறல் காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு ஏமன் பயப்படுவான் குதம்பாய் ஏமன் பயப்படுவான். 123 யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு மோகந்தான் இல்லையடி குதம்பாய் மோகந்தான் இல்லையடி. ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள் சம்புவைக் காண்பாரடி குதம்பாய் சம்புவைக் காண்பாரடி. சாதி பேத மின்மை ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய் வீண்சாதி மற்றவெல்லாம். சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய் ஓதி உணர்ந் தறிவாய். சமயநிலை கூறல் பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள் கற்பனை ஆகுமடி குதம்பாய் கற்பனை ஆகுமடி. மந்திரநிலை கூறல் ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய் சிந்தையுள் கண்டறி நீ. 157 வாதநிலை கூறல் ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில் வீறான முப்பாமடி குதம்பாய் வீறான முப்பாமடி. 158 விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால் வந்தது வாதமடி குதம்பாய் வந்தது வாதமடி. பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் மண்ணாலே இல்லையடி குதம்பாய் மண்ணாலே இல்லையடி. வயித்தியங் கூறல் முப்பிணி தன்னை அறியாத மூடர்கள் எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய் எப்பிணி தீர்ப்பாரடி. 164 எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற் விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் விட்டோடும் நோய்கள் எல்லாம். 165 நாடி ஒருபது நன்காய் அறிந்திடில் ஓடிவிடும் பிணியே குதம்பாய் ஓடுவிடும் பிணியே. தலங்களிவை எனல் கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு ஏயும் பலன் வருமோ? குதம்பாய் ஏயும் பலன் வருமோ? அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே இன்பான கோயிலடி குதம்பாய் இன்பான கோயிலடி. காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும் ஈசனைக் காணுவையோ? குதம்பாய் ஈசனைக் காணுவையோ? அஞ்ஞானங் கடிதல் தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார் சிந்தை தெளிந்திலரே குதம்பாய் சிந்தை தெளிந்திலரே. பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய் தீர்ப்பாக எண்ணிடுவாய். மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத் தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி. 213 வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச் சேதம் மிகவருமே குதம்பாய் வேதம் மிகவருமே. ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு ஞானந்தா னேதுக்கடி குதம்பாய் ஞானந்தா னேதுக்கடி. திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக