சுந்தரர் பெருமானார், குருபூஜை
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமயக்குறவர் நால்வர்களில் பெரியபுராணத்தின் கதாநாயகன் என்றும் இளைஞர் என்றும் வர்ணிக்கப்பட்ட சுந்தரர் ஒரு சிவலோகத்தில் சிவத்தொண்டராக இருந்து அவதார பருசராக இப்பூலகில் அவதரித்து இைறவனை அடையும் மார்க்கமான சகமார்க்கமாக சிவனை நண்பனாகக் கொண்டு அவரிடம் தான் வேண்டும் போதெல்லாம் வேண்டியவன பெற்று சிவனருள் பெற்றதை யாரும் அறிேவாம், ஆனாலும் அவரை குருவாகவும் அவருக்கு நண்பனாகவும் அடியாராகவும், இருந்து அவருடனே முக்தி பெற்ற இரண்டு நாயன்மார்களின் சிறு குறிப்பும் இத்துடன் விவரித்துள்ளேன்.
பெருமிழலைக்குறும்ப நாயனார்,
*****************************
மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.
இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; "சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்" என்று நினைந்து, "இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார்
**********************************************
மலைநாட்டிலே, கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். , சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார்.
இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு இது நித்தியம் இது அநித்தியம் என்கின்ற பகுத்தறிவும், அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களின் வெறுப்பும், பிறவித்துன்பங்களும், அவன் செய்த புண்ணிய பலத்தினாலே தோன்றின. அவை தோன்றவே, நித்தியமாகிய மோக்ஷத்திலே ஆசை உண்டாயிற்று. அதனால் அவன் பிறவிக்குக் காரணமாகிய வீண் முயற்சிகளை விட்டு, கோக்ஷத்திற்குக் காரணமாகிய யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான்.
மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள்.
கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடி, சிவாலயத்தை வலஞ்செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து, யானை மேற்கொண்டு, கொற்றக்குடையும் வெண்சாமரமும் உரியவர்கள் தாங்க, மகா அலங்காரத்தோடு நகரிவலஞ் செய்தார். செய்யும்பொழுது, ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, அந்த க்ஷணத்திலேதானே யானையினின்றும் இறங்கி பேராசையோடு விரைந்துசென்று, கைதொழுதார். அது கண்டவுடனே அவ்வண்ணான் மனங்கலங்கி, அவரை விழுந்து நமஸ்கரித்து, "அடியேனை யார் என்றுகொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்று சொல்ல; சேரமான் பெருமாணாயனாரும் "அடியேன் அடிச்சேரன். தேவரீர் திருநீற்றுவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாதே போம்" என்று சொல்லியருளினார். மந்திரிமார்கண் முதலாயினோரெல்லாரும் சேரமான்பெருமாணாயனாருடைய சங்கமபத்தி மிகுதியைக் கண்டு, ஆச்சரியமடைந்து, சிரசின்மேலே அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணினார்கள். சேரமான் பெருமாணாயனார் யானைமேலேறி, நகரியை வலங்கொண்டு மாளிகை வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி மண்டபத்தை அடைந்து, இரத்தினசிங்காசனத்திலேறி, வெண்கொற்றக் குடைநிழற்ற, வெண்சாமரம் வீச, அரசர்கள் மலர்தூவி வணங்கித் துதிக்க, வீற்றிருந்தருளினார். இங்ஙனமிருந்து, மனுநீதிநெறியை நடத்தி, எண்ணிறந்த அரசர்கள் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையை அறுத்து, சைவ சமயம் அபிவிருத்தி யாகும்படி அரசியற்றுவாராயினார்.
இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து,
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பானிற வரிச்சிற
கன்னம் பயில்பொழி லால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
றன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே"
என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் கொடுத்தருளினார்.
பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே அவர் சிரசின் மேலே கைகுவித்து, மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார். அப்பொழுது பாணபத்திரர் சிவபிரானுடைய திருமுகத்தைக் கையிலே கொடுத்து வணங்க, சேரமான்பெருமாணாயனார் அதனை முடிமேற்கொண்டு கூத்தாடி, மொழி குழற, ஆன்ந்தவருவி சொரிய, பரவசராய்ப் பூமியிலே பலமுறை விழுந்தார். திருமுகத்தைப் பலதரம் வணங்கி, அதனை வாசித்து, திருவருளைத் துதித்து; மாளிகையினுள்ளே புகுந்து, மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார்.
சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். அப்பொழுது சபாநாயகர் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைப்பிக்கும் பொருட்டு, எதிர் நின்றருளாது, "வன்றொண்டனாகிய சுந்தரன் கனகசபையின் கண்ணே நமது ஆனந்த நிருத்தத்தை வந்து வணங்கிப் பதிகம் பாடுதலால், நாம் நின்று அதனைக் கேட்டு வரத்தாழ்த்தோம்" என்னுந்திருவாக்கை அருளிச் செய்தார். சேரமான்பெருமாணாயனார் "அடியார்களுக்கு இவர் அருளுங்கருணை இருந்தவாறு என்னை" என்று வியந்து கனகசபையை வணங்கி வன்றொண்டரையும் தரிசித்தல் வேண்டும் என்று விரும்பி, சுபதினத்திலே திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளை வணங்கிக் கொண்டு, சேனைகளோடு புறப்பட்டுப்போய்ச் சிதம்பரத்தை அடைந்து, கனகசபையிலே திருநிருத்தஞ்செய்தருளும் சபாநாயகரை வணங்கி, சிவானந்தக்கடலுள் அமிழ்த்தி, பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார். சபாநாயகர் அதற்குப் பரிசிலாகத் தமது குஞ்சிதபாதத்தினது திருச்சிலம்பின் ஓசையை எதிரே கேட்பித்தார். சேரமான்பெருமாணாயனார் காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு அத்திருப்பதியில் இருந்தார்.
சிலநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தரிசித்து வணங்குதற்கு விரும்பிப் புறப்பட்டு, இடையில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவாரூரை அடைந்து, தம்மை எதிர்கொண்ட சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்து, அவரோடு திருக்கோயிற்சென்று, வன்மீகநாதரை வணங்கி, திருமும்மணிக்கோவைபாடி, பரவையார் வீட்டிலே போய், சுந்தரமூர்த்திநாயனாரோடும் இருந்தார். சிலதினஞ் சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரோடும் திருவாரூரை அகன்று, வேதாரணியத்தை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து, திருவந்தாதி பாடினார். அதன்பின் பாண்டிநாட்டிற் சென்று, அங்குள்ள மதுரை முதலாகிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சுந்தரமூர்த்திநாயனாரோடுந் திருவாரூருக்குத் திரும்பிவந்து, அவரோடுஞ் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். பலநாட்சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தம்முடைய ஊருக்கு வரும்படி பிரார்த்தித்து, அழைத்துக் கொண்டு சென்று, தம்முடைய கொடுங்கோளுரை அடைந்து, அவரோடும் இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் வன்மீகநாதரை நினைத்து உருகி, திருவாருருக்குப் போம்படி எழுந்துசெல்ல; சேரமான்பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்து அவரைப் பின்றொடர்ந்து, போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு, மந்திரிகளைக் கொண்டு தம்முடைய திருமாளிகையில் உள்ள பண்டாரமுழுதையும் பொதிசெய்து ஆட்களின்மேலே ஏற்றுவித்து, சுந்தரமூர்த்திநாயனாருக்கு முன் செல்லும்படி அனுப்பி, அந்நாயனாரை விழுந்து நமஸ்கரித்தார். சுந்தரமூர்த்திநாயனார் சேரமான்பெருமாணாயனாரைத் தழுவி, விடைகொடுத்துச் சென்று, திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனாரிடத்திலே விடைபெற்ற சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனார் மறவாத சிந்தையோடு, கொடுங்கோளுரிலே அரசு செய்து கொண்டிருந்தார்.
நெடுநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனார் பின்னுங் கொடுங்கோளூருக்கு வந்து, சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலாசத்துக்குப் போய், சுவாமிதரிசனஞ்செய்து, திருக்கைலாசத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளையானையின்மேல் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான்பெருமாணாயனாரை நினைத்துக்கொண்டு சென்றார். சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணத்தில் அருகிலே நின்ற ஓர் குதிரையில் ஏறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய் வெள்ளையானையின் மேற்கொண்டு ஆகாயத்திற் செல்லுஞ் சுந்தரமூர்த்திநாயனாரை கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்கள் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால், மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தை வீழ்த்தி, வீரயாக்கையைப் பெற்றுப்போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக் கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார்.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக