ஞாயிறு, 27 ஜூலை, 2014

திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை


திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] தொண்டில் பழுத்த சைவர்...வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்..... தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு! அவருக்கு முன்பே காரைக்கால் அம்மையார் பட்ட கஷ்டங்கள், பாவம் தெரியலையா என்ன? சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்! கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை! அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்! "பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும் கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும், மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும், உடம்பு அடங்கவும், ஊன் கெடவும், சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்..." என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!.. பாவம்! நால்வரில், நாவுக்கரசர் மட்டுமே உடலால் அதிகம் வருந்த வேண்டி இருந்தது! மற்ற மூவருக்கும் இப்படி இல்லை! வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் காளவாய், விஷம் இட்டது, கடலில் போட்டது....உழவாரப் பணி என்று இவருக்கு மட்டும் உடலால் பாடுபடுதல் .... கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்! அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்! அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவனாய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டான்! "மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்! - நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை! "அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!" "அப்பர் என்ற அடியேனின் பெயர், என் அப்பனை அல்லால், உமக்கு எப்படித் தெரியும்?" வாக்கு ஈசரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் சிவபெருமான்! சிக்கெனப் பிடித்தேன் அல்லவா? சிக்கினான் சிவன்! "அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா? இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்"..அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன! உடல் சிவ மங்களமாய் மின்னியது! வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்! காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின! "மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்! யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்! கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!" மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க, மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்...அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது! புகுவார் பின் புகுந்தால், அடியார் பின் புகுந்தால், அன்பினால் புகுந்தால், அந்த அன்பே சிவமாகும்! அன்பர் கூடுமிடம் கயிலையாகும்!....அப்பர் திருவையாறில் கண்ட திருக்கைலாயம் தரிசனம் நாம் காண ஆடி அமாவாசை அன்று திருவையாறு வாருங்கள் .... தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாற போற்றி! போற்றி!!

1 கருத்து: