அழுகணிச் சித்தர் பாடல்
அழுத கண்ணீருடன் காணப்பட்ட சித்தர் அல்லது இவரது பாடல்களைப்
படிக்கும்தோறும் அழுகை உணர்ச்சி உண்டாவதால் ‘அழுகண்’ சித்தர்
எனப்பட்டார் போலும்.
இவர் பாடும்பொழுது எப்பொழுதும் கண்களிலிருந்து நீர் வழிந்து
கொண்டே இருக்கும் என்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சிலர்
கூறுவர். இவர் நாகப்பட்டினத்தில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.
இவரது பாடல்கள் ஏறத்தாழ ஒப்பாரிப் பாடல்கள் போலத்
தோன்றினாலும் அப்பாடலின் கருத்துக்களை அனுபவ ஞானிகளால்தான்
விளக்கிங்கொள்ள முடியும்.
இவரது பாடல்களனைத்தும் கண்ணம்மா என்ற பெண்ணை சக்தியின் வடிவமான மனோன்மணி அம்மையை கண்ணம்மா என்று
முன்னிலைப் படுத்துவனவாகவே உள்ளன. பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றே இவரும் தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களை முன்னிருத்தியே பாடியுள்ளார,
“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனே?
இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம்
போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின்
இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக்
கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச்
சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே
என்று யோகத்தின் அவசியத்தைக் குறிப்பிடுகின்றார்.
இப்படிப்பட்ட யோகத்தை பழக முயற்சிக்கின்றார் அழுகண்ணர். யோகம்
பழகப் பழக உடல் கொதிக்கிறது. மூலச்சூடு ஏற்படுகின்றது. அடி வயிறு
வலிக்கிறது. தம்அனுபவத்தைப் பாடல்களில் கொட்டிக் கவிழ்க்கின்றார்.
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு
நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை;
நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல் என்று வந்த நமன் - என் கண்ணம்மா
குடியோடிப் போகாணோ!
யோகம் பயில்வாருக்கு அடிவயிறு சுடும் என்பது புரிகிறது. அது
மூலச்சூடு என்பார்கள். இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் மூலாதாரத்தில்
உறங்கும் குண்டலிப் பாம்பை எழுப்புவதற்கான அனல் என்பது புரியும்.
எந்தச் செயலையும் ஆரம்பிப்பதுதான் கடினம். பிறகு அது சுலபமாகி விடும்.
யோகத்தைப் பயில ஆரம்பித்த நிலையில்தான் அழுகண்ணருக்கு உடலைக்
கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததே ஒழிய யோகம் பயின்றபின் அது
இவர் கட்டுப்பாட்டை விட்டு விலகியே இருந்தது.
உடற்சூட்டின் மூலம் குண்டலினியைக் கிளப்பிய இவர் அதனை
இடையில் நிறுத்தும் வித்தையையும் அறிய விரும்புகின்றார். ஆனால்
முடியவில்லை. அடியில் தோன்றிய அனல் உச்சியில்தான், அதாவது
சகரஸ்தளத்தில்தான் போய் நின்றது. இடையில் ஒவ்வொரு உடற்
சக்கரத்தையும் கடக்கும்போது இன்பமயமான ‘சிறுவலி’ அந்த அனுபவத்தை மீண்டும் அனுபவிக்க அல்லது அதே இடத்தில்
குண்டலினியை நிலைநிறுத்த அவரால் முடியவில்லை.
இங்கு இந்த ஆறாதார குண்டலினி யோகத்தில் கவனிக்கப்படுகின்ற
விஷயமும் ஒன்றிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து கிளம்பும் குண்டலினி
அக்கினியை இடையில் தடங்கல் செய்தோமானால் யோகம் பயில்கின்றவர்
பித்தாகி உயிர் துறப்பர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கருத்தைத்தான்,
‘நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல் என்று வந்த நமன்”
என்ற வரிகளில் தெரிவிக்கின்றார்.
இது இப்படியிருக்க இந்த யோக முயற்சிக்கு முன் இளமை மயக்கத்தால்
மனதைக் கட்டுப்படுத்தப், படாத பாடுபட்ட நிலையை
“மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ”
முறைப் பெண்ணாக இருந்தால் என்ன அல்லது மச்சினியாகத்தான்
இருந்தென்ன? இளமைப்பருவத்தில் காமன் கணையினால் படும் துன்பம்
பெரியதல்லவா? அந்தக் காமன் கணைகளெல்லாம் யோகத்திலிருந்த
சிவபெருமான் கண்விழிக்கச் சாம்பரானது போல, யோக தவத்திலிருந்து நான்
கண் விழித்தால் அந்த யோக அனலில் காம உணர்ச்சிகளெல்லாம் வெந்து
சாம்பராகி விடாதா? என்று கண்ணம்மாளைக் கேட்கின்றார்.
குண்டலினி யோகத்தைப் பற்றி மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகின்றார்.
“உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சிக்கு மேலேறி வானுதிரந்தானெடுத்துக்
கச்சை வடம் புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ - என் கண்ணம்மா
வகை மோசமானேண்டி”
எவ்வளவு அருமையான விளக்கம். உச்சிக்குக் கீழே ஊசி முனை வாசல்
என்று குறிப்பிட்டது சுழுமுனையை உச்சியான மச்சிக்கு மேலே ஏறிய
குண்டலினி அமுத தாரண செய்யும் நிலையை இப்பாடலில் விளக்கம்
செய்கின்றார்.
இவ்வளவு யோக விளக்கம் கூறுமிவர் உஞ்ச விருத்தி செய்தே
காலத்தைக் கழித்தாரென்று கூறப்படுகிறது.
“புல்லரிடத்திற்போய் பொருள் தனக்கு கையேந்தி
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் - என் கண்ணம்மா
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
பொருளெனக்குத் தாராயோ”
பிச்சையெடுப்பது கேவலமானதுதான். ஆனால் அதைவிடக் கேவலம்
அப்படிப் பிச்சை எடுப்பவனிடம் பிச்சை போட மாட்டேன் என்று துரத்துவது
என்ற ஒளவையாரின் கருத்தை இவ்வரிகளில் காட்டித் தன்னைப் பொருள்
தரா புல்லர்களிடம் போய் கையேந்திப் பல்லை மிகக்காட்டிப்
பிச்சையெடுக்காமல் உயிர் வாடுவதற்கு எனக்குப் பொருள் கொடு அம்மா
என்று மனோன்மணித் தாயிடம் (கண்ணம்மாவிடம்) வேண்டுகின்றார்.
படிக்கப் படிக்கப் பரிதாபத்தைத் தூண்டும் இவர் பாடல்கள் சித்தர்
இலக்கியத்தில் மிகப் பிரபலம்.
“பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ”
இங்கு இவர் ஜனன முறைமை உணர்த்துகின்றார். பையூர் என்பது
கருவறை (கருப்பை) பாழூர் என்பது யோனி; மெய்யூர் என்பது உடல்
என்றும், உண்மை ஞானம் என்றும் இரு பொருள்படும்.
பாழ் என்பது மோட்சம், வீடு பேறு; உடலையே இறைவன் வாழும்
ஆலயமாகக் கருதி யோக நியமங்கள் செய்தீர்களானால் அதுவே கோயிலாகி
இறை தரிசனத்தைக் காட்டும். அந்த நிலையில் யோக நெறியாளர் வெறுத்
தொதுக்கும் பெண்களின் கருப்பையும் உடம்பும் புனிதம் அடைந்து பாழூராக
அதாவது ஆகாய வெளியாக இறைவன் வாழும் கோயிலாக மாறாதா? என்று
நம்மைக் கேள்வி கேட்கின்றார்.
ஆராய்ச்சி உரையைப் படித்த நெஞ்சங்களுக்கு அழுகண்ணார்
பாடலையும் படிக்க ஆவல் வருகின்ற தல்லவா! பாடலைத் தொடருங்கள்.
மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ. 1
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி.
முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
கோலமிட்டுப் பாரேனோ. 3
சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய்நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துபோ லன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா
தின்றுகளைப் பாறேனோ. 4
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
கண்குளிரப் பாரேனோ. 5
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ. 6
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ. 7
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ. 8
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ 9
பையூரி லேயிருந்து பாழூரி லேபிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ. 10
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
கண்விழிக்க வேகாவோ. 11
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்சந்திரருஞ் சூரியருந் தான்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ. 12
காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலுங்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா
கண்குளிரக் காண்பேனோ. 13
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்து
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
வகைமோச மானேண்டி. 14
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்து உரைக்க லாகாதோ? 33
எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன்
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி
கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்குஏவல் செய்யாரோ. 34
என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய். 35
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால்
பாதாள வத்துவெல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ. 36
கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து
உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி
உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம்வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ? 37
கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி
புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கித் தவிக்குறண்டி. 38
பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால்
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா
புலன்கள் தெரியவேண்டி. 39
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலைதெரிய மாட்டேனோ. 40
ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மைபெற்று வாழ்வார்கள். 41
இன்னும் பல பாடல்களாக சித்தமருத்துவமாக , வாத கற்பம்
கண்ணிகள் , ஆறாதாரம் மெய்ஞ்ஞானம் ஆகியவை பற்றியும் பாடியுள்ளார்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக