வியாழன், 8 மே, 2014


1. சிவவாக்கியர் பாடல் சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர் கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன் புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும் கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. மூடப்பழக்கங்களைச் சாடுதல் சமுதாயத்தில் புரையோடி விட்டிருக்கும் மூடப் பழக்கங்களைச் சாடும் வித்தியாசமான சித்தராக சிவவாக்கியர் காட்சி தருகின்றார். ஆசார, அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று தேவையற்ற மூடப் பழக்கங்களில் மூழ்கித் தவிக்கும் மூடர்களைக் கரையேறி உய்யுமாறு சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார். “பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37) சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம் உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம் கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே என்றும், அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால் நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால் அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்தில் அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக