வியாழன், 15 மே, 2014


அத்ரிமலை யாத்திரை 35 சித்தர்கள் பல ரூபத்தில் அத்ரிமலையில் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க சித்திரை மாதம் தோறும் ஒரு அரிய நிகழ்வு அத்ரியில் நடக்கிறது. அது, அமிர்தவர்த்தினி மரத்திலிருந்து பொழியும் பன்னீர் மழைதான். இந்த அத்ரிமலை யாத்திரை தொடரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாம் குறிப்பிட்டிருந்த இந்த சம்பவம் அத்ரிமலையில் இந்த வருடமும் சித்திரை மாத தொடக்கத்தில் மிகச் சரியாக நிகழ்ந்தேறியது. அத்ரிமலை கோயிலின் முன்புள்ள பாலை மரத்தில் இருக்கும் வண்டுகளும் சித்தர்களே. இந்த வண்டுகள் சுட்டெரிக்கும் வெயிலில் மரத்திலிருந்து பன்னீர் மழையை பீய்ச்சியடிக்கின்றன. அதை பக்தர்கள் உணருகிறார்கள். கையில் நுகர்ந்து பார்க்கிறார்கள். பன்னீர் வாசம் அவர்களை அப்படியே கிறங்கடிக்கச் செய்கிறது. மேலிருந்து பன்னீர் பொழிகிறது. கையில் பார்த்தால், அதற்குள் காய்ந்து விடுகிறது. இது எப்படி நடக்கிறது? வனத்துறையினர் ஒரு வகையான வண்டுகள்தான் இந்த மழையைப் பொழிகின்றன என்கிறார்கள். சிரஞ்சுபோல மரத்தின் நீரை உறிஞ்சி மக்கள் மீது இந்த வண்டுகள் தெளிக்கின்றன என்றே வைத்துக்கொள்வோம். கோயிலுக்கு கிழக்கும் மேற்குமாக உள்ள இரண்டு மரங்களில் மட்டும்தான் அந்த வண்டுகள் இருக்கவேண்டுமா? இந்த வனத்தில் எத்தனையோ பாலை மரங்கள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் ஏன் இந்த வண்டுகள் குடியிருக்கவில்லை. அதிலும் பங்குனி மாதத்தின் கடைசி 5 நாட்களும், சித்திரையின் முதல் 5 நாட்களும்தான் இந்த வண்டுகள் இங்கிருக்க வேண்டுமா? அதுவும் கீழிருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டாத வண்டுகளின் உடம்பில் இவ்வளவு பன்னீரா! இது ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. தமிழ் வருட பிறப்பை வரவேற்க சித்தர்கள் செய்திருக்கும் ஏற்பாடோ இது! இந்த வண்டுகளே சித்தர்கள்தான் என்கிறார்கள், இங்கு வரும் ஆன்மிகவாதிகள். சிவனை வணங்கத்தான் இப்படி வண்டு ரூபமாக இந்த மரத்தில் வந்து தங்குகிறார்கள். ஏற முடியாமல் ஏறி மூச்சு வாங்கி, சிவனைக் கண்டவுடன், நெடுஞ்சாண்கிடையாக கிடந்து வணங்கி நிற்கும் பக்தர்கள் மீது பன்னீர்மழை பொழிகிறார்கள். பக்தர்களை வரவேற்பதில் சித்தர்களுக்கு தனி ஆனந்தம். நாம் மீண்டும் அத்ரி கங்கையின் சிறப்பை பற்றி பார்ப்போம். ஆவணி மாதம் பௌர்ணமியில்தான் இந்த ஊற்று தோன்றியது. எனவேதான் அத்ரியில் ஆவணி மாதம் பௌர்ணமி பூஜை செய்வர்கள் வீட்டில் செல்வம் பொங்குகிறது. இதனாலேயே இந்த பூஜை செய்ய நான், நீ என்று பக்தர்களிடையே போட்டி நிலவுகிறது. சித்ரா பௌர்ணமி, மாசி சிவராத்திரி போன்று ஆவணி பௌர்ணமியும் விசேஷமானதுதான். ஆனால், தற்போது ஆவணியில் இரவில் கோயிலில் தங்க அனுமதி இல்லை. எனவே பகலிலேயே பூஜையை நடத்தி முடித்து விடுகிறார்கள். அத்ரி கங்கை ஊற்றுக்குள் இருக்கும் அதிசய கங்காதேவி மிகவும் சிறப்பானவள். இந்த தீர்த்தத்தினை வீட்டுக்கு கொண்டு போய் எத்தனை வருடம் பூஜை அறையில் வைத்திருந்தாலும் கெட்டு போகாது. அதே வேளையில் சுத்தமில்லாமல் தீர்த்தத்தினை தொட்டால், தண்ணீருக்குள் புழு வந்து விடுகிறது. அத்ரி கங்கையை மேலும் போற்றி வணங்க இதுவும் ஒரு காரணமாகி விடுகிறது. இந்த கங்காதேவி திருவாங்கூர் மகாராணிக்கு ராஜபுடை நோயை குணமாக்கியவர். இதனால் அத்ரி கங்காதேவி பொட்டல்புதூரில் சென்று குடியேறியுள்ளார். அது என்ன தகவல்? ஒருமுறை திருவாங்கூர் மகாராணிக்கு ராஜபுடை நோய் ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர் எல்லோரும் வந்து பார்த்து விட்டார்கள். ஆனால், நோய் தீரவில்லை. பல இடங்களில் இருந்து மந்திரவாதிகளை அழைத்து வந்தும் பார்த்து விட்டார்கள். ஆனால், நோய் தீர்ந்தபாடில்லை. ராணிக்கோரணம் தாங்க முடியவில்லை. அழுதார். துடித்தார். என்ன செய்வது என்று தவித்தார். பட்டத்துராணி அழுது புலம்புவதை மன்னரால் பார்க்க முடியவில்லை. ராணியின் நோயை நீக்கு வோருக்கு பொன்னும் பொருளும் தருவதாக அறிவித்தார். இதற்கிடையில் பொட்டல்புதூரை சேர்ந்த ஆசாரி ஒருவர் அத்ரிக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார். அவர் கங்காதேவியின் தீவிர பக்தர். ஆனால், ஏழ்மையானவர். கங்கை அம்மன் ஆசாரியின் ஏழ்மை நிலையையும் ராணியின் நோயையும் போக்க வேண்டுமென்று நினைத்தாள். கங்காதேவி ஆசாரியை திருவாங்கூர் அரண்மனைக்கு ராணியின் நோயைத் தீர்க்க அனுப்பி வைத்தார். ஆசாரி அரண்மனைக்குச் சென்றபோது யாரும் இவரை வைத்தியர் என்று நினைக்கவில்லை; விரட்டிவிட்டனர். எனவே இவர் அங்கிருந்த தொழுவம் அருகே படுத்து விட்டார். “தாயே, நீ மனது வைத்தால் மட்டுமே நான் மகாராணியின் நோயை நீக்க முடியும்’’ என்று வேண்டினார். அப்படியே தூங்கியும் விட்டார். இதற்கிடையில் அம்மன் மன்னரின் கனவில் தோன்றினார், “உனது தொழுவத்தில் படுத்து கிடப்பவன்தான் மகாராணி நோய் தீர்க்க வந்திருப்பவன். அவனை அழைத்து வந்து வைத்தியம் செய். உன் மனைவியின் நோய் குணமாகும்“ என்று கூறினார். மன்னர், ஆசாரியை அழைத்துக் கொண்டு வந்தார். “மன்னா, நோயை குணமாக்க வேண்டுமென்றால் வெண்கல பானை ஒன்று வேண்டும்’’ என்று கேட்டார் ஆசாரி. அது போல கொடுத்தார்கள். அந்த பானையை வைத்து ராணியின் நோயை குணமாக்கினார் ஆசாரி. இதனால் ஆசாரிக்கு வேண்டிய பொன் பொருளை எல்லாம் கொடுத்தனுப்பினார் மன்னர். அதோடு வெண்கல கரக குடம், சூலாயுதம், திருநீரு கொப்பரை ஆகிய மூன்றையும் அரசனிடமிருந்து ஆசாரி வாங்கி வந்தார். ஒரே சமயத்தில் மகாராணியின் நோயை குணமாக்கியதோடு, ஆசாரியின் கஷ்டத்தையும் போக்கினாள் கங்காதேவி. இதனால் ஆனந்தம் அடைந்த ஆசாரி தனது ஊரான பொட்டல்புதூரில் கங்கை அம்மனுக்கு கோயில் கட்டி வணங்கினார். அவளை கங்கா பரமேஸ்வரி என்று இன்றளவும் வணங்கி வருகிறார்கள். அரசன் கொடுத்த வெண்கல கரக குடம், சூலாயுதம், திருநீருகொப்பரையையும் வைத்து வணங்கி வருகிறார்கள். பொட்டல்புதூரில் கங்கை அம்மன் கோயில் சந்தை பொட்டலில் உள்ளது. அவரது வாரிசுகள் அந்த அம்மனுக்கு பூஜை செய்து வருகிறார்கள். தற்போதும் தை மாதம் அமாவாசையில் கோயில் கொடை விழா நடைபெறும். இந்த வேளையில் இவர்கள் அத்ரி மலைக்கு வந்து அத்ரி கங்கையில் தீர்த்தம் எடுத்துச் சென்றுதான் அபிஷேகம் செய்கிறார்கள். கரக குடத்தில் தீர்த்தம் எடுத்து ஊர் உலா வரும் காட்சி கண் கொள்ளாதது. இந்தக் கோயிலில் கங்கா பரமேஸ்வரி மூலவராகவும், விநாயகர், பாலமுருகன், சுடலை மாடன் ஆகியோர் பரிவார தெய்வங்களாகவும் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் சுடலை மாடன் அத்ரிமலையை நோக்கியபடிதான் இருந்தாராம். தற்போது மாற்றி வைத்து வணங்கி வருகிறார்கள். இந்தக் கோயில் நடை தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். மேற்கொண்டு கோயில் விவரங்களுக்கு 9965859798 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த கங்கை அம்மன் நாள்பட்ட நோய்களை தீர்க்க வல்லவள், செல்வத்தினை அள்ளி தருபவள். அம்மையை உளமாற வணங்கி விட்டு அங்கிருந்து நடைபோட்டோம். அருகில் மிகவும் பழமையான மரம் ஒன்று இருந்தது. ஓங்கி வளர்ந்த மரம். ஆனால், அதன் தண்டுப் பகுதி முழுவதும் அரித்துவிட்டது. எந்த பலத்தில் இந்த மரம் எப்படி நிற்கிறது என்பதே ஆச்சரியம்தான். சுமார் 40 வருட காலமாக இந்த மரம் இப்படித்தான் இருக்கிறது என்கிறார்கள் அத்ரி பக்தர்கள். இது போன்ற மிகவும் பழமையான மரங்களை கொண்ட இடம்தான் அத்ரிமலை. அருகிலேயே ஒரு மரம் பாம்பு படமெடுத்து நிற்பது போல குடை பிடித்து நிற்கிறது. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4948&Cat=3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக