புதன், 14 மே, 2014


திருமூலரும் திருமறையும் உபதேசம் 3 ( இளமை நிலையாமை) இளமை நிலையாமை காலகாலத்துக்கும் இவ்வுலகில் நாம் வாழ்ந்திருப்போம் என்பது எத்தனை அறிவீனமோ அத்தனை அறிவீனம் நம் இளமை நிலைத்திருக்கும் என்று நினைத்திருப்பதும், திருமூலர் இளமை நிலையாமை குறித்துப் பாடிய பாடல் " கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்சில நாளில் விழக்கண்டுந் தேறார் வியனுலகோரோ" காலையில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மறைகின்றது, நம் கண்ணெதிரே கன்று எருதாய் வளர்வதும், பின்பது மூப்படைந்து மடிவதும் நிகழ்கிறது, நாம் கொண்ட இளமையும், அதுபோல் மறையும் என்பதை உலகோர் உணர்வதில்லை - இது பாடலின் பொருள் செல்வம் நிலையாமை செல்வம் நிலையாமை பற்றி திருமூலர் " வெள்ளம் போல் பெருகிவரும் செல்வம் உங்களுக்கு மயக்கத்தைத் தரலாம், செல்வத்தின் உண்மை இயல்பை தெளிந்தார், உரைக்கத் தெரிந்து கொள்ளுங்கள், நிலையற்ற பொருள் மீது விருப்பம் வையாதீர்கள் நிலையான செல்வத்தை தேடித் கொள்ளுங்கள், இதனை திருமூலர் " தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தைக் கூற்றின் வருங்கால் குதிக்கலும் ஆமே" உங்கள் நிழலே உங்களுக்கு பயன்படாது என்பதை அறிந்திருந்தும், உங்களுக்கு வேறாக உள்ள செல்வத்தைக் கொண்டு எப்படி நீங்கள் பயன்பெற முடியும் , உடலைவிட்டு உயிர் பிரியுமுன்பே உள்ளொளியைக் கண்டு கொள்ளுங்கள். என்கிறது மந்திரம் பாடல் : தன்னது சாயை தனக்குதவாது கண்டு ) சகடக்கால் ( வண்டிச்சக்கரம்) போல் வாழ்க்கை சுழற்சியுடையது, ஒரே நிலையில் நின்றிருக்காது, செல்வம் உள்ளவர் பலரோடுங் கூடி பகிர்ந்துண்டு வாழவேண்டும் என்கிறது நாலாடியார் பாடல்.....: துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் ......) மனிதன் உடம்பு நிலைக்காது, அவன் பெரிதும் போற்றிய இளமை நிலைக்காது, அவன் அரிதன் முயன்று தேடிய செல்வமும் நிலைப்பதில்லை, என்று நிலையாமை பற்றி திருமூலர் சொல்லி செல்வது ஏன்? எதிலும் பற்று வைக்காதே, இழப்புகளில் விரக்தி அடையாதே என்பதற்காகவா? இல்லை, அதற்கு மேலும் ஒன்று உண்டு, இந்த வாழ்வை நாம் அர்த்தமுடையதாக்கி கொள்ள வேண்டும், பயனற்றவைகளில் மனதை ஈடுபடுத்திப் பாழ்பண்ணிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், அழிக்கூடிய உடம்பு என்கிற திருமூலர் அதே உடம்பை கவனமுடன் பராமரிக்கவும், சொல்கிறார், மேலோட்டமாய் பார்க்கிறபோது அது முரண்பாடாய் தெரியலாம், திருமூலர் பாடல் " உடம்பால் அழியில் உயிரால் அழிவர் திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" உடலை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதை அறிந்து , இவ்வுடலை முறையாகக் காத்துக் கொண்டேன், அதன் மூலம் உயிரையும், காத்து கொள்ள முடிந்தது, உடல் வலிமையாக இருந்தால் ஞானத்தையும் போற்றிக் காத்திட முடியும் இது பாடலின் பொருள் நான் மாசுற்ற தேகம் என்று கருதியிருந்தேன் உள்ளே ஈசன் வீற்றிருக்க கண்டேன், இவ்வுடல் இறைவனுக்கு ஆலயம் என்பதை உணர்ந்தேன், அதனால் உடலைப் பாதுகாக்க விரும்பினேன் என்கறார் திருமூலர் பாடல் : உடம்பினை முனனம் இழுக்கென்று......... ) இந்த வாழ்வு பயனுற வேண்டுமெனில் ஞானம் பெறவேண்டும், இறையுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும், செல்வத்தின் பயனே ஈதல் என்பதை கருத்தில் கொண்டு நற்காரியங்களைச் செய்ய வேண்டும், நாளை பார்த்துக் கொள்வோம் என்று எண்ணாமல் அறப்பணிகளை உடனே செய்து முடிப்பது நல்லது, இவற்றை வலியுறுத்தவே திருமந்திரம் , குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் " நிலையாமை " பேசுவது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக