வியாழன், 15 மே, 2014


அத்ரிமலை யாத்திரை 34 அத்ரி கங்கையில் வெள்ளை ஆமையை பல பக்தர்கள் பார்த்திருக்கிறார்கள். பொதுவாகவே ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். 15 வருடங்களுக்கு முன்னால் அத்ரி பக்தர்களும் இதேபோலப் பேசிக்கொண்டார்கள். ‘‘அத்ரி கங்கையில் ஆமையா! ஆமை இருந்தால் கோயில் எப்படி உருப்படும்?’’ என்று பரவலாகப் பேசத் தொடங்கினர். எனவே ஆமையை பிடித்துக் கொண்டு போய் வெளியே விட்டுவிட முடிவு செய்தனர். ஆனால், பகவான் அந்த ஆமையின் மகிமையை பக்தர்களுக்குத் தெரியப்படுத்த வி ரும்பினார் போலும்! திட்டமிட்டபடி வெள்ளை ஆமையை ஒரு சாக்கு மூட்டைக்குள் போட்டுக் கொண்டு, தோளில் சுமந்து மலையடிவாரத் திலுள்ள கல்லாற்றில் கொண்டுபோய் விட்டனர். அணைக்கட்டுக்குள் ஆமை சென்று விட்டதை உறுதி செய்து கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றனர். ஆனால், மறுநாள் அத்ரி கங்கையில் போய் பார்த்தால் வெள்ளை ஆமை சுவாதீனமாக நீந்திக் கொண்டிருந்தது! எப்படி? இது வேறு ஆமையோ என்று குழப்பமடைந்தார்கள். ஏற்கெனவே அந்த ஆமையைப் பார்த்திருந்தவர்கள், இது அதுதான் என்று உறுதி செய்தார்கள். பிறகு மெல்ல, இதுவும் அத்ரி ஈசனின் அருள் விளையாடல்தான் என்று அமைதியானார்கள். இந்த ஆமையைப் பார்த்தால் தொழிற் போட்டியாளர்கள், விரோதிகளெ ல்லோரும் நம்மை விட்டு விலகுவர்; தொழிலும் சிறப்பாக நடக்கும் என்கிறார்கள். ஆனால், இந்த வெள்ளை ஆமையை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது என்பதுதான் இதன் சிறப்பு! விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் கூர்ம அவதாரம் மிக முக்கியமானதல்லவா? அதனால்தான் வடநாட்டில் மிகப் பெரிய தொழில் அதிபர்களெ ல்லோரும் ஆமை என்னும் கூர்மத்தினை தங்களின் வியாபார தலத்தில் வைத்து பூஜித்து வருகிறார்கள். தங்களது பணப் பெட்டியின் அருகே கூர்ம அடையாளம் எதையாவது வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்த கங்கை ஊற்று கால்சியம் சத்து நிறைந்தது. மருத்துவ குணம் வாய்ந்தது. அதை நிரூபிக்கும் வண்ணம் அத்ரி மலையில் ஒரு சம்பவம் நடந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு, சிவகாசியிலிருந்து அழுக்கு வேஷ்டி சுவாமி என்பவர் அத்ரிமலைக்கு வந்திருக்கிறார். ஆனால், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் மிக அதிகமான சோடா பாட்டில் மூடிகளை அத்ரிக்கு கொண்டு வருவார். அதைச் சிவலிங்கம்போல வடிவமைப்பார். அவற்றில் சின்னச் சின்ன திரி போட்டு விளக்கேற்றி வணங்குவார். இதை பல பக்தர்கள் பரவசத்தோடு கண்டுகளித்திருக்கிறார்கள். அமாவாசை தோறும் இரவு சிவவிளக்கு பூஜை நடைபெறும். அந்த பூஜையில் கலந்துகொள்ள ஒரு குடும்பம் வந்திருந்தது. அப்போது அந்த குடும்ப த்திலிருந்த சிறு குழந்தை வயிற்று வலியால் துடித்தது. இதுபோன்று அந்தக் குழந்தைக்கு அடிக்கடி வருமாம். அதற்கு மருத்துவரிடம் மருந்தும் வாங்கி வைத்திருந்திருப்பார்களாம். ஆனால், மலைக்கு வந்த அன்று அவர்களிடம் குறிப்பிட்ட மருந்து இல்லை. அச்சமயம் அங்கு வந்த அழுக்கு வேஷ்டி சுவாமி, ‘‘எல்லாவற்றையும் தீர்க்கும் பெரிய மருந்து அத்ரியிடம் உள்ளது’’ என்றார். அபிஷேக விபூதியையும், அத்ரி கங்கையையும் ஒன்றாக குழைத்து குழந்தைக்குக் கொடுத்தார். மறுநிமிடமே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது. அதற்குப் பிறகு குழந்தைக்கு வயிற்றுவலியே வரவில்லை. கோரக்கரின் சந்நிதானம் திறந்திருக்கும்போது சிட்டுக்குருவி ஒன்று சந்தோஷத்துடன் சிறகடித்து கர்ப்ப கிரகத்திற்குள் செல்கிறது; அதன் பிறகு அந்த குருவி வெளியே வருவது இல்லை. ஏன்? சிவனோடு ஐக்கியமான அந்த சிட்டுக்குருவியும் ஒரு சித்தர்தானோ? பங்குனி மாதத்து கடைசி ஐந்து நாட்களும், சித்திரை மாதத்து முதல் ஐந்து நாட்களும் அமிர்தவர்ஷினி மரத்திலிருந்து பெய்யும் சந்தன மழை நம்மீது விழுவதோடு, நம்மைச் சுற்றிலும் ஒருவித நறுமணம் கமழ்கிறதே, இது யாருடைய செயல்? அத்ரிமலைக்கு ஏறும்போது, பாதை மாறிவிட்டால், அப்படித் தவித்து நிற்பவர்களை நாய் ஒன்று வந்து அழைத்துச் சென்று மலை உச்சிக்கு கூட்டிக்கொண்டு செல்கிறதே, அந்த நாயாக வருபவர் யார்? ஓங்கார சத்தம், சில் வண்டுகள் கூச்சல், ஆங்காங்கே திடீரென்று தோன்றி மாயமாய் மறையும் சில மிருகங்கள் இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது என்ன? எல்லாமே இங்கு வாழும் சித்தர்களின் மாற்று உருவங்கள்தானோ? அவர்கள் அங்கே வாழ்வதால்தான் இங்கு வரும் பக்தர்களுக்கு எந் தவொரு தீங்கும் விளைவதில்லை என்கிறார்கள். உண்மைதான். சில வேளைகளில் கோரக்கர் குகைக்குள் ஒரு சித்தர் இருப்பது போல சிலருக்கு தென்பட்டிருக்கிறது. சிறிது நேரம் கழித்து மீண்டும் போய்ப் பார்த்தால் அங்கு யாரும் இல்லை. அதுவரை அங்கே இருந்தவர் ஒரு சித்தர்தானா அல்லது வேறு யாராவதா? அதனால்தான் அத்ரிமலை முழுவதுமே அதிசயமாக உள்ளது. அடுத்து கங்கா ஊற்றிலும் அதிசயம்தான். மழை எவ்வளவு பெய்தாலும் ஊற்று நீர் பொங்கி வெளியேறாது. அதேநேரம் எவ்வளவு வெயிலானாலும் அந்த நீர் சூடாகாது. எவ்வளவுதான் குளிர் அடித்தாலும் நீர் அளவுக்கு அதிகமாக சில்லிடாது. தட்பவெப்ப நிலையில் எப்போதுமே மாற்றம் இல்லாத ஊற்றாக இந்த கங்கை உள்ளது. கொஞ்ச காலத்திற்கு முன்னாலிலிருந்து இந்தப் பகுதியில் மழை பெய்யவில்லை எ ன்றால் இங்குள்ள நந்தியை கங்கைக்குள் எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள். உடனே மழை பெய்து விடும். கங்கையின் வலதுபுறம் வேல் உள்ளது. திருமணத் தடை நீங்க வேண்டுமெனில் இந்த வேலுக்கு அபிஷேகத்தை செய்வார்கள். கங்கா தேவிக்கு அருகிலிருக்கும் வேலுக்கே இந்தச் சிறப்பு என்றால் இங்கிருக்கும் கங்கா தேவியின் சிறப்பு எத்தனை மகத்தானது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக