ஞாயிறு, 18 மே, 2014


பக்தியும் ஞானமும் - பகுதி 1 பொதுவாக எல்லோருக்கும் ஞான மார்க்கம் என்பது பக்தி அல்லாத வழி என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் முக்தி அடைவதற்கான இரண்டு தனித்தனி வழிகளாக தொன்றுதொட்டு முன் வைக்கப்பட்டவை, என்றாலும், 'முக்தியானது ஞானத்தால் மட்டுமே கிட்டும்' என்பது ஆதி சங்கரரின் முடிபு. அதே சமயம், பலரும் ஞான மார்க்கத்தில் பக்திக்கு இடமில்லை என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்வைதத்தில் பக்திக்கு இடம் உண்டு - மிக முக்கியமான பங்குண்டு என்பதையும் உணர வேண்டும். ஆதி சங்கரர் இந்து சமயப்பிரிவுகளான 'சைவம்', 'சாக்தம்', 'வைணவம்', 'கணாபத்யம்', 'கௌமாரம்' மற்றும் 'சௌரம்' ஆகிய ஆறினையும் ஒன்று சேர்த்து சண்மதம் என்று பெயரிட்டு, ஒன்று பட்ட இந்து மதத்திற்கு அடி கோலினார். அதற்குக் காரணமென்ன என்று பார்த்தால், ஞானம் பெறுவதற்கு பக்தியானது முக்கியமான சாதனம் என்பது தெளிவாகும். நாம் எல்லோராலும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கருவி பக்தியாகும். தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.(குறள் 249) ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது வெற்று கற்பதனால் வரும் அறிவில்லை. அது புதிதாகக் கற்கும் வெளியறிவும் இல்லை. அது தன்னறிவு. தான் உண்மையில் மெய்ப்பொருள் எனத் தெளியும் மெய்யறிவு. பக்தி இல்லாமல் எத்தனை கற்றாலும், அது வெறும் ஏட்டறிவாக இருப்பதனால், படிப்பது மட்டும் பயன் தருவதில்லை. பக்தியில்லாமல் ஞானமில்லை. ஞானமில்லாமல் முக்தியில்லை. பக்தி, ஞானம் - இவ்விரண்டிலும் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையில்லை. ஞானம் பெற பக்தி கருவி என்றால், பக்திக்கு கருவிகள் யாது? பக்தி பண்ண ஒன்பது வழிகள் இருக்கின்றன - இதனை நவவிதபக்தி என்பார்கள் - சிரவணம் முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்) ஒன்பது வழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் நமக்குப் பிடித்த 'கீர்த்தனம்' என்கிற வழியில் இந்தத் தொடரில் அவன் பரப்பி வைத்த மூர்த்திகளைப் பாடிப் பணிந்து பக்தி பண்ணும் பாடல்களைப் பார்க்கப் போகிறோம், இந்தத் தொடரில். வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால் பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும் அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே! - நம்மாழ்வார் வேதாந்தம் எல்லாவற்றுக்கும் மேலான மிக உயர்ந்த இறை நிலையை 'பிரம்மம்' எனச் சொல்கிறது. ஆனால் அது எப்படி இருக்கும் என எந்தப் படத்திலும் பார்த்ததில்லையே. பின் அதை எப்படிப் பாடுவது. 'சிவன்' என்றால் 'பித்தா, பிறைசூடி' எனலாம். 'திருமால்' என்றால், 'நெடியோனே, வேங்கடவா' எனலாம். பிரம்மம் எப்படி இருக்கும் என கண்டவர் யார், விண்டவர் யார்? யாரிடம் கேட்பது? வேதாந்தத்தில் 'பிரம்மம்' இரண்டு நிலைகளில் விளக்கப்படுகிறது. முதலாவது, 'நிர்குண பிரம்மம்' - அதாவது, குணங்கள் இல்லாத பிரம்மம் குணங்கள் இல்லாததால் - அது கருப்பா, சிவப்பா என்று சொல்ல முடியாது. ஆனால் அதனில் இல்லாத நிறமில்லை. அது நெட்டையா, குட்டையா எனச் சொல்ல முடியாது. இடத்தாலோ, காலத்தாலோ அல்லது வேறு எந்த வரையுறைக்கு உட்படுத்தப்பட்டு குறிக்கிட இயலாதது. அதை உபநிடதங்கள் - "சத்யம், ஞானம், அனந்தம்" என்றும் "சத், சித், ஆனந்தம்" என்றும் பேசுகின்றன. இந்த நிர்குண பிரம்மத்துடன் மாயை சேரும்போது - அது "சகுண பிரம்மம்" என வழங்கப்படுகிறது - அதாவது குணங்கள் கூடிய பிரம்மம். இந்த நிலையில் சகுண பிரம்மத்தினை - சிவனாகவோ, திருமாலாகவோ அல்லது வேறு ஒரு இஷ்ட தெய்வமாகவோ போற்றிப் பாடிட வழி வகுக்கிறது. நம்மால் போற்ற, ஆடிப்பாடி பக்தி செய்ய ஏதுவானதொரு கருணை பொழியும் வதனமாகத் திகழ்கிறது. மாயையுடன் சேர்ந்ததால் சகுண பிரம்மமாக - வழிபாட்டுக்கு உரியதொரு தெய்வம் என்னும் நிலை பெற்று, நாம் அருள் பெற வழி வகுக்கிறது. மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட சொரூபம் தான் இந்த தெய்வங்களாக இருக்க, அந்த தெய்வங்களையே போற்றிப் பாடி, வணங்கி, அவர்களது அருளால் ஜீவனாக இருந்தது, தனது உண்மையான நிலையினை உணரச் செய்திட, மெய்ஞானம் பெற ஏதுவாகிறது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். -பெரியபுராணம். பெரிய புராணத்தின் இந்த துவக்கச் செய்யுளைப் பார்த்தோமேயானால்: முதல் வரியில் : ஓதற்கு அரியவன் - அது நிர்குண பிரம்மத்தினை குறிப்பது. அடுத்த வரியில் : நிலவை அணிந்தவன் - குணங்களைக் கொண்ட சகுண பிரம்மத்தினைக் குறிப்பது. அதற்கு அடுத்த வரியில் : அலகிலாதவன் - மீண்டும் நிர்குண பிரம்மம். இப்படியாக, மாற்றி மாற்றி இவன் இரண்டுமாய் இருப்பவன் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக