ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

பிறப்பதே உலகிற்காக!

பிறப்பதே உலகிற்காக!


நான் யார்?
ரமணர்
பிறந்தன, இறப்பதும்; இறந்தன, பிறப்பதும்; தோன்றுவன, மறைவதும்; மறைவன, தோன்றுவதுமான உயிர் மற்றும் உலக சுழற்சியில், தெய்வீக சக்தி படைத்த மகான்களே காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர். அவர்கள் தான், வாழ்க்கை என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்தி, வாழ்க்கை நிலையற்றது என்றும், வாழும் வரை மற்றவர்களுக்கு நல்லது செய் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்த மகான்களின் வரிசையில் முக்கியமானவர் ரமணர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியில் சுந்தரம் ஐயர்- - அழகம்மை தம்பதியருக்கு, நாகசாமி மற்றும் வேங்கடராமன் என இரு பிள்ளைகள். சுந்தரம் ஐயரின் குடும்பத்தில் யாராவது ஒருவர் துறவியாகி விடுவது வழக்கம். அதுபோல், தன் பிள்ளைகளும் ஆகி விடக்கூடாது என நினைத்த சுந்தரம், அவர்களை படிக்க வைத்தார். இரண்டாவது மகன் வேங்கடராமன் திருச்சுழி சேதுபதி துவக்கப்பள்ளியில், தன் அடிப்படை கல்வியை முடித்தவர், திண்டுக்கல்லில் படிப்பைத் தொடர்ந்தார். இந்நிலையில், வேங்கடராமனின் தந்தை இறந்து விட்டார்.
தந்தையின் உடலை சுற்றி உறவினர்கள் அமர்ந்து, அழுது கொண்டிருக்க, வேங்கடராமனின் மனதிலோ, 'இந்த மரணம் எதனால் ஏற்பட்டது; மரணத்துக்கு பின் தந்தை எங்கே போவார்...' என்ற சிந்தனைகள் தோன்றியது. பின், மதுரையில் தன் சித்தப்பா சுப்பையர் வீட்டில் தங்கி படித்தார்.
ஆனால், அவருக்கு படிப்பில் நாட்டமில்லை. ஒருசமயம், வேங்கடராமனிடம், ஆசிரியர் கேள்வி கேட்க, அவரால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, அதை மூன்று முறை எழுதி வரச்சொல்லி உத்தரவிட்டார் ஆசிரியர். இரண்டு முறை அதை எழுதிய வேங்கடராமனுக்கு, திடீரென, தந்தை இறந்து கிடந்த காட்சி நினைவுக்கு வர, உடனே அதுபற்றி சிந்திக்க ஆரம்பித்தவர், அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதைப் பார்த்த அவரது அண்ணன் நாகசாமி, தன் தம்பி தூங்குவதாக எண்ணி, கண்டித்தார்.
இதனால், சலிப்படைந்த வேங்கடராமன், தனக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக தன் அண்ணனிடம் கூறி, ஊரை விட்டு செல்ல முடிவெடுத்தார். அப்போது அவர் மனதில் தோன்றிய தலம் திருவண்ணாமலை!
மிகுந்த சிரமப்பட்டு, திருவண்ணா மலையை அடைந்தார் வேங்கடராமன்.
அங்கு, தன் உடைகளைக் களைந்து, கோவணம் கட்டிக் கொண்டார். கையில் இருந்த காசுகளை அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில் வீசியவர், ஒரு மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். அவர் மீது கல்வீசி தாக்கினர் சிறுவர்கள். அதையெல்லாம் அவர் உணரவே இல்லை. பின், கோவிலிலுள்ள பாதாள லிங்க சன்னிதியில் சென்று அமர்ந்தார்.
அவரது தியான கோலம் கண்ட சிலர், அவருக்கு சேவை செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், கணபதி முனிவர் என்னும் மகா பண்டிதர் ஒருவர், வேங்கடராமனை தரிசித்து, அவரது அருளைப் பெற்று, அஞ்ஞானம் விலகியவர், அவரை அன்புடன், 'ரமணர்' என்று அழைக்க, அதுவே பின் நிலைத்து விட்டது.
ரமணர் தங்கியிருக்கும் விபரம் தெரிய வந்து, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல திருவண்ணாமலை வந்தார், அவரது தாயார். ஆனால், தாயின் வேண்டுகோளை ரமணர் மறுக்கவே, அந்த அம்மையாரும் அங்கேயே தங்கி, ரமணருக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். எதன் மீதும் பற்று இல்லாமல், பக்தர்களுக்கு நல்லுரை வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்திய ரமணர், ஏப்., 14, 1950ல் இறைவனடி எய்தினார்.
'நீ யார் என்று உன்னை நீயே கேட்டுப் பார்; வாழ்வின் உண்மை புரியும்' என்று கூறி, இவ்வுலக மக்களை நல்வழிப்படுத்தினார் ரமணர்.

திருச்சிற்றம்பலம்
கொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக