செவ்வாய், 12 ஏப்ரல், 2016

சித்திரை சிறப்பு


சித்திரை வருடப்பிறப்பு.. 

  தமிழக மக்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது. சித்திரை வருடப்பிறப்பானது, சித்திரை விஷூ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விஷூ என்பதற்கு, இரவும் பகலும் சமமானது என்று பொருள்.


நவ கோள்களைக் கொண்டே உலக இயக்கம் நடைபெறுகிறது. நவ கோள்களில் தலைமை கோளாக சூரியன் உள்ளார். இந்த சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ   ராசியில் உதயமாகும். இதுவே சித்திரை வருடப்பிறப்பு ஆகும்.

இந்த தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் முன்னெடுக்கும் எந்த நல்ல காரியமும் தங்கு தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். மேலும் லட்சுமி கடாட்சமும், பிறவி துன்ப நீக்கமும், தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் என்று இதனை கண்டறிந்த ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

சித்திரை விஷூ நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் முதலானவை கொண்டு செய்யப் படும் 'மருந்து நீர்' தேய்த்து நீராட வேண்டும். பின்னர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை மனதார தொழுதல் வேண்டும். அத்துடன் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது ஒவ்வொருவரையும் வாழ்வாங்கு வாழச் செய்யும். மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்து பிரகாசம் நிறைந்த வாழ்வு வேண்டியும் வழிபாடு செய்யலாம்.

சித்திரை வருடபிறப்பை கேரள மக்கள் விஷூக்கனி காணல் என்று கொண்டாடுவர். வருடப்பிறப்பிற்கு முதல்நாள் பூஜை அறையை தூய்மைசெய்து வீட்டில் உள்ள பொன், வெள்ளி, நகைகள், பணம், நிலைக்கண்ணாடிகள், வெற்றிலைபாக்கு, மலர்கள், பழங்கள் முதலிய மங்கள பொருட்களை ஒருதட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து இருப்பார்கள். சித்திரை வருட பிறப்பன்று வயதான பெண் குளித்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு, வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்புவார். 

அவர்கள் கண்கள் மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு சென்று கண்களை திறந்து சுவாமி படத்தை வணங்கி தட்டில் வைத்திருக்கும்  பொருட்களை பார்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். இதனை விஷூ கை நீட்டம் என்பர். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்களில் முத்தான வாழ்வு அமையும். மகிழ்ச்சி நிரம்பும். மங்கள பொருட்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை விஷூவை வரவேற்பவர்கள், முன்தினம் வீட்டை சுத்தம் செய்வார்கள். பிறகு பூஜை அறையில் சாமி படங்களுக்கு கீழ் தட்டில் பழங்களை அடுக்கி வைத்து விட்டு படுப்பார்கள். பின்னர் அதிகாலையில் அந்த பழங் களில் தான் கண் விழிப்பார்கள். எப்போதும் கனியின் சுவை போன்று இனிப்பான வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

சித்திரை சிறப்பு

சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. அவற்றில் சில இங்கு...

*     சித்திரை மாதம் வரும் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில்தான் ராமர் பிறந்தார். அன்றைய தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.

*     சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் செய்தார். அன்றைய தினம் மத்ஸ்ப ஜெயந்தியாக நடக்கிறது.

*     சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

*     சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திர புத்திரர் தோன்றினார். ஒவ்வொருவரின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக ஒருவரை, சித்திரம் போல் வரைந்தார் சிவபெருமான். அந்த சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்றவர் சித்திர புத்திரன். இவர் எமதர்மனின் கணக்கராக இருப்பதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன.


*     கள்ளழகர் வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் தான் விழா காண்கிறார்





சுந்தரபாண்டியத்தில் சித்திரை விசு அன்று பெரிய கோவில் என்ற அருள்மிகு வைகுண்டமூர்த்தி சுவாமி கோவிலில் காவடி பூசையும் அ.மி வைகுண்டமூர்த்தி அய்யனார், நடராஜர் சிவகாமியம்மாள் புறப்பாடும் கோவிலில் நடைபெறும்




தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக