ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நேச நாயனார்

நேச நாயனார் - Neasa Nayanar  
குரு பூசை
பங்குனி - ரோகிணி 11,04,2016 திங்கட் கிழமை


சிவனடியார்களுக்கு உடை,கோவணம்,கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.

சாலியர் சமுதாயமும் சைவமும் என்ற கட்டுரையில் சாலியர் சமுதாயத்தினர் சைவ மதத்திலும், சிவனடியார்கள் வாழ்வில் நெருங்கிய பங்களிப்புடனும், இதிகாச காலம் தொட்டே இருந்து வந்தற்கு உதாரணம் தான், நேச நாயனார் என்ற சிவனடியார். இன்று அவருடைய குருபூசைக்குரிய நாளாகும். இன்றைய தினத்தில் அவருக்கு குருபூசைகள் செய்து, அவர் வழியில் சிவத் தொண்டு செய்து இப்பிறவி பயன் எய்துவோம், இவருடைய சிவத்தொண்டினையும் அவரின் வாழ்வு முறைகளையும், தனது வறுமையிலும் சிவத்தொண்டு செய்து, இறைவன் பால் கொண்ட பக்தி நெறியினையும் , எம்பிரான் ஈசன் அவரை ஈர்த்து முக்தி பெற்ற வரலாற்றையும் காண்பாேம்,



சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை
    தாவாத புகழ்நேசர் தஞ்சொ லென்றுங்
கோலியவைந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக்
    கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து வாழ்வார்
சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந்
    திருந்தியவொண் கோவணமுஞ் சேர வீந்து
பாலனைய வொளிநீற்றான் பாத மேத்திப்
    பரலோக முழுதாண்ட பான்மை யாரே.
                    யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்



காம்பீலிநகரத்திலே, சாலியர் குலத்துக்குத் தலைவராகிய நேசநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய மனத்தின் செய்கையைப் பரமசிவனுடைய திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையை ஸ்ரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஆக்கி, கையின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி, வஸ்திரமுங் கீளுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து நாடோறும் அவர்களை வணங்கித் துதித்துக் கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்

சிவனடி யார்களாவார் சிவனடிமைத்திறமொன்றே கண்ணாயிருப்பதன்றித் தமது உடலுயிர் வாழ்வியல் பற்றிய ஏதொன்றையுங் கருதிப் பேணா நிலையினராவர். அது,
 "ஆரங் கண்டிகையாடையுங் கந்தையே 
பார மீசன் பணியல தொன்றிலார்" 
எனத் திருத்தொண்டர் புராணத்தும், 

"மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெலாங் 
கேடுண் டெனும்படி கேட்டுவிட்டோமினிக் கேள்மனமே 
ஓடுண்டு கந்தையுண் டுள்ளே எழுந்தைந்து 
மோதவுண்டு தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே" 

எனப் பட்டினத்தார் பாடலினும் வருவனவற்றாற் பெறப்படும். திருவருள் விட்ட வழி, தமது இன்றியமையாத் தேவைகளாகிய உண்டி உடையாதியன எவரேனும் தாமாக வழங்கினாற் கண்டுகொள்வதே அவர்கள் நிலையாதலின் அவர்களின் அத்தேவைகளை எவருந் தாமாக நினைந்து முன்வந்துதவி அவர்களைப் பேணுதல் சிறந்த சிவ புண்ணியமாகும். இச்சிவ புண்ணியத்தாற் சிவப் பேறுற்ற அமர்நீதி நாயனார் செய்தி ஏற்கனவே அறியப்பட்டதொன்றே.

நேசநாயனார் சாலியர் எனப்படும் நெசவுத் தொழிலாளரா யிருந்தமையின் சிவனடியார்க் குதவும் உடை கீள் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அவர்கள் மகிழக் கொடுக்கும் வாய்ப்புடையராயினார். சிவனால் அருளப்பட்டனவாகிய திரிகரணங்களுஞ் சிவன் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுவன என்னும் ஞான விவேகத்தினால் அவர் தம் மனத்தொழிற் பாடெல்லாம் சிவன் திருவடிகளையே நினைதற்கும் வாக்கின் தொழிற் பாடெல்லாம் அவர் திருநாமமாகிய அஞ்செழுத்தையே ஓதுதற்கும் அர்ப்பணித்துக் கொண்டவராய்க் கையின் தொழிற்பா டெல்லாம் சிவனடியார்க்கு உடை கீள் கோவணம் நெய்வதாகக் கொண்டிருந்த அவரது பத்தி ஒழுக்க மாண்பினை அவர் புராணங் காட்டும். அது, 

"ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி 
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக் காக்கித் 
தாங்கு கைத் தொழிலின் செய்கை தம்பிரானடியார்க்காகப் 
பாங்குடை உடையுங் கீளும் பழுதில் கோவணமுஞ் செய்வார்" என வரும்.

என்ற பாடலிற் கிணங்க, சிவனடியார்களுக்கு நாளும் புதுபுது கோவணம் எனும் அங்கவஸ்திரம் வழங்கியும், தினமும் பஞ்சாட்சர மந்திரம் ஓதியும் தான் செய்யும் நெசவுத் தொழிலை சைவ நெறயுடன் செய்து வந்தார், இவரின் பக்தியினை வியந்து, பங்குனித்திஙகள் ரோகினி நட்சட்திரத்தில் தன் திருவடிக்கு ஆட்கொண்டார், எம்பிரான்.

சாலியர் சமுதாயத்தினரின் தொழிலான நெசவுத் தொழில் அந்த எம்பிரான் ஈசன்  தந்த வரப்பிரசாதம், இத்தொழிலை முதன்முதலில் சாலிய சமுதாயமே ஒழுகி சைவ நெறியுடன் சிவனடியார் தொண்டுடன் வாழ்ந்து வந்ததை நேச நாயனார் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.


திருச்சிற்றம்பலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவருக்கும் இறைவ போற்றி!!
ஓம் நமசிவாய ஓம்

தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக