மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - தவறு கங்கை மேல் அல்ல
தவறு கங்கை மேல் அல்ல
பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. பலநாட்டு மக்களுடன் பழகவும் பேசவும் எனக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அப்போதெல்லாம் இந்தியாவின் ஆன்மீக வளம், இயற்கை வளம், பல்வேறுப்பட்ட கலாசாராம் இருந்தும் காக்கப்படுகிற நாட்டு ஒற்றுமை பற்றியெல்லாம் வெளிநாட்டவர்கள் வியந்து பேசுவார்கள்.
இத்தனை வளங்கள் இருந்தும் நம்நாடு ஏன் செல்வச் செழிப்பு அடையாமல் இருக்கிறது என்று கூடவே என்னை ஆச்சரியத்தோடு கேட்பார்கள். நான் அவர்களுக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்து விடுவேன்.
ஆனால், இதுபற்றி நான் சிந்திக்காமல் இருந்தது இல்லை. எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மைதான் நம்நாட்டு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.
தெரியும் என்ற மனநிலையில் இருந்து இயங்குவதுதான் நமக்குத் தெரியாத விஷயங்கள் நம் கண்ணில் புலப்படும்போதுகூட.. அதை அக்கறை கொடுத்துப் பார்க்க நாம் தவறிவிடுகிறோம்.
இயேசுநாதர் சொன்னதைப் போல கண்ணிருந்தும் குருடர்களாக காது இருந்தும் செவிடர்களாக நம்மில் பலர் இருப்பதால்தான் எல்லா வளமும் படைத்திருந்தும் நம்நாடு செல்வச் செழிப்பு இல்லாமல் இருக்கிறது. இது பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.
அவன் ஒரு சிறந்த மாணவன். இந்திய நாட்டின் பல சிறந்த மகான்களிடம் கல்வி கற்றவன். கங்கை நதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் வருகிறது. அவன் கங்கை எங்கே உற்பத்தியாகிறது... எங்கே குறுகலாய் ஓடுகிறது... எந்த இடத்தில் அகண்ட கங்கையாய் மாறுகிறது, எங்கே வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கிறது... வங்காள விரிகுடாவில் எங்கே சங்கமிக்கிறது என்று சகலவிதமான தகவல்களையும் சேகரித்து அதன் படி ஒரு வரைபடமும் தயார் செய்கிறான்.
இப்போது கங்கையைப் பற்றி சகலமும் தனக்குத் தெரயும் என்ற நினைப்பு அவனுக்குள் வந்து விடுகிறது. அதே மனநிலையில் ஒரு படகில் ஏறி, ரிஷிகேசத்தில் கிளம்பி வங்காள விரிகுடாவை அடைய கங்கை நதியில் அவன் பயணத்தை துவங்குகிறான். தயாரித்து வைத்திருந்த வரைபடத்தில் கங்கை எந்தெந்த இடத்தில் எல்லாம் திரும்பும் என்று குறிப்பிட்டிருந்தானோ அதே மாதிரியே காங்கையும் வளைந்து திரும்பி போய்க் கொண்டிருந்தது. ஆகா... கங்கை நதியின் ஜாதகமே எனக்குத் தெரிந்து விட்டது என்ற மமதை இப்போது பலமாக அந்த மாணவனின் தலையில் ஏறுகிறது.
அந்த சமயம் கங்கை இடது புறமாகத் திரும்புகிறது. மாணவன் திடுக்கிடுகிறான். அவனது வரைபடத்தின் படி அந்த இடத்தில் கங்கை வலது புறமாகத் திரும்ப வேண்டும். ஆனால் தனது வரைபடத்தை தவறு என்பதை மட்டும் அந்த மாணவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கங்கைதான் திடீரென தடம் மாறி ஓடுகிறது என்று சொல்லிவிட்டு அவன் நதியின் மீதே கோபப்படுகிறான். பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து விட்டு ஊர் திரும்புகிறான். தெரியும் என்ற மனோநிலையில் இருந்து செயல்பட்டதால் முழுமையான அனுபவத்தை அவன் பெறவில்லை.
நம்மில் பலரிடம் இருக்கும் இன்னொரு கெட்ட குணம் நம்முடைய தவறுகளை நாம் அவ்வளவு சுலபத்தில் திருத்திக் கொள்வதில்லை என்பது. தவறு என்று தெரிந்தாலும் நமது செயல்களை நியாயப்படுத்துவது. அப்படி நியாயப் படுத்துவதையே ஒரு பெரிய சமார்த்தியமாக நினைப்பது. குதர்க்க புத்தி என்று இதற்குப் பெயர்.
அவன் ஒரு விசிறி வியாபாரி, பனை ஓலையால் ஆன விசிறிகளை விற்றுக் கொண்டு அவன் வீதியில் நடந்து போகிறான். இந்த விசிறி நூறு வருடம்உழைக்கும், அதனால் நூறு ரூபாய் என்று கூவிக் கூவி விற்கிறான். தனது
மாளிகையின் ஜன்னலிலிருந்து இதைப் பார்த்த மன்னனுக்கு ஒரே வியப்பு. மன்னன் விசிறி வியாபாரியை மாளிகைக்கு அழைத்து, என்ன விளiயாடுகிறாயா.. அற்பமான பனை ஓலை விசிறி இது. ஒரே ஒரு ரூபாய் கூடப் பெறாது. இதற்கு நூறு ரூபாயா? என்று கேட்கிறான்.
மன்னரைத் தான் அதிக விலை சொல்லி ஏமாற்ற முயன்றதை ஒப்புக் கொள்ள விசிறி வியாபாரி தயாராக இல்லை. அதனால் அவன், மன்னா... இது அதிசய விசிறி. நூறு வருடம் உழைக்கக் கூடியது. அதனால் தான் நூறு ரூபாய் என்றான். நூறு ரூபாய் கொடுத்து இந்த விசிறியை வாங்கிக் கொள்கிறேன். ஆனால், இது நூறு வருடம் உழைக்கா விட்டால் உன் தலை துண்டாகிவிடும், ஜாக்கிரதை என்று மன்னர் எச்சரித்து அனுப்பினார்.
சந்தேகப்பட்டது போலவே பனை ஓலை விசிறி, சில நாட்களில் கிழிந்து விட்டது. காவலர்கள் போய் விசிறி வியாபாரியைத் தேடி அரண்மனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். மன்னனும் விசிறி வியாபாரியின் தலையை வெட்டச்சொல்லி தீர்ப்பு வழங்கிவிட்டார்.
அந்த நேரம் விசிறி வியாபாரி சொன்னான்.
மன்னா, நான் இறப்பது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், நூறு வருடம் உழைக்கக் கூடிய இந்த விசிறி உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் கிழிந்து போனது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதனால் என் தலையைத் துண்டிப்பதற்குமுன் நீங்கள் இந்த விசிறியை எப்படி உபயோகித்தீர்கள் என்று ஒரு முறை சொல்ல முடியுமா..? என்று கேட்டான்.
சாகப் போகிறவன் என்று மன்னனும் விசிறியை எடுத்து விசிறிக் காட்டினான். விசிறி வியாபாரி பதறுவது போல் நடித்தான். அடடா, இங்கேதான் தவறு நடந்து விட்டது. மன்னா இந்த விசிறி நூறு வருடம் உழைக்கும், இது
உண்மை, ஆனால், இதுபோல விசிறக் கூடாது. விசிறியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு முகத்தை நாம்தான் விசிறியின் முன்னால் ஆட்ட வேண்டும் என்று சொன்னான்.
அந்த வியாபாரி, அதாவது, தொழிலில் நாணயம் காட்டுவதற்கு பதில், செய்த தவறுக்குச் சப்பைக் கட்டு கட்டினான் அவன்.
இப்போது குதர்க்கம் என்பதற்கு அர்த்தம் புரிகிறதா?
மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...
நன்றி ; மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 1 - சுவாமி சுகபோதானந்தா அவர்களின் கட்டுரையிலிருந்து
தொகுத்தது ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக