திங்கள், 4 ஏப்ரல், 2016

எங்கெங்கு காணினும் சிவலிங்கமே


எங்கெங்கு காணினும் சிவலிங்கமே



இறைவன் தன் உண்மை நிலையில் உருவம், பெயர், தொழில் முதலிய ஒன்றும் இல்லாத நிலையில் பரமசிவன் எனப்படுவான். உலகத்துடன் தொடர்பு கொண்டு நிற்கும் பொது நிலையில் இறைவன் கொள்கின்ற அருவம், அருஉருவம், உருவம் என்ற மூவகையே வழிபாட்டிற்குரிய சிறப்பியல்புகளாகும். கண்ணுக்குப் புலப்படாத நிலை, ஞானியர் ஞானத்தால் உணரும் நிலை அருவம் ஆகும். உலக மக்கள் அனைவராலும், காணக்கூடிய நடராசர், தட்சிணாமூர்த்தி, மாதொரு பாகன் முதலியவை உருவங்களாகும்.

கண்ணுக்குப் புலப்படாத அருவ நிலைக்கும், கண்ணிக்குப் புலப்படும் உருவ நிலைக்கும், காரணமாய் அமைந்ததே சிவலிங்கம் ஆகும். சிவம் + லிம் + கம் = சிவலிங்கம். சிவம் என்பதற்கு மங்கலம் என்றும் பொருள் உண்டு. லிம் – லயம், ஒடுங்குதல். கம் – போதல், தோன்றுதல். ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் காரணமான அடையாளக் குறி. ‘கணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்; நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்’ என்பது சேக்கிழார் வாக்கு.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்தமைக்கு அகழ்வுகள் சான்று பகருகின்றன. தொல்காப்பியத்தில் ‘கந்தழி’ என்றும், சங்க இலக்கியங்களில் ‘கந்துடை நிலை’ என்றும் சிவலிங்கம் சுட்டப்படுகின்றது. சிவலிங்கம் – பரார்த்த லிங்கம், ஆன்மார்த்த லிங்கம் என இருவகைப்படும்.
பரார்த்தம் – பிறர் பொருட்டு அமைப்பது. திருக்கோவில்களில், கருவறைகளில் வழிபாட்டில் அமைந்திருக்கும் லிங்கம் பரார்த்தலிங்கம் ஆகும். இத்தகைய லிங்கம் இடம் விட்டு இடம் பெயராததால் அசலிங்கம் என்றும் வழங்கப்பெறும். சலம் – அசைவுடையது. அசலம் – அசைவில்லாதது. பரார்த்தலிங்கம் (1) சுயம்பு லிங்கம், (2) கணலிங்கம், (3) தைவிகலிங்கம், (4) ஆரிடலிங்கம், (5) மானுடலிங்கம் என்று ஐந்து வகைப்படும்.


சுயம்புலிங்கம் – ஒருவராலும் தோற்றுவிக்கப் பெறாமல் இயற்கையாக தானே தோன்றிய லிங்கம். கணலிங்கம் – கணபதி, முருகன் முதலிய சிவகணங்களால் நிறுவப்பெற்று பூசை செய்யப்பட்ட லிங்கம் ஆகும். தைவிகலிங்கம் – நான்முகன், திருமால் முதலிய தேவர்களால் நிறுவப்பெற்று பூசை செய்யப்பட்ட லிங்கம் ஆகும். ஆரிடலிங்கம் – முனிவர், அரக்கர் முதலியோரால் நிறுவப்பெற்று பூசை செய்யப்பட்ட லிங்கம் ஆகும். மானுடலிங்கம் – மனிதர்களால் நிறுவப்பெற்று வழிபாடு செய்யப்பட்ட லிங்கம் ஆகும்.
சிவலிங்கம் – அடிப்பகுதி, நடுப்பகுதி, ஆவுடையார், மேல்பகுதி ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். அடிப்பகுதி நான்கு மூலைகளைக் கொண்டிருக்கும். அடிப்பகுதிக்குப் பிரம பாகம் என்று பெயர். நடுப்பகுதி எட்டு மூலைகளைக் கொண்டிருக்கும். அது விஷ்ணு பாகம் என்று வழங்கப் பெறும். ஆவுடையார் என்ற பகுதி சிவசக்தியாகும்.
சிவலிங்கத்தின் மேற்பகுதி உருண்டு, நீண்டு தண்டு போல் காணப்படும். இதுவே உருவத்தின் பகுதியாகும். பிறப்பு, இறப்பு இல்லாத இறைவன் சோதி வடிவான சிவலிங்கமாக உள்ளான். சிவலிங்கத்திலிருந்து பிரம்மா தோன்றி எல்லா உலகங்களையும் படைத்தார். பின் நாராயணன் தோன்றி காத்தலை மேற்கொண்டார். அதன் பின் உருத்திரன் தோன்றி அனைத்தையும் ஒடுக்கி அழித்தார் என்று லிங்கபுராணம் குறிப்பிடுகின்றது.
சக்தி சிவங்களுக்கு வடிவமாய் உள்ள விந்து, நாதங்களின் வடிவம் இலிங்கம். விந்துவே (சக்தி) பீடம், நாதமே (சிவம்) லிங்கம் என்பதை ‘விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவே பீடம், நாதம் இலிங்கமாம்’ என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
சிவலிங்கத்தின் உருத்திர பாகமாகிய மேற்பகுதி உருண்டை அல்லது எட்டு மூலை அல்லது 16 மூலை என்ற முறையிலும் அமைவதுண்டு. சிவலிங்கத்தின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு (1) ஆட்யலிங்கம், (2) அநாட்யலிங்கம், (3) சுரேட்யலிங்கம், (4) சர்வசமலிங்கம் என்றும் பாகுபாடு செய்வதுண்டு.
ஆட்யலிங்கம் – சிவலிங்கத்தின் உச்சி அர்த்த சந்திரன் வடிவில் இருக்கும். அநாட்யலிங்கம் – உச்சி வெள்ளரிப் பழம் போல் இருக்கும். சுரேட்யலிங்கம் – உச்சி கோழி முட்டை வடிவில் இருக்கும். சர்வசமலிங்கம் – உச்சி குடை வடிவில் இருக்கும்.
சர்வசமலிங்கத்தில் மட்டும் முகலிங்கங்கள் அமைக்க வேண்டும். நான்கு அல்லது ஐந்து முகங்களைக் கொண்ட லிங்கம் அமைக்கலாம். சதாசிவமூர்த்தம் ஆகிய சிவலிங்கமே ஐந்து முகங்களைக் கொண்டதாகும்.
“நடுவு கிழக்குத் தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம், நற்குங்குமம் வன்னம்
அடைவுள அஞ்சனம், செவ்வரத்தம், பால்
அடியேற்கருளிய முகம் இவை அஞ்சே”
 (திருமந்திரம்).
நடுஉச்சி முகம் வடகிழக்குத் திசையை நோக்கியிருக்கும், படிகம் (பளிங்கு) நிறமாக இருக்கும். ஈசானமுகம் என்று பெயர். உலகம் எல்லாவற்றையும் ஆளுதல் செய்து அருள் செய்வது. ஈச் – ஆளுதல், ஆன என்பது விகுதி.
கிழக்கு நோக்கிய முகம் குங்கும நிறம். கோங்கு மலர் நிறம், பொன்நிறம் என்றும் குறிப்பிடுவது உண்டு. தற்புருடம் என்று பெயர். தேவசரீரம், மானுட சரீரம் முதலிய அந்தச் சரீரங்களிலே அதிட்டித்து நிற்பது. தத் – அந்த, புருடம் – புரத்திலிருப்பது, புரம் – சரீரம்.


தெற்கு நோக்கிய முகம் கரிய நிறம், அகோரம் என்று பெயர். அ + கோரம்; கோரம் – கடுமையில்லாதது.
வடக்கு நோக்கிய முகம் செம்மணி நிறம், அல்லது செவ்வரத்தம்பூப் போன்ற நிறம், வாமதேவம் என்று பெயர். அறம், பொருள், இன்பங்களை ஆன்மாக்களுக்கு கொடுக்கும் ஒளிமயமானது. வாமம் – அறம், பொருள், இன்பம். தேவம் – ஒளியுடையது.
மேற்கு நோக்கிய முகம் பால் போன்றது, வெண்மையானது. சத்தியோசாதம் என்று பெயர். உடம்பை உயிர்களுக்கு உடனே தோற்றுவிப்பது. சத்ய – உடனே, சாதம் – பிறப்பு.
“வடாது குணக்கினை நோக்குமுகம் பளிங்கு
வரைபெயர் ஈசானம், கிழக்கெதிர்முகம் கோங்கலரே
தடாதபெயர் தற்புருடம், வலத்தோள்மேல் தென்பால் தனை
நோக்கும் மயிர்சூழ்ந்தமுகம் கரிது அகோரம்
விடாதிடத் தோள் மிசை யுதக்குத் திசை நோக்கும் தெரிவை
மிளிர்முகம் செம்மணி நிறம் சொற்பெயர் வாமம், எழுத்தில்
குடாதெரிந்த முகம் வெண்மை சத்தியோசாதம்
கொண்டுரைக்கும் பெயரிந்த ஐந்து முகத்தோடும்”
என்று கச்சியப்ப முனிவரும் குறிப்பிட்டுள்ளார். ‘நிறங்களோர் ஐந்துடையாய்’ என்பது திருவாசகம்.
நான்கு முகங்கள் கொண்ட சிவலிங்கம் – ஈசானம் ஆகிய நடு உச்சிமுகம் தவிர, ஏனைய தற்புருடம் (கிழக்கு), அகோரம் (தெற்கு), வாமதேவம் (வடக்கு), சத்தியோசாதம் (மேற்கு) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இரண்டு முக லிங்கத்தில் தற்புருடம், சத்தியோசாதம் ஆகிய இரண்டு மட்டும் அமைந்திருக்கும் . ஒருமுக லிங்கத்தில் தற்புருடம் மட்டும் இருக்கும்.
திருக்கோயில் கருவறையில் சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்தாற்போல உலோகத்தால் அமைத்து வழிபடுவது இன்றைய வழக்கில் உள்ளது. சுத்த மாயையின் தோற்றமான ஐந்து கலைகளைக் குறிக்கும். மலத்தை நீக்குவதால் கலை என்று பெயர். கலித்தல் – நீக்குதலும் செலுத்தலிமாம் என்பது சிவஞானமாபாடிய உரை.
1. நிவிர்த்திக் கலை – ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து விடுவிப்பது.
2. பிரதிட்டாக் கலை – ஆன்மாக்களை முத்திக்குச் செலுத்துவது.
3. வித்தியா கலை – பந்த நிலை (கட்டு நிலை) நீங்குய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைக் கொடுப்பது.
4. சாந்தி கலை – அனுபவ ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய எல்லாவற்றையும் சாந்தமாகச் செய்வது.
5. சாந்தியதீத கலை – விருப்பு, வெறுப்பு நீங்கிச் சாந்தமாக நின்ற ஆன்மாக்களுக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற நிலையை உண்டாக்குவது.


திருவருளை வாரி வழங்கும் இறைவனுக்குக் குறியீடாக்ச் சிவலிங்கத்தின் மேல் ஐந்துதலை நாகப் படங்களை அமைப்பது ஐந்து கலைகளைச் சுட்டுவதாகும். சிவலிங்கத்திலேயே நமசிவாய என்ற மந்திரத்தை அமைத்துக் காட்டும் முறையும் உண்டு. மேற்குமுகம் ஆகிய சத்தியோசாதம் ‘ந’, வடக்கு முகம் ஆகிய வாமதேவம் ‘ம’, தெற்கு முகம் ஆகிய அகோரம் ‘சி’, கிழக்கு முகம் ஆகிய தற்புருடம் ‘வா’, உச்சி முகம் ஆகிய ஈசானம் ‘ய’ – என்ற ஐந்தெழுத்து, ஐந்து முகங்ளாயின.
“நகரமே சத்தியோ சாதமுகம் நாடின்
மகரந்தான் வாம்ம மதிக்கில் – பகருங்கால்
சிகாரம் வகாரம் அகோரம் புருடன்
யகாரம் ஈசானமுகம் என் “
என்று மறைஞான சம்பந்தர் சிவஞான சித்தியார் உரையில் இப்பாடலைக் காட்டியுள்ளார்.
சிவலிங்கத்தின் பீடம் சத்தியாகும். பீடமும் பலவகையான முறையில் அமைந்திருக்கும். பீடம் நாற்கோணமாயிருந்தால் இயக்கச் சத்தியாகும். பீடம் அறு கோணமாயிந்தால் கிடத்தற் சத்தியாகும். பீடம் வட்டமாயிருந்தால் இருத்தற் சத்தியாகும்.

இலிங்க வகைகளில் பாணலிங்கம் என்ற சிறப்பான இலிங்கவகையும் உண்டு. பாணன் என்னும் அரக்கன் சிவபூசையில் மிக ஈடுபாடுடையவன். நாள்தோறும் ஆயிரம் சிவலிங்கங்களைப் பூசிப்பது என்றமுறையில் பதினான்கு கோடி சிவலிங்கங்களைப் பூசித்து புண்ணிய நதி, மலைப்பகுதிகளில் அவற்றை பிரதிட்டை செய்தான். கங்கை முதலிய புண்ணிய நதிகளில் அடித்து வரப்பெறும் மொழுமொழு என்று வழவழப்பாய் இருக்கும் லிங்கத்தை இன்று பாணலிங்கம் என்று எடுத்து வந்து பிரதிட்டை செய்து வழிபடுகின்றனர். நாவற்பழத்தின் நிறம், தேன் நிறம், வண்டு நிறம், காவிக்கல் நிறம், கொவ்வைக்கனி நிறம், நீல நிறம், பச்சை நிறம், பழுப்பு நிறம் முதலிய பலவகைகளில் பாணலிங்கம் உண்டு.

திருமூலர் – அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஆத்துமலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம் ஆகிய லிங்கங்களை விரிவாகப் பாடியுள்ளார். பெற்றோர்கள் சாயல் அவரிடம் பிறந்த பிள்ளைகளுக்கும் இருப்பது போல் பூமி, சூரியன், சந்திரன் முதலிய அண்டங்களும், பிண்டங்களும், முட்டைகளும், காய்கனிகளும், பூக்களின் அண்டாசயங்களும், கார்த்திகைத் தீப முதல் நம் வீடுகளில் எரியும் விளக்குச் சுவாலை வரை காணும் சோதி வடிவங்களும், யோகிகளின் யோகத்திருவுருவங்களும் பிறவும் ஏகதேசம் சிவலிங்க வடிவமாகவே காணப்படுகின்றன.


ஆகவே, இவை தோன்றுவதற்குக் காரணமாகிய இறைவனும் இத்தகைய ஒரு திருவுருவமாகிய சிவலிங்க உருவத்தினையே கொண்டுள்ளான் என்பதை நிச்சயிக்கலாம் என்று நாகர்கோயில் ஆறுமுக நாவலர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
வேப்ப மரத்தின் காய், பழம், சிவலிங்கம் வடிவாகவே காணப்பெறும். வேப்பம்பழம் கீழே விழுந்து கிடந்தால் சிவலிங்கம் காலில் மிதிபடுமே என்று எண்ணி வரகுண பாண்டியன் வேப்ப மரங்களுக்கெல்லாம் விதானம் அமைத்தான் என்று பட்டினத்தார் பாடியுள்ளார். குற்றாலத்தில் பலா மரத்தடியில் குறும்பலா வீசர் வீற்றிருந்து அருள் செய்து வருகிறார்.
பலாமரத்தின் கிளை, பலாப்பழச் சுளை, சுளைக்குள் இருக்கும் கொட்டை அனைத்தும் சிவலிங்கம் என்று திரிகூடராசப்ப கவிராயர் பாடியுள்ளார். கொங்கு நாட்டில் வெள்ளியங்கிரி மலை புகழ்வாய்ந்த மலை. உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக உள்ளார். சுற்றிலும் நான்கு சிறுமலைகள் உள்ளன. ஐந்து மலைகளும் ஐந்து முகங்கொண்ட சிவலிங்கம் என்று கச்சியப்ப முனிவர் பேரூர்ப் புராணத்தில் பாடியுள்ளார்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவசித்தானந்தா  தத்துவக்கட்டுரை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக