புதன், 6 ஏப்ரல், 2016

பட்டிணத்தார் தத்துவப்பாடல்கள்

பட்டிணத்தார் தத்துவப்பாடல்கள்



      இளமை  முதலே  இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் 
சொல்லப்படுகின்றது.  வானுலக  தேவர்களில்  ஒருவரான  குபேரன் தான் இப்பூவுலகில்  பட்டினத்தாராக   அவதரித்தார்  என்று திருவெண்காட்டுப் புராணம்  கூறும்.  இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர்.

     கப்பல் வணிகம் மூலம்  பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக உரிய  வயதில்  ஞானகலாம்பை  சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார்.

     இல்லற  வாழ்க்கை   இனிதே   நடந்தாலும்  குழந்தையில்லா  ஏக்கம் திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே குழந்தை  வடிவாய்  சிவசருமர்  என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச் சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார்.

     குழந்தை    பெரியவனானதும்   வியாபாரம்   செய்ய   அனுப்பினார். 
திரைகடலோடித்  திரவியம்  தேடிச்  சென்ற  மருதவாணன் கப்பல் நிறையத் தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.

மருதவாணனுக்குப்   பித்துப்   பிடித்து   விட்டதோ   என்றஞ்சிய  அவர் 
வீட்டினுள்ளே  சிறை  வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள் வைரக்கற்கள்  சிதறின.  தவிடெல்லாம்  தங்கமாக  மின்ன திகைத்துப்போன திருவெண்காடர்  தம்  மகனைப்  பாராட்டத்  தேடுகையில்  அவரோ  தம் அன்னையாரிடம்  சிறு  பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டிருந்தார்.

     மைந்தன்  கொடுத்துவிட்டுச்  சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும் ஓர்  ஓலைச்சீட்டும்  இருந்தது.  அதில்  ‘காதற்ற  ஊசியும்  வாராது  காண் கடைவழிக்கே’*  என்று  எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து  கொண்ட  திருவெண்காடர்  தமது  மைந்தனாக  இதுநாள் வரை இருந்தது  திருவிடைமருதூர்  பெருமான்தான்  என்பதை  உணர்ந்து  மனம் 
வருந்தித் துறவறம் பூண்டார்.

     *“காதற்ற  ஊசியும்  வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின் இந்த  வாசகமும்  பாடலும்  புதுச்சேரி  கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது.

     இந்தத்  துறவு  நிலை  வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை  பொருளாசை,   பெண்ணாசை,   வித்தையாசை  என்று  மனம்   ஆசையின் வாய்க்கப்பட்டு   அலைக்கழிப்புற்ற   நிலையை   அழகிய   கண்ணிகளாகப் பாடுகின்றார்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா 
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா” 

“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா” 
“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”

“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே” 

“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே; 
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே” 

“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே; 
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே” 

“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே 
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே” 

“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே 
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”

     இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே; 
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே” 

காமக் குரோதம் கடக்கேனே என்குதே 
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே 
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே 

என்று அழுகிறார்.

 நேற்றிருந்தோர்   இன்று   இல்லை.   கண்ணுக்குக்   கண்ணெதிரே 
உடல்களெல்லாம்  கட்டையில்  வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமான தென்று  எண்ணி  நிரந்தரமாக   இருப்போமென்று   எண்ணி  ஆங்காரம் கொள்ளுகிறதே,  நீர்க்குமிழி  போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத் தங்காதே. பெண்ணாசை மனதை அணுஅணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே. அரும்பு  விழியழகும்,  குதம்பை முலையழகும் உரகப்படத் தல்குல் அழகும், 
‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’.

கன்னி வனநாதா ! கன்னி வனநாதா ! 
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?

கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? 
சீரியாய்க் கீடமாய்க் கெட்ட நாள் போதாதோ? 
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? 
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ? 
அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ? 
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள்போதாதோ? 
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?            (18-24)

“பிறப்பைத் தவிர்த்தையிலை புண்ணாக் கொண்டையிலை 
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை”

என்று கூறி கன்னி வனநாதா என்னை உன்னோடு அழைத்துக்கொள் என்று கெஞ்சுகின்றார். இறைவன்  அவ்வளவு  சீக்கிரம்  அழைத்துக்  கொள்வாரா  என்ன? இன்னும்  அவரது  அருட்புலம்பலைக்  கேட்கும் ஆசைப்பேறும் முதல்வன் முறையீட்டைத் தொடர்ந்து அருட்புலம்பலும் தொடர்கின்றது.

குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ? 
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ”(13)

“முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி 
தன்னை யறியவே தான் ஒருத்தி யானேண்டி” (21)

“சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன் 
மாணிக்கத்துள் ஒளிபோல் மருவி இருந்தாண்டி” 
உள்ளுண்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி (54)

உடலும் உயிரும்போல் உள்கலந்து நின்றாண்டி    அந்த இறைவன் 
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள்ஒளி காண் 
பேசாமல் இருக்கும் பிரமம் இது என்றாண்டி”

என்று தாமறிந்தவற்றை கூறிப் புலம்புகின்றார். இந்தத் துறவியை இனி நாம் பட்டினத்தார் என்றே குறிப்பிடுவோம்.  காவிரிப்பூம்பட்டினத்துப்  பெருஞ்செல்வந்தராய்  வாழ்ந்த  சிறப்பு  நோக்கி இவரை எல்லோரும் பட்டினத்தார் என்றே அழைத்தனர்.

     இவரது  பாடல்களில்  பெரும்பாலும்  திருவாசக  மணமும் நிறைந்து 
காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

“புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ? 
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? 
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ? 
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?            (21-22)

என்ற வரிகள் மாணிக்கவாசகரின்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் 
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”

என்ற சிவபுராண வரிகளை நினைவூட்டுகின்றன.

     இன்னும்  சில  பாடல்கள்  இராமலிங்க  அடிகளாரின்  பாடல்களை 
மனத்தினில் நிழலாட வைக்கின்றன.

“தன்னை அறிந்தேன்டி ! தனிக்குமரி ஆனேன்டி 
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?

என்ற  வரிகள்  இராமலிங்கரின்  ‘தனித்திருக்க மாட்டேனடி’ என்ற பாடலை நினைவுறுத்துகின்றன.

     மொத்தத்தில்  இறைவனை  உருக  வைப்பதில்  மாணிக்க  வாசகரும், இராமலிங்க அடிகளாரும் கலந்த கலவை இந்தப் பட்டினத்தார் எனலாம்.

துறவுக்கோலத்தில்  வீடு  வீடாய்ப்  பிச்சையெடுத்து  உண்டு திரிவது 
பட்டினத்தாரின்  சகோதரிக்கு  வருத்தத்தை  ஏற்படுத்தியது.  இப்படிப்பட்ட அவமானத்தைத்  தேடித்  தரும் தம்பி  தனக்கு  இருந்தென்ன செத்தென்ன என்ற எண்ணத்துடன்  பட்டினத்தாரை  விஷம்  கலந்த ஆப்பம் கொடுத்துக் கொல்லப் பார்த்தாள்.

     தமக்கையின்  கருத்தை  அறிந்த பட்டினத்தார், ‘தன்னப்பம் தன்னைச் சுடும்;  வீட்டப்பம்  ஓட்டைச்  சுடும்’  என்று  கூறி  வீட்டின்  கூரை  மீது அப்பத்தினை வீச அவ்வீடு தீப்பிடித்து எரிந்தது.

     இப்படித்  துறவியாய்த் திரிந்த காலத்து அன்னை இறந்த துயர் கேட்டு அங்கே சென்று பச்சை வாழை மட்டை மீது அன்னையின் உடலைக் கிடத்தி திருப்பதிகம்  பாடித் தீயெழுப்பித் தம் அன்னையாருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியை  செய்து  முடித்தார்.  இவ்வளவு  நாட்கள்  அவ்வூரில்  சுற்றித் திரிந்தது இதற்காகத்தானே.

     இவர் பாடிய இந்த தகனப்பாடல் புதுச்சேரியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  இறுதி  ஊர்வலப்  பாடலாய்த்  திருவாசகத்துடன்  சேர்த்துப் பாடப்படுகிறது.  இது  வேறு எந்தச் சித்தர் பாடலுக்கும் இல்லாத சிறப்பாய்க் கருதப்படுகிறது.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு 
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை 
எப்பிறப்பிற் காண்பே னினி”

என்று  ஓதுவார் பட்டினத்தாரின்  இந்தப் பாடலைப்  பாடும்போது உயிரற்ற அந்த உடலை இன்னொரு தரம் பார்க்க வைக்கிறது.

     பிணம்  சுடுவதற்கு  முன்போ   அல்லது   புதைப்பதற்கு   முன்போ 
வாய்க்கரிசி  இடுதல்  என்ற  சடங்கு  உண்டு. உறவும் சுற்றமும் வாய்க்கரிசி இடும் நேரத்தில் ஓதுவார் அல்லது பரியாரி இந்தப் பாடலைப் பாடுவார்.

“அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு 
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள 
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ 
மானே யென வழைத்த வாய்க்கு”

என்று  வாய்க்கரிசி   இடுபவர்   மனம்   அழும்  ஆசையை  இப்பாடல் 
எதிரொலிக்கிறது.  அன்னை உடல் எரிக்குள் மூழ்குவதே சரி  என்று  நினைத்த   பட்டினத்தார்   அவ்வுடலைப்   புதிய  முறையில் 
பாட்டாலேயே தகனம் செய்கிறார்.

“முன்னை யிட்ட தீ முப்புரத்திலே 
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில் 
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே 
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே”

     தீக்கடவுள்   பட்டினத்தாரின்    வாக்குக்குப்   பணிந்து    உடலைத் 
தீக்கிரையாக்கினான்.   அப்போது   பட்டினத்தாருக்கு   உடல்   பதறுகிறது. வெந்தழலில் வேகும் அவ்வுடலைப் பார்த்து,

“வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் 
ஆகுதே பாவியே னையகோ - மாகக்

இப்பொழுது அவர் மனம்  ஏறத்தாழ பக்குவ நிலைக்கு வந்து விட்டது. 
உடற்  சாம்பல்   சேகரிக்கப்படுகிறது.   இனி   என்ன?  நேற்று  உடலாய் நடமாடினாள். இன்று சாம்பலாய்த் தோற்றம் தருகிறாள். இதுதான் வாழ்க்கை  என்று சமாதானமடைகிறார்.

 இவ்வாறு தனது துறவற வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் பட்டிணத்தடிகள். பற்றற்ற இத்துறவி தனக்கென்று ஒரு திருவோடு வைத்திருந்தது கண்டு இவர்  இந்த திருவோட்டையும் தனது பற்று வைத்திருப்பதை சுட்டிக்காட்டியவர்க்கு இத்திருவோட்டையும் தூக்கி எறிந்து விட்டு தன் கைகளிலேயே உணவு வாங்கி உண்டு காலம் தள்ளி வந்தார்.
அப்போது அவர்பாடிய பாடல் 
உடை கோவணமுண்டு உறங்கப் புறந்திண்ணையுண்டு உணவு   இங்கு
அடை காய் இலை உண்டு அருந்தத் தண்ணீர் உண்டு அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த மேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே
"

பட்டினத்தார் கூறுகிறார் கேளுங்கள் ...
“”பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை  எல்லாம் 
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத் 
தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை சொல்லி 
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே 

 என்று பாடினார், தனக்கென எதுவும் வேண்டாம் என்பது இப்பாடல், இது மட்டுமல்ல, இனி உற்றார், உறவினர் யாரும் தனக்கு சதமல்ல என்கிறார்.

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. என்றார்.

இத்துடன் மட்டுமல்ல இறைவனிடம் தான் செய்த குற்றங்களை மன்னித்திட வேண்டும் என்று புலம்பும் பாடல்கள்.

கொன்றேன் அனேகம் உயிரையெலாம் பின்புகொன்றுகொன்று 
தின்றேன் அதன்றியும் தீங்குசெய்தேனது தீர்க வென்றே 
நின்றேனின் சன்னிதிக்கேஅத னாற்குற்றம் நீபொறுப்பாய் 
என்றேஉனைநம்பினேன் இறைவாகச்சி ஏகம்பனே

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே 

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே

பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

 ஒரு நாள் தான் ஒரு கிராமத்து வயல்வெளியில் வரப்பில் தலைவைத்து படுத்திருந்த பட்டிணத்து அடிகளை அவ்வழியே சென்ற இரு பெண்கள், இவரை கண்டு, சாடையாக, இவர் என்ற எல்லாம் துறந்தவரா, இன்னும் அரச சுகபோக வாழ்வு இவரை விடவில்ைலயே ? இன்னும் தலைக்கு சுயத்திற்காக வரப்பையும் தனது கையையும் வைத்துத்தானே தூங்குகிறார், என்றாளாம், இதனைக்கேட்ட பட்டிணத்தார், உடனே எழுந்து தரையில் மல்லாக்கப் படுத்தாராம், இதனை அறிந்து சாடை பேசிய இருபெண்களில் ஒருத்தி, இவர் இன்னும் துறவற வாழ்க்கை மேற்கொள்ள வில்லை, நாம் பேசுவதை இனனும் கவனித்துக் கொண்டுதானே உள்ளார், என்ற கூற்றையும் அடிகளார் கேட்டு தான் மனம் வருந்தி இவ்விடம் விட்டு நகர்ந்தாராம்.
  சிலகாலம் கழித்து ஒரு கிராமத்தில் தான் தங்கிருந்தபோது, அக்கிராமத்தில் ஒரு குடியானவனின் மகனுக்கு திருமணம் ஏற்பாடாகி, மணம் முடிந்தவுடன் இந்த மணமக்களை வாழ்த்த ஒரு மகானைத் தேடி வந்தார்,மணமகனின் தந்தையார், அவர் பட்டிணத்து அடிகள் இருப்பதை அறிந்து, தன் மகனு்ககு வாழ்த்துரை வழங்க அழைத்தார். அதற்கு அடிகளார் " ஐயா நானோ பரதேசி, அதிலும் முற்றும் துறந்த பரதேசி, என்னால் தங்கள் மகனை வாழ்த்த இயலாது, ஒரு சமுகத்திலுள்ள, இல்வாழ்க்கையில் உள்ள பெரியோரை வாழ்த்தச் செய்யுங்கள் " என்று மறுதத்துள்ளார், ஆனாலும் அக்குடியானவன் விட்ட பாடிலில்லை. எனவே மண மேடைக்கு வந்து வாழ்த்த வந்தார், அப்போது அவருக்கு அங்கிருப்போர் எல்லாம், மனிதர்களாகவே தெரியவில்ைலயாம். அவரரவர்களின் குணங்களின் தன்மைக்கேற்ப வேறு உருவங்களாகவே காட்சி தந்தார்களாம். இருப்பினும், மணமக்களை இப்பாடல் கொண்டு வாழ்த்தினாராம். அப்பாடல் 

நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
 ......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
 பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 ......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
 காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் 
 ......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
 ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
 ......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே...   
    என்றுபாடியுள்ளார்,


இப்படி அவர் மனதில் பட்டதை பாடி மனித வாழ்வின் தத்துவங்களை நமக்கு விட்டுச்சென்ற அடிகளின் தத்தவக்கருத்துக்கள் என்றும் நம்மை விட்டு நீங்கா.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை. சுந்தரபாண்டியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக