புதன், 13 ஏப்ரல், 2016

பிணிகளை குணமாக்கும் வைத்தீஸ்வரன்

பிணிகளை குணமாக்கும் வைத்தீஸ்வரன் 

‘புள் இருக்கு வேளூர்’




உலகில் தோன்றிய உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உடலின் அமைப்பும் , உடல் இயக்கமும் அமைந்துள்ளன.

மனித குலத்தில் வயது? வாழ்விடம்? உணவுப் பழக்க வழக்கத்துக்கு ஏற்றபடி உடல் அமைப்பும்? இயக்கமும் இருந்தாலும், பல காரணங்களால் அவைகளில் மாற்றம் ஏற்படும்போது அதனை நோய் என்று சொல்கிறோம். உடல் இலகுவாக இயங்கவும், மனிதனின்  ‘உள்ளம்’ இறுக்கமின்றி இருக்கவும் அந்த நோய் நீங்க வேண்டும். 

நோய் நீங்க பல வழிகள் இருப்பினும் ஆதிகாலம் தொட்டு இறைவன் என்ற மூலப் பரம்பொருளிடம் இருந்து சித்தர் களும், முனிவர்களும் தாங்கள் உணர்ந்து அறிந்தவைகளைக் கொண்டு, ஏடுகளில் எழுதி வைத்து மருத்துவம் செய்து மனித சமுதாயத்துக்கு மகத்தான தொண்டு ஆற்றி உள்ளனர்.

நோய் தீர்க்கும் அற்புதத்தை சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் கற்றுக் கொடுத்த இறைவனே, வைத்தியர்களின் நாதனாக, வைத்தீஸ்வரனாக இருந்து பூலோக மக்களுக்கு நன்மை அளித்து வருகிறார். 

ஆம்! சிவபெருமான் வைத்தியநாதராக வீற்றிருந்து வினைதீர்க்கும் தலம் தான், ‘புள் இருக்கு வேளூர்’ எனும் வைத்தீஸ்வரன் கோவில். இறைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு அருள்பாலிக்கும் தலம் இதுவாகும். இறைவனும், அம்பாள், தையல் நாயகி என்ற திருநாமத்துடன் கையில் தைல பாத்திரமும், வில்வ மரத்தடி மண்ணும் ஏந்தி காட்சியளிக்கிறார். பள் + இருக்கு + வேள் + ஊர், புள் என்ற சடாயு என்ற பறவையும், இருக்கு என்ற வேதமும்,வேள் ஆகிய முருகப் பெருமானும், ஊர் = சூரியன் ஆகியோர்  வழிபட்ட தலம் என்பதால், இதற்கு புள் இருக்கு வேளூர் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிது.



 நோய் நீக்கும் தலங்கள் என்றாலே அதில் முதன்மையாகவும், முழுமையானதாகவும் வரக்கூடியது இந்த வைத்தீஸ்வரம் தான். பெயரிலேயே எல்லாம் அடங்கி இருக் கிறதே! இவ்வாலயம் பக்தர்களுக்கு ஓர் பாலி கிளினிக். மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொண்டு மருந்து சாப்பிட்டாலும், மனது நம்பிக்கையுடன் இருந்தால்தான் வியாதிகள் தீரும். அத்தகைய நம்பிக்கையை தரும் ஆலயமாக இந்தத் திருத்தலம் விளங்குகிறது.

மேற்கு திசை நோக்கி வைத்திய நாதரும், தெற்கு திசை நோக்கி நின்று தையல்நாயகி அம்பிகையும் திருவருள் வழங்கும் பெருங்கோவில். இந்தத் தலத்தில் பதினெட்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. இருப்பினும் அம்பாள் சன்னிதிக்கு எதிரே, திருக்கோவில் வளாகத்தின் உள்ளேயே, சுற்றிலும் அழகிய மண்டபங்களுடன் காட்சிதரும் ‘சித்தாமிர்த தீர்த்தம்’ என்னும் திருக்குளம் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது.

செல்வ முத்துக்குமரன்

சிவபெருமானின் உள் பிரகாரச் சுற்றில் தென்புறம் கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகரும், வடபுறம் சிவசக்தியின் செல்லப் பிள்ளையாக அருணகிரிநாதர், குமரகுருபர் ஆகியோர் பாடல் பெற்ற பெருமைக்குரிய ‘செல்வ முத்துகுமரன்’ வள்ளி– தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கார்த்திகை தோறும் இரவில் தங்கத்தேரில் முருகன் வலம் வரும் காட்சியை கண்டு தரிசிக்கலாம். 

அடுத்தடுத்த சன்னிதிகளில் கஜலட்சுமியும், அஷ்டலட்சுமியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இவர் களுக்கு அருகே நடராஜர் சபை உள்ளது. கோஷ்ட தேவதைகளாக துர்க்கை தேவியும், தென்புறம் நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னிதியும், மேலே விமானத்தில் சீர்காழி சட்டைநாதர் திருக்காட்சியும், எதிரே விபூதி நிறைந்த ஜடாயு குண்டமும் சிறப்புடன் விளங்குகின்றன.  

ஆலய பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியபடி ஒன்பது கிரகங்களும் ஒரே வரிசையில் நிற்கின்றன. எங்கே இறைவன் அருளாட்சி உயர்ந்து கோள்கள் வலிமை குறைந்து இருக்கின்றனவோ, அங்கேதான் நவக்கிரங்கள் இப்படி ஒரே வரிசையில் இருக்குமாம். இந்தத் தலத்தில் வைத்தியநாதரின் ஆணைக்கு கட்டுப்பட்டு கிரகங்கள் இயங்குகின்றன. 

தென்கிழக்கு பகுதியில் வைத்தியநாதரை வழிபட்டு முக்தி அடைந்த, மருத்துவ சித்தரான தன்வந்திரி சன்னிதி அமைந்துள்ளது. இது இத்தலம் வந்தால் நோய் நீங்கிவிடும் என்ற தன்நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்து கிறது.

நோய் நீங்க இத்திருத்தலம் வரும் பக்தர் களுக்கு விபூதியும், திருச்சாந்துருண்டையும் வழங்கப்படுகிறது. சுக்ல பட்சத்தில் ஒரு நன்னாளில் அங்க சந்தான குளத்தின் மையத்தில் உள்ள மண்ணை எடுத்து, புதுப்பாத்திரத்தில் வைத்து விபூதி குண்டத்தில் உள்ள விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தையும் கலந்து வில்வ இலை, வேம்பு இலை மற்றும் சந்தனக் குழம்பினையும் சேர்த்து அரைத்து மாத்திரைகளாகத் தயார் செய்கின்றனர். இதனை அம்பிகை திருவடியில் வைத்து மந்திரம் சொல்லி உரு ஏற்றி நோய் பாதிப்புள்ள பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். 

இந்தத் திருக்கோவிலுக்கு வந்து மனமுருக தையல் நாயகியையும், வைத்திய நாதரையும் வணங்கி விட்டு, இந்த மாத்திரையை நம்பிக்கையுடன் பெற்றுச் சென்று சாப்பிடுவது சிறப்பு.

வேப்பமரம் 

இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அடர்ந்து பரந்து கம்பீரமாக நிற்கும் வேப்பமரம் காட்சியளிக்கிறது. இது ‘நோய் தீர்க்க நானிருக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லி, தன்னுடைய மூலிகைக் காற்றை வருபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறது. மற்ற சிவத்தலங்களில் இல்லாத சிறப்பாக, மருத்துவ குணம் கொண்ட வேப்பமரம் இந்த ஆலயத்தில் தல விருட்சமாக இருக்கிறது. 

இந்த இடத்திற்கு ஆதி வைத்திய நாதபுரம் என்ற பெயரும் உண்டு. 

‘இத்தாரணியில் எவருடைய நோய் பிணியும்
சித்தாமிர் தக்கரையில் தீருமே – சக்திதையல் 
மாதுக் கியைந்த வைத்தியரே நீர்மருந்தை 
ஏதுக்கு மண்ணாக்கி னீர்’ என்ற பாடல் மூலமாகவும்,

‘திறன் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் 
வாராம 
 அறங் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் 
அமருமிடம் 
 செடியாய  உடல்தீர்ப்பான் தீவினைக்கோர் 
மருந்தாவான் 

 பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூர்’ என்ற பாடலும் இந்த தலத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைக்கின்றன. இது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற நல்வாக்காகும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ராமலிங்க அடிகள், சிதம்பரநாத முனிவர், காளமேகப் புலவர் உள்ளிட்ட பலரும் பாடல் புனைந்த, காவிரி வடகரைத் தலங்களில் 16–வது தேவார திருத்தலமாக, இந்த ஆலயம் சிறப்புற்று விளங்குகிறது.

புள்ளிருக்கு வேளூர்

ராமாயண காவியத்தின் தலைவனாக ராமபிரான், தன்னுடைய பெரிய தந்தையாக ஏற்றுக் கொண்ட ஜடாயு என்னும் பறவை (புள்) இங்கே தகனம் செய்யப்பட்டுள்ளது. 

நால்வகை வேதங் களில் முதன்மையான ‘இருக்கு’  (ரிக்) வேதம் இறைவனை வழிபட்ட தலம் இது.

‘வேள்’ – முருகப் பெருமான் செல்ல முத்துக்குமரனாக இங்கே எழுந்தருளி தந்தை வைத்தியநாதரைப் பூசித்து பேறுபெற்ற திருத் தலம். 

எனவே தான் இந்தத் தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ளது.

செவ்வாய் என்னும் அங்காரகன் தனிச்சன்னிதியில் இருந்து, பக்தர் களின் தோஷம் நீக்குவதால் ‘அங்காரக ஷேத்திரம்’ என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இந்தத் திருக்கோவில் தருமபுர ஆதீனகர்த்தரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

வைத்திய நாதருக்கு ஒரு கதை உண்டு. அவருடைய வியர்வைத் துளியிலிருந்து உதித்த குஜன சென் தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது இங்கு வந்து நீராடி பிணி நீங்கப் பெற்றதாக ஐதீகம். மனித இனத்தை எல்லாப் பிணிகளிலிருந்தும் நீக்கு வதற்காக இங்கு குடிகொண்டுள்ளார். அதனால்தான் வைத்தியநாதர்.

அடுத்து தையல் நாயகி அம்மன். சர்வ ரோக நிவாரணியாக அம்மன் தைலப் பாத்திரத்துடனும், சஞ்சீவி மற்றும் வில்வ மரத்து மண்ணுடனும் ஐயனுடன் இங்கு வந்து அமர்ந்தாராம். தைலாம்பிகையாக உருப்பெற்றார். இந்தச் சந்நிதி ஈஸ்வரன் சந்நிதிக்கு செங்குத்தாக தெற்கு நோக்கி உள்ளது. நேராக வந்தால் பெரிய குளம். பெயர் சித்தாமிர்த தீர்த்தம். இங்குதான் அங்காரகனும் வேறோர் அரசனும் குளித்து நோய் நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. முனிவர் சாபத்தால் இன்றளவும் குளத்தில் பாம்புகளோ தவளைகளோ கிடையாதாம். குளத்தைச் சுற்றி அழகான மண்டபம். அதிலிருந்து கோபுர தரிசனம் அபாரம்.

நீர் நிலை, அதனருகே கோவில் கோபுரம், அங்கும் இங்கும் மரங்கள், உள்ளே அருளாளன் இதுவே காண்போர் மனதை லயிக்க வைத்து அந்தராத்மாவை இறைவனுடன் இணைத்துவிடும்.

கோபுரத்தைத் தாண்டிக் கோவிலினுள் சென்றால் முதலில் வருவது அங்காரகன் சந்நிதி. செவ்வாயன்று விசேஷ அபிஷேகம். புதிதாக மணமானவர்களும், மணமாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களும் அங்கே பரிகாரம் செய்யக் குழுமியிருக்கிறார்கள். மறுபடியும் கோவிலைச் சுற்றுகிறோம். எத்தனை தடவை சுற்றினாலும் நம் தவிப்பு அடங்காது போலிருக்கிறது. சாந்து உருண்டை என்ற பலகை தெரிகிறது. மணலையும் தீர்த்தத்தையும் கலந்து இறைவனுக்கும் படைத்துப் பின் வழங்கப்படுகிறது. காலையில் நீராடி சுத்தமாக உட்கொண்டால் பிணி தீரும் என்கிறார்கள். விட்டுப் போன ராமர், குமரகுருபரர், பராசக்தி போன்றோர் சந்நிகளை வலம் வருகிறோம். கடைசியில் பிரசாதம் (லட்டு) வாங்கிக் கொண்டு சதாபிஷேகம் திரும்புகிறோம். லட்டுவைப் பிட்டு உண்கிறோம்.

தமிழ் போல் இனிக்கிறது.தென்னாடுடைய சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அல்லவா?

வரலாறு ; அங்காரகனுக்கு தீரா நோய் வந்து, கஸ்டப்படும் போது, ஒரு அசீரீர் வாக்கு கேட்டதாம்,அது வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று, அங்குள்ள சித்தார்அமிதத்தில் குளித்து வைத்தீஸ்வரனைவணங்கினால் நோய் குணமாகும் என்ற வாக்கைக் கேட்டு, அவன் அங்கு சென்று வழிப்ட்டதால் நோய் குணமானதாம், இந்த வைத்தியத்திற்கு சுவாமி தைல மருந்து  தயார் செய்யும் போது அம்பாள் தைல பாத்திரம் கொண்டு வந்த படியால், அம்மாளுக்கு தைலநாயகி என்ற பெயர் வந்தது.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்திருக்கும்.

நாகை மாவட்டத்தில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். மயிலாடுதுறையிலிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் வடக்கிலும், சீர்காழியில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

திருச்சிற்றம்பலம் / ஓம்நமசிவாய 
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக