ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மைலாப்பூர் கபாலீஸவரர் கோவில் திருவிழாக்கள்

சென்னை மைலாப்பூர் கபாலீஸவரர் கோவில் திருவிழாக்கள்



திருகுடமுழுக்கு நடைபெறும் இத்தருணத்தில் இக்கோவில் பெருமை சேர்க்கும், திருவிழாக்கள் பற்றிய வரலாறு சிறப்பு ,திருஞானசம்பந்தர் மைலாப்பூர் கபாலீஸ்வரரர் கோவிலில் அன்றைய நாளிலிருந்து இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் திருவிழாக்கள் பற்றி தனது பாடல் வாயிலாக தெரிவித்தமையினை இங்கு காண்போம்.
  அன்றைய நாளில் திருமைலாப்பூரில் சிவபக்தியுடையவரும், செல்வந்தருமான, சிவநேசர் என்பார், தனக்கு வாரிசாக ஒரு மகவு இல்லாதுகண்டு வருத்தமுற்று  தனக்கு வாரிசு வேண்டி அரும்பெரும் சிவபூசைகள் செய்து, இறைவரின் அருளினால் ஒரு பெண் குழந்தை பெற்று அதற்கு பூம்பாவை என்னும் நாமம் வைத்து, சிவபக்தியாக அவளையும் வளர்த்து வந்தார். அவளுக்கு அவளுக்குப் பெதும்பைப் பருவம் வந்தபின், தந்தையார் அவளுடைய குணாதிசயங்களைக் கண்டு வியப்புற்று, மனமகிழ்ந்து "இவளை விவாகஞ்செய்பவரே என்னுடைய அளவிறந்த திருவியங்களுக்கு உரியவர்" என்றார். அந்நாட்களிலே, திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாண்டிநாட்டிற்சென்று செய்தருளிய திருவருட்டிறங்களெல்லாவற்றையும் அறிந்தவர்கள் வந்து, சிவநேசருக்குச் சொன்னார்கள். சிவநேசர் அதைக் கேட்டு மனமகிழ்ந்து, அவர்களெல்லாருக்கும் அளவிறந்த திரவியங்களைக் கொடுத்து, பிள்ளையாரைத் திக்குநோக்கி நமஸ்கரித்து, எழுந்து நின்று, தம்முடைய சுற்றத்தார்கள் சமஸ்தருங்கேட்க, "அடியேன் என்னுடைய புத்திரியாகிய பூம்பாவையையும் திரவியங்களையும் என்னையும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குக் கொடுத்து விட்டேன்" என்று சொல்லிப் பேரானந்தம் அடைந்தார். ஒருநாள், பூம்பாவை சேடியரோடு கன்னிமாடத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற பூஞ்சோலையிற் சென்று பூக்கொய்யும் பொழுது ஒரு பாம்பு மல்லிகைப் பந்தரிலே மறைந்து வந்து, அவளுடைய விரலிலேகாளி, காளாத்திரி, யமன், யமதூதி என்னும் நான்கு தந்தங்களும் எலும்பிலே தாவக் கடித்து, நஞ்சை உகுத்து, மேலே படத்தை விரித்து நின்றாடி, அடங்கிற்று. பூம்பாவை மயங்கி விழ; சேடியர்கள் அச்சுற்று அவளைத் தாங்கி, கன்னிமாடத்தினுள்ளே இறந்து போனாள்.பல வைத்தியர்கள் வைத்தியம் செய்தும் பலன் இல்லை. சிவநேசர் ஒருவாறு தெளிந்து, "இந்த விஷத்தை நீக்கினவர்களுக்கு என்னுடைய அளவிறந்த திரவியங்களைக் கொடுப்பேன்" என்று பறையறைவித்தார்.சிவநேசர் அதுகண்டு மயங்கி, பின்பு, "இவளைப் பிள்ளையாருக்கு என்று சொல்லியதனால் நான் துன்புறவேண்டுவதில்லை" என்று துன்பநீங்கி, "பிள்ளையார் வருமளவும் இவ்வுடலைத் தகனஞ் செய்து, எலும்பையும் சாம்பரையும் சேமித்து வைப்பேன்" என்று துணிந்து, அப்படியே தகனஞ்செய்து எலும்பையும் சாம்பரையும் ஓர் குடத்தில் இட்டு கன்னிமாடத்திலே வஸ்திரஞ்சாத்தி ஆபரணங்கள் அணிந்து பஞ்சணைமேல் வைத்தார். தினந்தோறுந் தவறாமல் மஞ்சனம், மாலை, சந்தனம், அன்னம், விளக்கு முதலியவைகளை அமைத்தார். அதனை அறிந்த யாவரும் வியப்புற்றார்கள்.
  இப்படி நிகழும் நாளில் திருஞானசம்பந்தர் சிவதலங்கள் தரிசித்து விட்டு திருவெற்றியூர் தரிசனம் முடித்து, திருமைலாப்பூர் வந்தடைந்ததை சிவநேசர் அச்செய்தி அறிந்து ஞானசம்பந்தரை கண்டு வணங்கி பூம்பாவைக்கு நிகழ்ந்தது பற்றியும் இவளுடைய அஸ்தி இன்னும் இருப்பது பற்றியும் சம்பந்தரிடம் கூறினார், இது கண்டு சம்பந்தர் மனம் இறங்கி அவ்வஸ்தியினை வெந்த சாம்பரும் எலும்பும் நிறைந்த குடத்தை எடுத்து, மூடுகின்ற இரத்தினச் சிவிகையிலுள்ளே வைத்து, சேடியர்கள் சூழ்ந்து செல்லும்படி, எடுப்பித்துக் கொண்டு வந்து, திருக்கோபுரத்துக்கு எதிரே சிவிகையை நீக்கி, அக்குடத்தை எடுத்து, சிவலிங்கப்பெருமானுக்கு அபிமுகத்திலே வைத்து நமஸ்காரம் பண்ணினார்."பூம்பாவாய்" என்று விளித்து "பூமியிலே மானுடப்பிறப்பு எடுத்தவர்கள் பெரும் பயன் அன்புடனே சிவபெருமானுடைய அடியார்களைத் திருவமுது செய்வித்தலும், சைவாகமவிதிப்படி செய்யப்படுகின்ற அவருடைய திருவிழாவைத் தரிசித்து ஆனந்தம் அடைதலுமே என்பது சத்தியமாயின், நீ இவ்வுலகர்முன் வருவாய்" என்று "மட்டிட்டபுன்னை" என்னுந் திருப்பதிகத்தை எடுத்தருளினார். அதில் அருளிச் செய்யப்பட்ட "போதியோ" என்னுந் திருவாக்காகிய அமிர்தம் அவ்வங்கத்திலே பொருந்த; அது குடத்தினுள்ளே சரீரமாய்ப் பரிணமித்தது. பூம்பாவை முதற்றிருப்பாட்டிலே வடிவு பெற்று வேறெட்டுப் பாட்டிலே பன்னிரண்டு வயசடைந்து குடத்தினுள் இருந்து எழுந்தருளினாள்.
  பிள்ளையார் சிவநேசரை நோக்கி, "இனி உம்முடைய புத்திரியை வீட்டிற்குக் கொண்டுபோம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். சிவநேசர் பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கித் துதித்து, "சுவாமி! அடியேன் அருமையாகப் பெற்ற இப்புத்திரியைத் தேவரீர் திருமணஞ்செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; பிள்ளையார் அவரை நோக்கி, "நீர் பெற்ற பெண் விஷத்தினால் இறந்த பின், நாம் சர்வான்மாக்களும் உய்யும்படி அவர்களுக்குச் சிவபெருமானது திருவருண்மகிமை விளங்கும் பொருட்டு உற்பவிப்பித்தமையால் இவ்வார்த்தை தகாது" என்று மறுத்தருளினார், பின் பூப்பாவை இனி தனக்கு மணம் கிடையாது என்று அறிந்து தெய் சன்னிதானம் சென்று ஜோதியாகி மறைந்தாள். இந்நிகழ்வு திருமைலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியாகும். சம்பந்தர் இங்கு "மட்டிட்ட புன்னையா் கானல் " என்ற  பாடலில் இங்கு இறைவருக்கு நடக்கும் திருவிழாக்களை வரிசைப்படுத்தி பாடியது இதன் சிறப்பாகும். பாடல்கள்

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

அட்டு - திருவமுது அமைத்து. இட்டல் - இடுதல்.(நட்டல் - நடுதல் போல) இதிற் குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது. இத்திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும் திருவிழாச் சிறப்பு மேல் வரும் பாக்களிற் குறிக்கப்பட்டமை உணர்க.

ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்

திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?

"தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ"

கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

"ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்."

 கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?

நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழா

"நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்."

கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சி

பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்

கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழா

பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழா

கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ

கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழா

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே



கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழா,
 ஆண்டுதோறும் கும்பாபிடேகம் புரிவது எளிதன்று. அதற்கீடாகப் பவித்திரோற்சவமே நிகழ்த்துவதுண்டு. இவ்விழா ஆனி முதலிய மூன்று திங்களிலும் நிகழும். நிகழவே ஆண்டுமுழுதும் மயிலைக் கபாலீச்சரத்தில் திருவிழா உண்டு என்றவாறு. பவித்திரோற்சவம் ஆடி முற்பக்கத்துச் சதுர்த்தசியிலும், ஆவணி புரட்டாதிகளில் இருபக்கத்திலும் வரும் எட்டு பன்னான்கிரண்டு நாள்களிலும் பவித்திரம் சாத்தல் வேண்டும்.
  இன்றளவும் இத்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன 

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக