வியாழன், 14 ஏப்ரல், 2016

நிலவின் ஒளியை மறைத்த மெழுகுவத்தி

நிலவின் ஒளியை மறைத்த மெழுகுவத்தி

       அவன் ஒரு அரசன். தான் என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச் சென்றபோது, காட்டிலே ஒரு துறவியைச் சந்தித்தான். கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார் துறவி.

"நான் பல நாடுகளை வென்று, என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால், என் கஜானா நிரம்பி வழிகிறது. அந்தப்புரம் எங்கும் நான் கவர்ந்து வந்த மாற்று தேசத்து அழகிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்?" அரசன் கேட்டான்.

தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக 'நான் செத்தால் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்...' என்று சொல்லிவிட்டு கண்களை மூடி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

நான் எத்தனை பெரிய அரசன்.. . என்னையே அவமானப்படுத்துகிறாயா? என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல், துறவியைக் கொல்வதற்காக இடுப்பிலே இருந்த கத்தியை உருவினான்.

"அட மூடனே! நான் என்றால் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை.... நான் என்ற இறுமாப்பு செத்தால்தான் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்..." என்று துறவி விளக்கினார்.

நம்மைவிடப் படிப்பிலோ, பதவியிலோ, செல்வத்திலோ குறைவானவன் என்று நாம் மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒருவர்  ஒரு விவாதத்தின் போது நாம் சொல்லும் கருத்துக்கு ஆமாம்.. . சாமி போடாமல் மாற்றுக் கருத்தைச் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்ள நம் ஈகோ இடம் கொடுப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற ஈகோ உடையவர்கள், நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்... நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்... என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால்தான் இவர்கள் சந்தோஷப்படுவார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால், இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர்பார்த்திருப்பார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால், எனக்கு மரியாதை கொடு... என்று மற்றவர்களிடம் மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள். மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் இவர்களுக்குக் கொடுக்க மறுக்கும்போது இவர்களின் அமைதி பறி போய் விடுகிறது. சந்தோஷம் தொலைந்து விடுகிறது.



நமது வேதங்கள் ஆண்டவனை ஆனந்தம் என்று குறிப்பிடும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் 'Ediging God Out' என்பதன் சுருக்கம்தான் Ego.. அதாவது, நம்மைவிட்டு ஆண்டவன்... அதாவது ஆனந்தம் வெளியேறும் நிலைதான் ஈகோ!

கடவுளே, நான் என்ற அகங்காரத்தை இதோ உனக்கு எதிரே உடைத்து விடுகிறேன்.. என்று நமக்கு நாமே உணர்த்தத்தான் தேங்காயை ஒரு அடையாளப் பொருளாகக் கோயிலிலே உடைக்கிறோம்.

தேங்காயின் கடுமையான ஓடு உடையும் போது எப்படிச் சுவையான இளநீர் வெளிப்படுகிறதோ. அதே மாதிரி நமது அகங்காரம் என்ற ஈகோ உடையும்போது சந்தோஷம் வெளிப்படும்.

அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மத்தியிலோ உங்களின் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதை அழுத்தமாகவும் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்ன கருத்து எடுபடவில்லை. நீங்கள் ஈகோ இல்லாதவராக இருந்தால். இதுபற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்... உங்களின் கருத்தை மற்றவர்கள் பாராட்டினாலும் சரி, கிண்டல் செய்தாலும் சரி, ஏற்றுக் கொண்டாலும் சரி, கண்டு கொள்ளாவிட்டாலும் சரி இதனால் பாதிக்கப் படாமல் இருப்பீர்கள்.

கவிர் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.

ஒரு முறை படகில் ஏறி, யமுனை நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர். அது இரவு நேரம். படகிலே இருந்த சின்ன அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர் கவிதை எழுத முற்பட்டார்.

ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை... பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி விளையாடியது. கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்தது தான் தாமதம்.. . நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக ஒளிர்வது தெரிந்தது.

இதைப் பார்த்ததும் தாகூருக்கு கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.

இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்...?

ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ, அதே மாதிரிதான் ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை அது மறைத்து விடும்.

தொகுத்தவர் ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ;  மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்  சுவாமி சுகபோதானந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக