ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தண்டியடிகள்

தண்டியடிகள் - Thandiadigal ( நாயன்மார்கள் குருபூசை)
குரு பூசை பங்குனி - சதயம் 04.04.2016 திங்கட்கிழமை (இன்று)

திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்.
சோழமண்டலத்திலே, திருவாரூரிலே, தண்டியடிகணாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பிறவிக்குருடர். அவர் தம்முடைய அகக்கண்ணினாலே சிவபெருமானைத் தரிசித்துத் தோத்திரம் பண்ணுகின்றவர். எப்பொழுதும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபிக்கின்றவர். அந்தத் திருப்பதியிலுள்ள பூங்கோயிலைக் காலந்தோறும் வலஞ்செய்து வணங்குகின்றவர்.
இப்படியிருக்கு நாளிலே, அவ்வாலயத்துக்கு மேற்றிசையில் இருக்கின்ற திருக்குளம் பக்கமெங்கும் சமணர்களுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டு சேதமடைந்து குறைவடைந்தமையால், தண்டியடிகள் அதனை அறிந்து, அத்திருக்குளத்தைத் தாம் செப்பனிட வேண்டும் என்று நினைந்து, அவ்விடத்திற்சென்று திருக்குளத்தினுள்ளே கல்லுமிடத்தில் ஒருதறி (கம்பை) நட்டு, அதிலே கயிறு கட்டி, கரையிலும் தறி நட்டு, அக்கயிற்றினுனியை அதனில் இசையக் கட்டி, மண்வெட்டியையும் கூடையையும் எடுத்து, அக்கயிற்றைத் தடவிக் கொண்டு சென்று, மண்ணைக் கல்லிக் கூடையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் அக்கயிற்றைத் தடவிப் போய்க் கரையிலே போடுவார் இப்படித் தினந்தோறும் மிகுந்த விருப்பத்துடன் திருக்குளங் செப்பனிடும் பொழுது, சமணர்கள் பொறாமை கொண்டு அவரை அணைந்து, "மண்ணைக் கல்லிற் பிராணிகள் இறந்துபோம்; வருத்தல்வேண்டாம்" என்று சொல்ல தண்டியடிகள் "அவிவேகிகளே! இதுமெய்க் கடவுளாகிய பரமசிவனுக்குச் செய்யுங்குற்றமற்ற புண்ணியம். இதனருமை உங்களுக்கு விளங்குமா? என்றார். அது கேட்ட சமணர்கள் "நாஞ்சொன்ன தருமமுறையைக் கேட்டாயில்லை. நீ கண்ணேயன்றிக் காதினையும் இழந்தனையோ" என்று சொல்ல; தண்டியடிகள் "மந்தபுத்தியும் காணாக்கண்ணும் கேளாச் செவியும் உங்களுக்கே உள்ளன" என்று சொல்லி, "திரிபுரதகனஞ் செய்த கடவுளுடைய திருவடிகளையேயன்றி வேறொன்றையும் நான் காணேன். அதனையறிதற்கு நீங்கள் யார்? அக்கடவுளுடைய திருவருளினால் உலகமெல்லாம் அறியும்படி என்கண் காணவும் உங்கள் கண் குருடாகவும் பெற்றால், நீங்கள் யாது செய்வீர்கள்? என்றார் சமணர்கள் "நீ உன் கடவுளது அருளினால் கண்பெற்றாயாகில், நாங்கள் இவ்வூரில் இரோம்" என்று சொல்லி, அவருடைய மண்வெட்டியைப் பறித்துக் குறித்தறிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகள் மிகக்கோபங்கொண்டு, திருக்கோயில் வாயிலிலே சென்று நமஸ்கரித்து, "எம்பெருமானே! தேவரீரை நிந்தனைசெய்யும் அதிபாதகர்களாகிய சமணர்கள் இன்றைக்குத் திருக்குளங்கல்லுதலாகிய சிவ புண்ணியத்தையும் அதனைச் செய்யப்பெற்ற அடியேனையும் அவமானஞ் செய்தமையால், அடியேன் அது பொறாது மிக வருந்துகின்றேன் சர்வ சாமர்த்தியமுடைய தேவரீர் இவ்வருத்தத்தை நீக்கியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து, நமஸ்காரஞ்செய்து, தம்முடைய திருமடத்திற்குசென்று, அழுதுகொண்டிருந்தார்.
அன்றிரவு அவர் நித்திரை செய்யும் பொழுது, பரமசிவன் அவருக்குச் சொப்பனத்தில் தோன்றி "தண்டியே உன் கவலையை ஒழி, நாளைக்கு உன் கண் காணவும் அந்தச் சமணர்களுடைய கண்கள் மறையவும் அருள் செய்வோம் பயப்படா தொழி" என்று அருளிச் செய்து, சோழராஜாவுக்கும் சொப்பனத்திலே தோன்றி "தண்டியென்பவர் நமக்குக் தீங்கானவனல்லன், சமணர்கள் அதுகண்டு பொறாது, அப்பணிக்கு விக்கினஞ் செய்தனர் நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாய்" என்று ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். சோழராஜா விழித்து எழுந்து, பரமசிவனைத் தோத்திரஞ்செய்து சூரியன் உதித்தபின் தண்டியடிகளை அடைந்து தாங்கண்ட சொப்பனத்தைச் சொல்ல தண்டியடிகள் "மகாராஜாவே! நான் திருக்குளங்கல்லும்போது சமணர்கள் வந்து, அது தருமம் அன்றென்று பல சொல்லி நான் நட்ட குறித்தறிகளைப் பிடுங்கி, என்னை வலிசெய்து, மண்வெட்டியைப் பறித்துகொண்டார்கள். இன்னும் "நீ கண்ணேயன்றிக் காதினையும் இழந்தலையோ" என்றார்கள். அதற்கு நான் நம்முடைய சிவபெருமானது திருவருளினால் என் கண்காணவும் உங்கள் கண்கள் மறையவும் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள் என்று கேட்க; "நாங்கள் இந்த ஊரில் இரோம் என்று ஓட்டினார்கள். இனி நிகழ்வதைக் கண்டு, நீர் இந்த வழக்கை முடித்தல் வேண்டும்" என்றார். அப்பொழுது அரசன் சமணர்களை அங்கே அழைத்துக் கேட்க, அவர்கள் அதற்கு உடன்பட்டார்கள். அதுகண்டு, தண்டியடிகள் முன்செல்ல; அரசன் பின்சென்று திருக்குளக் கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி "சிவபத்தரே! நீர் பரமசிவனது திருவருளினாலே கண்பெறுதலைக்காட்டும்" என்று சொல்ல தண்டியடிகள் "சிவபெருமானே மெய்க்கடவுளும் சிறியேன் அவருக்கு அடியானுமாயின் இவ்வரசனுக்கு முன்னே நான் கண்பெற்றுச் சமணர்கள் கண் இழப்பார்கள்" என்று சொல்லி, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு திருக்குளத்திலே முழுகிக் கண்பெற்றெழுந்தார். சமணர்களோ கண்ணிழந்து தடுமாறினார்கள். அதுகண்ட அரசன் தன்னேவலாளரை நோக்கி, "தண்டியடிகளுடனே ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அவ்வாறே துரத்தலும் சமணர்கள் கண்காணாமையால் மனங் கலங்கிக் குழியிலே விழுவார்கள். "கோலும் இல்லையோ" என்பார்கள். "இது வழி என்று தூற்றை அடைவார்கள்" "பொய்ப் பொருளை மெய்ப்பொருளெனக் கொண்டு அழிந்தோம்" என்பார்கள்; பாய்களை இழப்பார்கள்; பீலிகளைத் தடவிக்காணாமல் திரும்புவார்கள்; மயங்கி நிற்பார்கள்; காலும் கையும் முறியக் கற்களின்மேல் இடறி விழுவார்கள்; மிக நெருங்கி ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்வார்கள்; ஓடுவதற்கு வழியறியாது மயங்குவார்கள்.
இந்தப் பிரகாரம் சமணர் கலக்கங்கண்டு அவர்களை ஓடத்துரத்தியபின்னர், சோழராஜா சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் பறித்து, திருக்குளத்துக்கு கரைகட்டி, மனமகிழ்ந்து, தண்டியடிகளை வணங்கிக் கொண்டு போயினான். அவர் பரமசிவனைத் தியானித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து, திருத்தொண்டு செய்துகொண்டிருந்து சிவபதம் அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம் டாட் காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக