புதன், 6 ஏப்ரல், 2016

பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு


பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு 

 அசுத்த மாயையிலிருந்து மெய்,வாய்,கண்,மூக்கு,செவி, ஆகிய ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலங்களும் வாய், கை, கால், கருவாய்,எருவாய் என்ற ஐந் தொழில் உறுப்புகுளும்
உடம்பு என்ற தத்துவத்தில் பிரதிபலிக்கிறது, சித்தமே அனைத்து தத்துவங்களின் தோற்றமாக இருக்கிறது. உடம்பின் உள்ளே ஓடி ஓடி கலந்துள்ள பரம்பொருளைத் தேடித்தேடி கிடைக்காமல் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர்.

   பரம்பொருள் எங்கேயும் இல்லை, உடம்பு என்ற கோவில்தான் உள்ளது, ஐம்புலங்களை வசப்படுத்தினால் பரம்பொருளை நாம் உணரமுடியும்.இதனை திருமந்திரத்தில் திருமூலர் 
" உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம் பாலயம் 
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் 
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்ம் 
கள்ளப் பலன் ஐந்தும் காள மணிவிளக்கே. " திருமூலர் 


  நமது மனமே பெரிய கோவில் அக கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு அன்பர்கள் குறிப்பறிந்து கொடுத்தருளும் இறைவனுக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்கு ஆன்மாவே சிவலிங்கமாகும், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலங்களும் அழகிய விளக்காகும்,ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம் உடலிலேயே உள என்பதாகும், 
  
  இறைவன் ஆன்மாக்கின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான், இதேபோல் இன்னும் ஒரு பாடல் மூலம் ஐம்பெரும் பூதங்களால் அமைந்ததே உடம்பு என திருமந்திர பாடல்

 " உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் 
விரவிய தன்முலை மேவியகீழ் அங்கி 
கருமுலை மீமிசை கைக்கீழில் காலாம் 
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே." 


     உடம்பைத் தாங்கும் பாதங்கள் மண் ஆகும், பாதம் முதல் கொப்பூழ் வரை நீர் ஆகும், கொப்பூழிலிருந்து மார்பு வரை பொருந்ததியது தீயாகும், மார்பிலிருந்து தோள் வரை காற்றாகும், கழுத்துக்கு மேல் ஆகாயமாம், உலகம் மண், நீர்,தீ, காற்று, ஆகிய ஐந்து பொருட்களால் ஆனது அதுபோல உடலங்களும் ஐம்பெரும்பூதங்களால் ஆனவை. மனித உடலை ஞான சூத்திரம் என்ற நூலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்ப்போம், 

  மனிதனுடைய முதுகுத்தண்டு மகாமேரு மலை போன்றது,அதன் உச்சி என்பது இரு புருவங்களும் கூடும் இடமான நெற்றி நடுநிலையாகும், நடுநிலைக்கு நேராக உச்சி குழுயையும் உண்ணாக்கையும் இணைத்துக் கொண்டு ஒரு நுண்ணிய துவாரம் இருக்கிறது. அதற்கு பிரம்மரந்திரம் என்று பெயர், அந்த துவாரத்தின் உள்ளே நெற்றியில் இருந்து ஏழு திரைகளுக்கு அப்பால் அமுத கலைகள் நிறைந்தும் பகலும், இரவும் அற்றதும், சத்-சித்-ஆனந்த சிற்சக்தியான சிவலிங்க சொரூபமான ஜீவன் ஜோதியாக ஒளிர்கிறது, மனித இயக்கத்ததிற்கு சீவன் இதுவே. ஆதியும் அந்தமுமாய் விளங்கும் சிவலிங்கம் ஜோதியே இறைவன், நம் உடம்புக்குள் இருப்பதைக் காண முயற்சிக்க வேண்டும், இந்த முயற்சியில் வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். நெற்றி நடுநிலையில் இறைவனை தாம் தெளிவாக கண்டதாகவும் அதனால் நெற்றியில் திருநீறு குங்குமம், சந்தனம், கஷ்தூரி முதலியவைகளை இட்டு கொண்டு இறைவனை வழிபடுவதாகவும் சித்தர் தன்வந்திரி ஒரு பாடல் மூலம் கூறியிருக்கிறார். 

   நெற்றியில் திருநீறு குங்குமம், ஏன் இட்டு கொள்ள வேண்டும் என்பது புரிகிறது அல்லவா? சித்தர்களைப்போல ஞானப் பயிற்சியால் உடம்புக்குள்ளே இறைவனைக் கண்டு முத்தி பெறுவோம், நாம் நமது குடும்பம் என்பது சந்தோசமானது என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே மரணம் நம்மை ஆட்கொண்டு விடுகிறது, உடல் தரையில் கிடக்கிறது. ஆனால் உயிர் எங்கோ போய் விடுகிறது. வாழ்க்கை நிலையில்லாதது, என்று தினமும் கண்டு கொண்டு இருந்தாலும், வாழ்க்கை மாயை என்பதை உணர மறுக்கிறோம். பஞ்சபூதங்களால் உடம்பை நாம்அறிய முயற்சிக்காமல் பரம்பொருளைக் காண வேண்டி எங்கெங்கோ தேடினால் கிடைக்கமா? மனதைத் திறந்து தேடினால் பரம்பொருளைக் காண முடியும், யோகியர்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிடம் ஐக்கியம் அடைவதை யோகம் என்று கூறுகிறார்கள். யோகத்தை அடைய எட்டு வழிகள் என்றும்கூறி இருக்கிறார்கள். இயமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற நிலைகளாகும். 











   



இயமம்: இயமம் என்பது அகிம்சை, சத்தியம், களவின்மை, பிரம்மச்சரியம், சம்மார்க்கம், தயை, பொறுமை, துணிவுடைமை, மிதமான உணவு,செளசம், என்று பத்து அம்சங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது. 

நியமம்: நியமம் என்பது தவம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, நாணம், தானம், தேவபூசை, சித்தாந்த சிரவணம், புத்தி, ஜபம், ஹோமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆசனம்: ஆசனம் என்பது பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், வீராசனம் என்று கூறப்பட்டுள்ளது.

பிராணாயமம்: பிராணாயமம் என்பது பிராண வாயுவை கட்டுப்படுத்தி தன் முயற்சியால் இயங்க வைப்பது, அதில் இரண்டு வகை அடிக்கடி வெளியே செல்கிற காற்றை பதினாறு மாத்திரை கால அளவு ஜபத்தியானாதிகளோடு உள்ளே வாங்கி, ஜபத்தியானங்கள் செய்து சகர்ப்பம் என்று கூறப்படுகிறது, ஜபத்தியானங்கள் இல்லாமல் பிராணாயம பயிற்சிகளை பயிலும் போது உடல் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்கினால் மத்திமம் என்றும் தரையை விட்டு எழும்புமானால் உத்தமம் என்றும் கூறப்படுகிறது, அதற்கு விகர்ப்பம் என்று பெயர், 

பிரத்யாஹாரம்: பிரத்யாஹாரம் என்பது உத்தம குணங்கள் நிரம்பப் பெற்று தான் எண்ணிய விருப்பங்களை அடையும் வரையில் இந்திரயங்களை வெளியே செல்லவிடாமல் தடுத்து தன் வசப்படுத்திக் கொள்வதாகும், 

தாரணை: தாரணை என்பது பிராண வாயுவை கால் கட்டை விரல்கள், முழங்கால்கள் தொடைகள் மூலாதாரம், இருதயம் போன்ற இடங்களில் விதிமுறையாக நிறுத்துவது, 

தியானம்: தியானம் என்பது இறைவனோடு மனதை லயிக்க செய்து அசைவற்றிருக்கும் நிலையாகும். 

சமாதி: சமாதி என்பது ஜீவாத்மா ஆனவன் பரமாத்மாவில் இருந்து வேறுபட்டவன் அல்ல என்று சமத்துவ ஐக்கிய பாவனை செய்து கொண்டு எப்போதும் இருக்கும் நிலையாகும், 
இவைகளையே அஷ்டாங்க யோக லட்சணம் என்று யோகிகள் கூறுகிறார்கள், ஜீவாத்மாக்கள் இறைவனை காண முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள், அவர்களில் ஒரு சிலர் தங்களுடைய ஆத்ம சாதனைகளால் இறைவனைக் கண்டு கொள்கிறார்கள், பூலோகத்தில் அவர்களை சித்தர்கள் என்கிறோம், எட்டு வகையான பெரும் சக்திகள் அஷ்டமா சித்திகள் என்று அழைக்கப்படுகிறது. அவைகளாவன, அனிமா,மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசித்துவம், பிராகாமியம், ஈசத்துவம் என்பன, 
இது பற்றி திருமூலர் பாடல்:

அணிமாதி சித்திகள் ஆவை கூறல்
அணுவின் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாயம் மேவல்
அணுவத் தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே"


அனிமா என்றால் உடலை சுருக்கி சிறிய அணுவைப் போல் மாறுவது, 
மகிமா என்பது மேருமலையைப்போல உருவத்தை பெரியதாக்குவது 
இலகுமா என்பது உருவத்தின் எடையை காற்றைப்போல் இலேசாக்குவது 
கரிமா என்றால் எடையைப் பளுவாக்குவது பிராப்தி என்றால் எல்லாவற்றையும் ஆளுதல் 
வசித்துவம் என்றால் மற்றவர்களை வசப்படுத்தும் தன்மையை பெறுவது 
பிராகாமியம் என்றால் ஒரு உடம்பில் இருக்கும் ஜீவன் வேறு உடம்புக்குள் புகுவது (கூடுவிட்டு கூடு பாய்வது) 
ஈசத்துவம் விரும்பியதை அடைந்து அனுபவிப்பது 

இத்தனை சக்திகளை தமக்குள் கொண்டவர்கள் தங்கள் ஆத்ம சாதனைகளால்அழிவற்ற அமர நிலையை அடைந்தவரகளே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 

ஓம் நமச்சிவாயம் - திருச்சிற்றம்பலம் 
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு 
http://vpoompalani05.blogspot.in/ 
http://vpoompalani05.wordpress.com 
http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக