வெற்றி - பாதை கண்டவர்கள்
வெற்றி பெற்றவர்களெல்லாம் என்ன ..... குணங்களால் சாதனை படைத்தவர்கள் என்று தெரிந்து கொண்டால் நாமும் அதே குணங்களை பின் பற்றலாம், அதே வழி முறைகளை கடைப்பிடிக்கலாம். முதலில் நமக்கு படிக்கும் ஆர்வம், தெரிந்து கொள்ளும் துடிப்பு, அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்று புரிந்து கொள்ளும் கூர்மை வேண்டும். அடுத்ததாக அந்த குணங்களை நாம் நம் வாழ்வில் நமக்கேற்ற சூழ்நிலையில் எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
வெற்றி தரும் குணங்களைப் பற்றிய சிந்தனை - சாதனை புரிந்தவர்களின் தன்மைகளைப் பற்றிய நினைவுகள் - சதா நம் மனதில் இருக்க வேண்டும்.இதைத் தான் விழிப்புணர்வு (Awarness) என்று சொல்வார்கள்.
விழிப்புணர்வுக்கு முக்கியமான ஐந்து குணங்களை - மனோபாவங்களை நாம் குறிப்பிட முடியும். இவைதான் அவரகளது சாதனைகளுக்கு அடிக் கல்லாக இருந்திருக்கின்றன.
1 பெரிய விசயங்களில் ஈடுபாடு
2.மாற்றங்களை பயன்படுத்தும் குணம்
3.தோல்வியை சமாளிக்கும் இயல்பு
4.எது முக்கியம் என்ற தெளிவு
5. வாழ்வில் ஒரு நிறைவு
நமது ஊரில் எத்தனையோ சமயப் பெரியவர்கள் இருக்கிறார்கள், ஆனால் வித்தியாசமான, முதுமையான ஒருவர் ஸ்ரீரங்கம் கோவிலின் கோபுரம் கட்டி முடிக்கப்படாத சூழலில் கையில் காலணா காசு இல்லாமல், ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டுவதென்று தீர்மானித்தார், கட்டியும் முடித்து வெற்றி கண்டார்.
ஒரு லட்சியம், பெரிய லட்சியம், சமுதாயப்பணி, தொலை நோக்கு - இவற்றைத்தான் அங்கே அவரிடம் பார்க்கிறோம். இது போன்று சாதனை படைத்தவர்கள் தான் மகாத்மா காந்தி, கப்பலோட்டிய சிதம்பரம், கன்னியகுமரியில் விவேகானந்தா கேந்திரம் நிறுவிய ஏக்நாத் ரானடே, இவர்களும்,
1, சாதனைகள்
இவர்கள் பெரும்பாலும் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் உயர்வு பெறுவதற்குரிய எண்ணங்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும். தன்னைப்பற்றி பெருமைகளை பின்னுக்கு தள்ளி இவர்கள் செயல்படுவார்கள். இதுதான் இவர்களுக்கு வலிமை தருகிறது. அவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். எடுத்த இலட்சியமும், அதிலுள்ள ஈடுபாடும் அந்த லட்சியத்தின் கனமும்,பெருமையும், இவர்களை உயர்த்தி விடுகிறது. இது தான் லட்சியம் தரும் வலிமை.
2. மாற்றங்கள்.
பலருடைய வாழ்விலும் திட்டமிட்டோ அல்லது எதிர்பாராமலோ மாற்றங்கள் நிகழ்கின்றன. சாதனை புரிந்தவர்கள் இந்த மாற்றங்களை விரும்பி வரவேற்று அவற்றை பயனுள்ளவைகளாக மாற்றி கொள்கிறார்கள் தடைக்கல்லைப் படிக்கல்லாக பயன்படுத்தி உயர்கிறார்கள்.
வாழ்வில் ஏற்படுகிற மாற்றம் பெரிய சோதனையாக சிக்கலாக பெரும் பிரச்சனையாக இருக்கலாம் கவலைப்படாதீர்கள் வெற்றி பெற்றவர்கள் தங்கள் புதிய சூழ்நிலைக் கேற்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். புதிய உறவு முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் மாற்றத்தின் உண்மை நிலவரத்தை புரிந்த கொள்கிறார்கள், குறை சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அல்லது எதையாவது எதிர்பார்த்து காத்திருப்பது இல்லை. மாற்றங்களைக் கண்டு வாழ்வு நியாயமானதல்ல என்று புலம்பாதீர்கள். ஏதோ உலகம் உங்களை மட்டும் தனிப்படுத்தி பழிவாங்குவதாக கற்பனை செய்யாதீர்கள். இது உண்மையல்ல, நல்லதுமல்ல. எதுவும் மோசமான நிலை என்று எண்ணிக்கொண்டே காலத்தை வீணாடிக்காதீர்கள். மகிழ்வுடன் முன்கூட்டியே திட்டமிடுங்கள். மாற்றம் என்பது ஒரு நல்ல வாய்ப்பு.
3. தோல்வி பற்றி அணுகுமுறை
தோல்வி இல்லாத வாழ்க்கையே இல்லை. தோல்வி - ஏமாற்றம்- எல்லாம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் தோல்வியை வெற்றி பெற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் ? அங்கே தான் விசயமிருக்கிறது. வெற்றி பாதை கண்டவர்கள் தாங்கள் தோற்றதாக அதிகம் கருதுவதில்லை. நிகழும் சம்பவங்களை கூட்டி கழித்து, வகுத்து பெருக்கி வெற்றியின் அம்சத்தை அதில் காண்கிறார்கள். நல்ல அனுபவமாக - படிப்பினை எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு மாறானவர்களோ, ஒரு தடை என்றால் எனக்குள் அதிர்ஸ்டம் அவ்வளவுதான் என்று பழியைப் போடுவார்கள். வெற்றி பெற்றவர்களோ, இதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்வார்கள். அற்பமான வேலைக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுப்பான். துன்ப வாழ்க்கை வாழ்வான் அவன் தொடுவது எல்லாம் தோல்வியில் முடியும் என்பார் விவேகானந்தர்.
தோல்வி கண்டு கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. எதையும் சமாளிக்கும் இயல்பு இந்த ஜீவனுக்குள்ளே இருக்கிறது.
இதன் கருத்தினையே கீதா சாரம் உணர்த்துவது :
வெற்றி மற்றும் வெற்றியன்று, தோல்வியும் ஒரு வெற்றியே, அது உங்கள் தலைக்கு கிடைக்கும் மணிமகுடமோ, இதயத்திற்கு கிடைக்கும் மகிழ்ச்சியாகவோ இல்லாவிட்டாலும், அது எதிரியின் பாதையைக் கண்டறியும் கருவியாகும். இது எதிர் மறையான லாபம்-இழப்பு, சூடு-குளிர், வெற்றி- தோல்வி, ஏற்றம்- தாழ்வு போன்ற விளைவுகளை காட்டும், அவ்வப்போது வந்து போகும் நிலையற்ற தன்மையுடையது. இது அனைத்து சூழ்நிலையிலும், சமநிலை இழக்காமல் வாழ- வெற்றி பெற்று மகிழ்வு பெற உதவும் ஒரு மாற்றத்திற்கான வெற்றியே என்கிறது.
4, எது முக்கியம் என்ற கேள்வி:
வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். வசதியான வாழ்வு, தனது குடும்பத்திற்குப் போதுமான பாதுகாப்பு, சாதனைகள் நிறைந்த வாழ்க்கை - இவைதான் முக்கியம், வாழ்வில் ஒரு முதிர்ச்சி, அன்பு காட்டுவதில் ஒரு பக்குவம், தனித்தன்மையோடு சுதந்திரமாக செயல்படுவதில் ஒரு பெருமை, சுயமரியாதை கொண்ட கம்பீரம், இனிமையான வாழ்வு, இவற்றைத்தான் அவர்களிடம் நாம் பார்க்கிறோம். இன்றைய தொழில் நிர்வாகத்தில் உபயோகப்படும் மிக முக்கியமான வார்த்தை " எது முக்கியம் " என்பது தான்
5. வாழ்வில் நிறைவு :
மனதில் அமைதி - நிறைவு - திருப்தி வேண்டும் வெற்றி கண்டவர்கள் கையில் வைத்திருக்கும் உறைகல் எது? தான் நாணயமானவனா? அன்புள்ளளவனா? பொறுப்பு மிக்கவனா? என்று தான் அவர்கள் தங்களை சோதித்துக் கொள்கிறார்கள். இதுதான் அவர்களது வாழ்க்கை விளக்கம்.
வெற்றி பெற்ற பெண்களும் கூட முன்னேற்றத்தில் நிறைவு கண்டவர்களாக இருக்கிறார்கள். நிரந்தர ஓட்டம்,பதற்றம்,அவசரம், இவையெல்லாம் அவர்களிடம் இல்லை. துணிவு, கொண்டவர்களாக, உலக ஞானம் கொண்டவர்களாக, புதிய அனுபவங்களுக்கு தங்களைத் தயார் செய்து கொண்டவர்களா அவர்கள் விளங்குகிறார்கள். ஆணும் சரி, பெண்ணும் சர் அந்தரங்கமான நட்பில் நிறைவு காண்கிறார்கள். ஆரோக்கியமான வழிகளில் உடலைப் பேணுகிறார்கள். தலைமை ஏற்கும் குணத்தை நாடுகிறார்கள். பெண்ணுக்கும் ஆணுக்கும் மன அளவில் வித்தியாசம் இருக்கிறது. அந்தரங்க நட்பில் தங்கள் சுயமுன்னேற்றத்தில் மாறுபட்டு ஆணும், பெண்ணும் நடந்து கொள்கிறார்கள். குடும்ப பெண்ணாக வாழ்ந்து கணவரை முன்னேற்ற சம்பாதித்தும், யோசனை சொல்லியும், உதவும் பெண், ஒரு கால கட்டத்தில் தன்னை உணர்ந்து தனது தனித்தன்மை என்ற முத்திரையைப் பதிக்க, கனவுகளுடன் புதிய பாதையில் இறங்குகிறாள். பாதை கண்டவள் அவள், வெற்றி கண்டவளும் அவளே.
புரிந்து கொண்டு,வாழ்ந்தவர்கள் வாழ்வில் வெற்றியும் காண்பர். இதுவே வெற்றிகண்டவர்கள் பாதை. இதுவே சாதனை ஒரு பாதை.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு: வை.பூமாலை, சுந்தரபாண்டியம்,
நன்றி : எம். எஸ். உதயமூர்த்தியின் " சாதனைக்கு ஒரு பாதை" படித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக